வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/11/18

உண்மையை உலகுக்கு உரை


74
உன்னய்யன் உம்மக்கள் உய்யவே மெய்யறிந்தாய்
பொன்னனையப் பூவே புறப்படு - இன்மொழியில்
மண்பாண்டம் மண்ணாகும் மாமரமும் வித்தாகும்
நுண்மையினை நாடறியச் சொல்.

   பூவின் மென்மையும், பொன்னின் மேன்மையும் கொண்டவனே! உன் தந்தையும் உன்னுலக மக்களும் உயர்வடைய வேண்டியே நீ மெய்யறிவு பெற்றாய். மண்ணால் உருவான பானை உடைந்து மண்ணிலே கலக்கிறது. மிகப் பெரிய மரமும் விதையிலே அடங்குகிறது. இந்த நுட்பத்தை, இனிமையான தமிழ்மொழியில் அனைவரும் அறியுமாறு எடுத்துச் சொல்லப் புறப்படு (என்றான் எமன்).




   ரு சிறந்த ஆசிரியருக்கு ஒரு சிறந்த மாணவர் நன்றிக்கடன் செலுத்துவது எப்படி? தான் பெற்ற அறிவை பிறருக்கு வழங்குவது மட்டுமே, ஒரு மாணவர் தன் ஆசிரியருக்குச் செய்யும் சிறப்பான நன்றியாகும்.

ப்லேடோவிடம் பயின்ற மாணவர்கள் கல்வி முகாம் முடிந்து விடைபெற வந்தார்கள். ஒவ்வொருவராக ப்லேடோவை வணங்கிப் பல வழிகளில் நன்றி சொன்னார்கள். பூச்செண்டு பொன்னாடை பழங்கள் என்று பரிசுகளையும் காணிக்கைகளையும் வழங்கி, கண்ணீர் மல்க விடை பெற்றார்கள்.

ப்லேடோவின் முகத்தில் சலனமே இல்லை. அமைதியாக விடை கொடுத்தார். மாணவர்கள், தங்கள் ஆசிரியர் பிரிவுத் துயரினால் பேச மறுக்கிறார் என்று நினைத்தார்கள்.

சற்று நேரம் பொறுத்து அரிஸ்டாடில் வந்தார். கையில் பரிசோ பூச்செண்டோ பொன்னோ எதுவும் கொண்டு வரவில்லை. ப்லேடோவுக்குப் பொன்னாடை போர்த்தவில்லை. ஒரு சிறு பழம் கூடத் தரவில்லை. தன் ஆசிரியரை வணங்கினார். பிறகு விரிவாக நன்றி சொல்லத் தொடங்கினார். அவர் நன்றி சொல்வதைக் கேட்டப் பிற மாணவர்கள், 'என்ன இது? அரிஸ்டாடில் என்னவோ உளறுகிறாரே!' என்று அதிர்ச்சியில் வெலவெலத்துப் போனார்கள்.

ஆனால் ப்லேடோவோ மெய்சிலிர்த்துக் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த ப்லேடோ, மகிழ்ச்சியில் கூத்தாடத் தொடங்கினார். ப்லேடோவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. தன் மாணவன் என்றும் பாராமல் அரிஸ்டாடிலை வணங்கினார் ப்லேடோ. பிற மாணவர்களுக்கு எதுவும் புரியவில்லை.

அரிஸ்டாடில் விரிவாக நன்றி சொன்னது, ப்லேடோவின் ஆசிரியரான சாக்ரேட்சுக்கு.

தன் மாணவரோடு கல்வி நின்று விடாது தொடர்ந்து பரவ வேண்டும் என்றே ஒவ்வொரு சிறந்த ஆசிரியரும் எதிர்பார்க்கிறார்.

    யா, உங்களிடம் ஒன்று கேட்கலாமா? என்றான் நசிகேதன்.

"கேள்.. இன்னும் ஏதாகிலும் ஐயமுள்ளதா?" என்றான் எமன்.

"என்னை எதற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக்கு மெய்யறிவு பெறும் தகுதியுள்ளதா? எனக்கு இத்தகைய மெய்யறிவை வழங்கிய உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய இயலும்?"

