வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/11/12

ஓருடலில் அறுவருண்டு


73
ஒருவர் ஒருநூறு என்றுரைப்பேன் என்னுள்
கருமுதல் ஆறுவரைக் கண்டேன் - உருவானச்
சேற்றைக் கணக்கிடப்போம் சேர்ந்திடும் பேரான்மக்
காற்றுக்கு ஏது கணக்கு?

   டல் என்பது சேற்றினாலான பானை போன்றது. உள்சேர்ந்த பேரான்மாவோ காற்றைப் போன்றது. பானைகளைக் கணக்கிடலாம், அவை கட்டியக் காற்றைக் கணக்கிடக் கூடுமோ? (எனினும்) அனைத்துமே பேரான்மா என்பதால் உடலில் தோன்றி மறைவது ஒருவர் எனலாம், ஒருநூறு என்றும் கூறலாம். தோன்றி மறையும் ஆறுபேர் என்னில் உண்டென்பதை நிச்சயம் அறிவேன் (என்றான் நசிகேதன்).



    ந்தக் கேள்விக்கும் நேர்விடை அளிக்காமல், சரியான விடையளித்தது போன்றத் தோற்றத்தை உண்டாக்குவது ஒரு கலை. 'mba answer' என்பார்கள்.

'mba answer' என்றால் என்ன தெரியுமா? 'it depends' என்பதே!
       : நீங்கள் சொல்வதையெல்லாம் செய்தால் என் வியாபாரம் முன்னேறுமா?
       : it depends! பொருட்களின் தரம், விலை, மக்களின் விருப்பம், வியாபாரத்தில் போட்டி இவை எல்லாவற்றையும் பொறுத்தது
       : அது தெரியும்.. இருந்தாலும் உங்கள் பரிந்துரைகளை நீங்கள் சொன்னபடி செய்தால் என் வியாபாரம் முன்னேறுமா?
       : it depends! நாமறியாத வேறு காரணங்களையும் பொறுத்தது
       : அது எனக்குத் தெரியாதா? நாமறியாத காரணங்கள் யாவை?
       : it depends! அறியாதவை என்பது தொழில்நுட்பம், வளர்ச்சி, அரசாங்கக் கொள்கைகள், தடங்கல்கள் இவற்றைப் பொறுத்தது
       : அது தெரிந்து தானே உங்களை இத்தனை பணம் கொடுத்து வேலைக்கு வைத்தேன்? எல்லாமே இதைப் பொறுத்தது அதைப் பொறுத்தது என்றால் இந்தப் பரிந்துரைகளினால் என்ன பலன்?
       : it depends!


நமக்குத் தெரிந்ததைச் செய்தியாகவும் தந்திரமாகவும் நமக்கே பரிந்துரை செய்து, நம்மிடமே பணம் வசூலிப்போர் இருக்கிறார்களே, அற்புதமான கலைஞர்கள்! mba, வக்கீல், மதவாதி, அரசியல்வாதி... இவர்களை இந்தக் கலையின் விற்பன்னர்கள் எனலாம். இவர்களில் யார் மோசமானவர்கள்? it depends! அப்படியெனில், mbaக்களையும் வக்கீல்களையும் நம்பக்கூடாதா? it depends!

   இந்தியா திரும்பிய பதினைந்து வருடங்களுக்குள் பெரும் புரட்சியை உருவாக்கிய மகாத்மா காந்திக்கு, அமெரிக்க டைம் வார இதழ் '1930ம் வருடத்தியச் சாதனையாளர்' பட்டத்தை வழங்கிக் கௌரவம் தேடிக்கொண்டது. பிரிடிஷ் அரசு அவரை கௌரவிக்க விரும்பி இங்கிலாந்து வர அழைப்பு விடுத்தது.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றைத் துவக்கிப் பெரும் மதிப்பைத் தேடிக்கொண்டக் கதர் வேட்டியைக் காண பிரிடிஷ் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினார்களாம். 'ஆட்டுப்பாலும் வேர்கடலையும் தின்று ராட்டை சுற்றும் பொக்கைவாயனா நம் அரசை எதிர்க்கிறார்' என்று அவர்களுக்கு ஆச்சரியம். ஏதோ பஞ்சைப் பராரி என்று எண்ணிய பொதுமக்களுடன், பிரிடிஷ் பத்திரிகையாளர்களும் சமூகப் பிரமுகர்களும் கூடியிருந்தனராம்.