எமன் சிரித்தான். "நசிகேதா.. அறிவு என்பது அற்புதமான பொக்கிஷம். அனைவரும் பெறக்கூடியப் பொக்கிஷம் என்றாலும், ஒரு சிலரே தேடிப் பெறுகிறார்கள். அனைவரும் பெற வேண்டிய அறிவை ஒரு சிலரே பெற்றால்... அறிவைப் பெற்றவர்களுக்கு அதுவே பாரமாகி விடுகிறது. நான் சொல்வது புரிகிறதா?"

"நன்றாகப் புரிந்தது. பரவலாகப் பயன் தர வேண்டிய செல்வத்தை முடக்கிப் போட்ட உணர்வு"

"ஆம். புறம் சார்ந்த சாதாரண அறிவே அப்படி என்றால், அகம் சார்ந்த தன்னறிவு பெற்றவர்களின் நிலை என்ன?"

"தான் பெற்ற செல்வம் பிறரும் பெற வேண்டும் என்றே விரும்புவார்கள்"

"மிகச்சரி. நசிகேதா, நீ அப்படிப்பட்டவன். உன் தந்தையின் வேள்வியில் தானப் பசுக்களைப் பற்றியும், தானம் பெற வந்தவர்களைப் பற்றியும், உன் தந்தையின் சுயநலம் தொட்டப் பாசாங்குத் தானங்களையும் பற்றியும், பசும்பிள்ளையான உன் மனதில் ஓடிய எண்ணங்களைப் படித்தேன். உன் விவேகம் என்னை வியக்க வைத்தது.

அதன் பிறகு என் இல்லத்தில் உன்னைச் சோதித்தேன். நீ கேட்ட வரத்திலும் கேட்ட விதத்திலும் உன் மன உறுதி எனக்குப் புரிந்தது. பூவைப் போன்ற மென்மையான மனமுடையவன் நீ என்று வேள்வியின் போது பிறருக்காக இரங்கியதில் அறிந்து கொண்டேன். உன் மன உறுதியும் அறிவின் மேன்மையும் பொன்னை விடச் சிறந்தது என்பதை உன் நேடலில் அறிந்தேன். நான் பெற்ற அறிவை உனக்கு வழங்குவதால் என் அறிவுக்குப் பெருமை என்று உணர்ந்தேன். உன் வழியாக இந்த மெய்யறிவு உன்னுலகத்தோர் பெறட்டும் என்று எண்ணினேன்."

"மிகவும் நன்றி" என்றான் நசிகேதன்.

எமன் தொடர்ந்தான். "மண் மட்டுமே நிஜம். பானையல்ல. பானையாகப் பார்த்தால் மண் தெரிவதில்லை. மண்ணாகப் பார்த்தால் பானையும் தெரியும் மண்ணும் தெரியும். விதையாகப் பார்த்தால் விதையும் புரியும் மரமும் புரியும் அல்லவா? பேரான்மாவிலிருந்து பிரிந்த உயிர், உடலாகவும் உயிராகவும் விளங்கினாலும் அது பேரான்மாவே.

இதைப் புரிந்தவர்கள் மனதில் கலக்கமே இருப்பதில்லை. கண்மூடித்தன எண்ணங்கள் ஓடுவதில்லை. சலனங்கள் பாதிப்பதில்லை. கிளை, இலை, மலர், கனி என்பவை நிலைகள் - நிலையற்ற நிலைகள் - என்ற உணர்வு அவர்கள் மனதில் பரவுகிறது. நிலை மாற்றங்களினால் பாதிக்கப்படாமல், அமைதியுடன் நன்னெறியைப் பற்றி வாழ்கிறார்கள். பிறப்பைப் பற்றியும் இறப்பைப் பற்றியும் எந்த விதக் கவலையும் இருப்பதில்லை. சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் போன்றவற்றைப் பொருட்படுத்துவதில்லை. இருமைகளின் உள்ளே ஒருமையும், ஒருமையின் உள்ளே பன்மையும் இருப்பதை உணர்ந்து சிறப்பாக வாழ்கிறார்கள்.