ஒரு பிரமுகர் காந்தியைக் கேட்டாராம்: "மேற்கத்திய நாகரீகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"நல்ல யோசனை என்று நினைக்கிறேன்" என்றாராம் காந்தி.

கூட்டத்தில் நரம்பு ஒடுங்கியது போல் அமைதி. காந்தியின் நான்கு சொற்களில் அணுகுண்டின் தாக்கம் இருந்ததைப் புரிந்து கொண்ட கூட்டம், அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் தவித்ததாம். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று கண்ணாடிப் பார்வையுடன் இதைப் பற்றி விரிவாக எழுதியதாம். 'கேள்விக்கு புது வடிவம் கொடுத்த காந்தி' என்று அவரைப் பற்றி எழுதி, 'மேற்கத்தியோர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, தாம் நாகரீகமானவர்கள் தானா என்பதே' என முடித்ததாம்.

   திரையுலகில் ஆசானாக மதிக்கப்படும் கே.பாலசந்தர் சொன்னதாக, என்றோ படித்த நினைவு. இன்றைக்குத் திரைப்புகழின் உச்சத்தில் இருப்பவர்கள், அன்றைக்கு பாலசந்தர் பள்ளியின் கற்றுக்குட்டி மாணவர்கள். காட்சியை விளக்கி நடிக்கச் சொல்வாராம். இரண்டு மாணவர்களும் திணறுவார்களாம். எத்தனையோ ஒத்திகைகளுக்குப் பிறகு, கிடைத்தது போதும் என்றுக் காட்சியைப் படம் பிடிப்பாராம்.

பாலசந்தர், இன்னொரு நடிகருக்கும் ஆசான். மறைந்தக் கலைமாமணி நாகேஷ். ஒரு காட்சியை விளக்கிச் சொன்னதும் அதை மூன்று நான்கு விதங்களில் நடித்துக் காட்டி, 'பாலு, உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை வச்சுக்குவோம்' என்பாராம் நாகேஷ். 'யார், யாருக்கு ஆசான்?' என்று புரியாமல் வியந்து, எதை எடுப்பது எதை விடுவது என்று தவிப்பாராம் பாலசந்தர்.

   எந்தக் கேள்விக்கும், விளக்கெண்ணை கலந்த வெண்டைக்காய் சேப்பங்கிழங்குக் கூழில் ஊறிய வாழைப்பழத் தோலாக விடையளிப்போர் ஒரு வகையினர்; ஒரு விடைக்கு நான்கு விடைகளாக வழங்கி, கேட்டவரைத் திணற அடிப்போர் இன்னொரு வகையினர்; கேட்டவரே தன் கேள்வியை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் நுட்பமும் தெளிவும் ஒருங்கே அமைந்த விடையளிப்போர் மற்றொரு வகையினர்.

எந்த வகையிலும் அடங்கித் தனிப்படாமல், அதே நேரம் தேவைப்படும் பொழுது மிகத் தெளிவாக நடந்து, இம்மூன்று வகையிலும் தேவைக்கேற்பப் புகுந்து வெளிப்படுவோர், பொதுவாக வாழ்க்கையில் மிகுந்த வெற்றியை அடைகிறார்கள். குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் இதைக் கவனத்தில் கொள்வோர், சச்சரவு சிக்கல்களினின்று சுலபமாக விலகி, நம்பிக்கையின் சின்னமாக நடந்து கொள்கிறார்கள். தனக்கும் பிறருக்கும் அமைதியையும் நிறைவையும் தருகிறார்கள்.

    சிகேதன் சிந்தித்தான். என்ன இப்படிக் கேட்கிறாரே ஆசான்? சிறப்பான பதிலைச் சொல் என்கிறாரே? இருப்பது ஒரே ஒரு பதில் தானே? எமன் கேட்ட கேள்வியை மீண்டும் மனதுள் நிறுத்திப் பார்த்தான். உன்னில் பிறப்பவரும் பின்னர் இறப்பவரும் யாவர்? உனக்குள் பிறவி எடுப்பவரும் பிறகு இறந்து போகின்றவரும் யார்? எத்தனை பேர்? மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைப் பலவாறு சிந்தித்தான்.

மெல்லக் கனைத்து, "ஐயா.. உங்கள் கேள்வி அன்னையின் அன்பைப் போன்றது" என்றான்.

எமன் சிந்தித்தான். அன்னையின் அன்பைப் போலவே தன்னுடைய கேள்வியும் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை மறைமுகமாகச் சொல்கிறானா என் மாணவன்? "நசிகேதா, ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்றான்.

"ஐயா.. அன்னையின் அன்பு வற்றாதது. எந்த நிலையிலும் தாயிடம் அன்பு சுரந்து கொண்டே இருக்கிறது. அது போல உங்கள் கேள்வி என் சிந்தனைத் திறனைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது" என்றான்.

எமன் மகிழ்ந்தான். "அன்னையின் அன்பு, என் கேள்வித்திறனை விடப் பல மடங்கு உயர்ந்தது. என் கேள்விக்கு எல்லையும் பதிலும் உண்டு. அன்னையின் அன்புக்கு எல்லையோ பதிலோ இல்லை" என்றான். "இருப்பினும் நன்றி".

நசிகேதன் எமனை வணங்கினான். தொடர்ந்துச் சிந்தித்தான். நசிகேதன் சிந்திப்பதைக் கண்டு, "என் கேள்விக்கு பதில் தெரியவில்லையா?" என்றான் எமன்.

"சிறு குழப்பம்" என்றான் நசிகேதன்.

"என்ன குழப்பம்?"

"ஒரு பதிலைச் சொல்வதா? ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைச் சொல்லி உங்கள் தேர்வுத் திறனைச் சோதிப்பதா? அதில்தான் குழப்பம்"

"ஆகா!" என்றான் எமன். "சொல், நசிகேதா. என் கேள்விக்கென்ன பதில்? அத்தனையும் சொல், என் அன்புக்குரியவனே!"

"அனைத்துமே பேரான்மா என்பதை மிகத் தெளிவாக விளக்கினீர்கள். பிறவாது, மட்கி மறையாது, பண்டம் துறந்தும் தளிரும் முகுலம் என்றீர்கள். சட்டியும் பானையும் சுட்டாலும் பட்டாலும் கட்டுமோ கொட்டுமோ காற்று எனக் கேட்டதும் நீங்களே. மன்னுயிர் பாடுபட்டுப் பாவுமிடம் பேரான்மா, வேறில்லை கூடுவிட்டுக் கூடுமிடம் என்று அருமையாக விளக்கியதும் தாங்களே. எனில் உயிர்கள் பிரிவதும் கூடுவதும் பேரான்மாவில் தான் என்பது தெளிவாகிறது. எல்லாமே பேரான்மா எனில் பிறப்பவர் இறப்பவர் எத்தனை என்ற கேள்விக்கு நான் விடை சொன்னால் உங்கள் பாடங்களை முரணாகப் புரிந்து கொண்டவன் ஆவேனே?

எத்தனை பேரான்மாக்களின் அம்சம் என்பதை எப்படிக் கணக்கிடுவது? கட்டுமோ கொட்டுமோ காற்று என்று நீங்கள் சொன்னது போல, காற்றைக் கட்டி வைக்க முயன்றுக் கட்டிய சேற்றை வேண்டுமானால் கணக்கிடலாம். இத்தனை பானைகள் குயந்தேன் எனலாம். பத்து பானைகள் குயந்தேன் என்று சொன்னால் அதற்குள் பத்து காற்றுகள் வைத்திருக்கிறேன் என்று பொருளாகுமா? ஒவ்வொரு பானையும் வேறு என்றாலும், ஒவ்வொரு காற்றும் வேறாகுமோ?