நீ அறிந்து கொண்ட இந்த உண்மையை உன் உலகத்தாரும் அறிய வேண்டும். உன் தந்தையும் உன் மக்களும் உன்னால் உயர்வடைய வேண்டும்.

இனி நீ செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. உயிர்ப்பயண நுட்பத்தை, இனியத் தமிழ்மொழியில் உலகத்துக்கு எடுத்து உரைப்பதே இனி நீ முடிக்க வேண்டிய செயலாகும். புறப்படு, என் அருமை மாணவனே!" என்றான் எமன்.

நசிகேதன் மீண்டும் எமனுக்கு நன்றி சொன்னான்.

நன்றியை ஏற்றுக் கொண்ட எமன், "நசிகேதா, உன் ஆர்வத்தையும் உழைப்பையும் மெச்சினேன். உன் உயர்ந்த நோக்கத்தையும் அறிவேன். உன் விருப்பம் போல உம்மக்கள் உயர்வடைய, இன்னொரு வரமும் வழங்குகிறேன்" என்றான்.

5 கருத்துகள்:

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே ! "singular will become plural and plural will become singular"என்று மார்க்ஸ் கூறியுள்ளார்.மெலும் "negation of negation" மறுப்பின் மறுப்பு என்று இயற்கையின் விதிகளை பற்றி குறிப்பிடுவார்.மொட்டு தன்னை மறுத்து மலராகிறது. மலர் தன்னை மறுத்து காயாகிறது.காய் தன்னை மறுத்து கனியாகிறது.கனிதன்னை மறுத்து விதையாகிறது.விதை தன்னை மறுத்து துளிர் ஆகிறது .துளிர் செடியாக செடி மொட்டாக அந்த சுழற்சி தொடர்கிறது..அதே போன்று thesis. antithesis, synthesis என்று இயற்கையின் வளர்ச்சி பற்றி குறிப்பிடுவார் .தர்க்கவியல் பொருள்முதல் வாதம் "dialitical meterialism"என்பது ஒரு பெரும் கடல்.---காஸ்யபன்

அப்பாதுரை சொன்னது…

வருக kashyapan சார்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மார்க்ஸ் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. 'தன்னை மறுத்து' என்பது இங்கே முக்கியமென்று படுகிறது.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

நல்ல, பயனுள்ள பதிவு. சிறந்த ஆசிரியருக்கு ஒரு சிறந்த மாணவனின் நன்றிகடன் பற்றிய விளக்கம் மிகவும் அருமை.

//பானையாகப் பார்த்தால் மண் தெரிவதில்லை. மண்ணாகப் பார்த்தால் பானையும் தெரியும் மண்ணும் தெரியும்.//
நம் கண்ணோட்டதிற்கு ஏற்பதான் நம் வாழ்கை அமைகிறது. பிறகு இது சரியில்லை, அது சரியில்லை என்று வாழ்கையை குற்றம் சொல்லவதில் ஒரு
அர்த்தமும் இல்லை, இல்லையா!?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கிளை, இலை, மலர், கனி என்பவை நிலைகள் - நிலையற்ற நிலைகள் - என்ற உணர்வு அவர்கள் மனதில் பரவுகிறது. நிலை மாற்றங்களினால் பாதிக்கப்படாமல், அமைதியுடன் நன்னெறியைப் பற்றி வாழ்கிறார்கள். பிறப்பைப் பற்றியும் இறப்பைப் பற்றியும் எந்த விதக் கவலையும் இருப்பதில்லை. சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் போன்றவற்றைப் பொருட்படுத்துவதில்லை. இருமைகளின் உள்ளே ஒருமையையும், ஒருமையின் உள்ளே பன்மையும் இருப்பதை உணர்ந்து சிறப்பாக வாழ்கிறார்கள்./

சிந்திக்கத்தூண்டும் அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்..

அப்பாதுரை சொன்னது…

நன்றி மீனாக்ஷி, இராஜராஜேஸ்வரி.