அனைத்துமே பேரான்மா என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. சிற்றலை பேரலையிற் சேரும், சிதறினால் ஒற்றியே நீராய் ஒடுங்கும் என்று நீங்கள் சொன்னது போல பேரான்மாவில் கலக்க முயன்று தோற்ற ஆன்மாக்கள், பிறக்கின்றன. ஏழாவது பானையின் நிலையைப் பற்றிச் சொன்னீர்கள். பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன என்பதைப் புரிந்துகொண்டேன். ஆக, பேரான்மாவிலிருந்தே பிறவியும் மரணமும் ஏற்படுகின்றன.

எனில், பேரான்மா என்பது ஒரு பெருஞ்சக்தி என்றால், என்னுள் பிறப்பவரும் இறப்பவரும் ஒருவரே.

ஆனால் பேரான்மா என்பது சிற்றலை பேரலைகளின் கூட்டெனும் பொழுது, இன்னொரு பதிலும் தோன்றியது. அனைத்தும் பேரான்மாவின் அம்சங்கள் என்பதே.

உயிர்கள் அனைத்தும் பேரான்மாவைச் சேருகின்றன. ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான சிற்றலைகள் தொடர்ந்து பேரலையாகவோ ஒடுங்கியோ அமைகின்றன. அந்நிலையில் என்னுள் பிறந்து இறப்பவர்கள் பேரான்மாவின் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான அம்சமானவர்கள் எனலாம்" என்றான் நசிகேதன்.

"மிகச் சரியாகச் சொன்னாய் நசிகேதா" என்றான் எமன். நசிகேதன் மேலும் ஏதோ சொல்ல விழைகிறான் என்பதைப் புரிந்துகொண்ட எமன், ஆவலோடு அமைதி காத்தான்.

நசிகேதன் தொடர்ந்தான். "எதற்காக இப்படியொரு கேள்வி கேட்டீர்கள் எனச் சிந்தித்தேன். மாணவனைச் சோதிப்பது ஆசிரியரின் கடமையென்றாலும், இப்படியொரு கேள்வியை ஏன் கேட்டீர்கள் எனச் சிந்தித்தேன்"

"சொல்"

"நான் உங்களிடம் கேட்ட மூன்று வரங்களில், மூன்றாவது வரம் மெய்யறிவு பற்றியது. எத்தனை பேர் பிறந்து இறக்கிறார்கள் என்றக் கணக்கைப் பற்றியதல்ல. மரணத்துக்கு அஞ்சி, சொர்க்க நரகங்களை நம்பி, பெரும் கண்மூடித்தனங்களைச் செய்யத் துணியும் மனிதத்தை மனதில் வைத்துக் கேட்ட வரம். உயிர்ப்பயணம் பற்றிய கேள்வி"

"நன்றாக நினைவிருக்கிறது. உயிரது புள்ளாய்ப் பறந்த பின்னும் உள்ளார் இலாரென்றுப் பல்லார் சொல்வானேன் என்று கேட்டாய்! எத்தனை அருமையான கேள்வி! சாதலின் நுண்மையே தெள்ளிய மூதறிவென மூன்றாம் வரந்தருவீர் என்றாய். உன் வயதுக்கு மீறிய வரத்தைக் கேட்டாய். உன் கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொன்னேனா? நீ நேடிய வரமும் கிடைத்தது அல்லவா?"

"கிடைத்தது ஆசானே, மிகவும் நன்றி. நான் கேட்ட மூன்றாம் வரத்தை மீண்டும் எண்ணியவுடன் உங்கள் கேள்வி மிக நன்றாகப் புரிந்தது. மரணத்தை, உயிர்ப்பயணத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டேனா என்பதைச் சோதிக்கவே அப்படியொரு கேள்வியைக் கேட்டீர்கள் என்பது புரிந்தது"

எமனுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. "அற்புதம்! அற்புதம்! உனக்கு அறிவுண்டு என்பதில் ஐயமேயில்லை. உன் அறிவின் நுண்மையை நுகரவே அப்படி ஒரு கேள்வி கேட்டேன்" என்றான்.

"உங்கள் வாழ்த்தும் நல்லெண்ணமுமே என்னுடைய சிறப்பு" என்ற நசிகேதன் தொடர்ந்தான். "உயிர்ப்பயணம் என்பது கூட்டை விட்டுப் பிரிவது மட்டுமல்ல. கூட்டுக்குள்ளும் உயிர்ப்பயணம் உண்டு. அதைப் பற்றி மனிதம் கவலைப்படுவதில்லை. கூட்டுக்குள் நடக்கும் உயிர்ப்பயணம், கூட்டுக்கு வெளியே நடக்கும் உயிர்ப்பயணத்தைப் புரிந்து கொள்ள ஒரு கருவி என்பதை மனிதம் அறியவில்லை. கூடு பிரியும் உயிர்ப்பயணம் என்பது இயற்கை, தன்னிச்சை என்பதை மனிதம் புரிந்து கொள்ளவே கூட்டுக்குள்ளும் உயிர்ப்பயணம் நடக்கிறது.

மனிதம் என்ற வகையில் எனக்குள்ளும், ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் நடைபெறும் உயிர்ப்பயணத்தைச் சிந்தித்தேன். கரு, பிள்ளை, கிள்ளை, வாலிபன், முதியவன், மூத்தவன் என்ற ஆறு பேர் என்னுள் இருப்பதை அறிவேன். ஆறுவரும் ஓருடலில் இருந்தாலும், தனித்தனி இயல்பும் வாழ்வும் கொண்டவர்கள். அந்த வகையில் உயிரானது கருமுதல் மரணம் வரைப் பயணம் செய்கிறது. அவையும் பிறப்பிறப்புக்களே. கருவிலிருக்கையில் என்ன நடந்தது என்பதைப் பிறந்ததும் அறிய முடியாது. பிறந்த குழந்தை மெள்ள வளர்ந்துக் கிள்ளையாகிறது. எனினும் பிள்ளை வேறு, கிள்ளை வேறு. தொடர்ந்து வாலிபம், முதுமை, மூப்பு என்ற பயணம். பிள்ளையாக இருந்த மனிதன் வேறு, வாலிபனாக வாழும் மனிதன் வேறு. முற்றிலும் மாறுபட்டவர்கள். ஆக, கருவிலிருந்து மூப்பு வரை ஆறு விதப் பிறவிகளும் ஆறுவித மரணங்களும் ஒரு கூட்டுக்குள்ளேயே நடக்கின்றன. கருவிலிருந்து கிள்ளையாவதைக் கண்டு அஞ்சுவதில்லை. பிள்ளையிலிருந்து வாலிபமடைவதைக் கண்டு அஞ்சுவதில்லை. முதுமையிலிருந்து மூப்பையும் இயற்கையெனவே அமைகிறோம். இந்தப் பிறவிகள் அத்தனையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் பின்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், நிலை கடப்பது மரணத்துக்கு ஒப்பானதே. எனினும் நாம் வருந்துவதில்லை.

ஆனால் கூட்டை விட்டுப் பிரியும் உயிர்ப்பயணத்தை மட்டும் மனிதராகிய நாங்கள் அஞ்சி நடுங்குகிறோம். தேவையற்ற நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுகிறோம். இது எத்தகைய பேதமை என்பதைப் புரிந்து கொண்டேன்.

இந்த ஆறுவரின் ஒரே தொடர்பு, நினைவு. பேரான்மா என்பது கூட்டை விட்ட ஆன்மாக்களின் கூட்டு என்பதைப் போல, ஆன்மா என்பது கூட்டுக்குள் இருக்கும் நினைவுகளின் கூட்டு எனலாம். சிற்றலைகளை போலவே பல நினைவுகள் ஒடுங்கிவிடுகின்றன. இந்த நினைவுகள் நன்னெறி தொட்ட நினைவுகளாகும் பொழுது வருத்தமே ஏற்படுவதில்லை. அச்சமே ஏற்படுவதில்லை. இந்த ஆறு நிலைகளிலும் தொடர்ந்து வந்து உதவும் நன்னெறி நினைவுகளே தன்னறிவு. அதனால் தன்னறிவு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினீர்கள்" என்றான்.

எமன் மிகவும் மகிழ்ந்தான். "நசிகேதா! உன் விடைகள் ஒவ்வொன்றும் அருமை. என் கேள்வியை மதித்து, தெளிவான நுட்பமான பதிலளித்த உன்னைப் பாராட்டுகிறேன். உன் அறிவைச் சோதிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்!" என்று நெகிழ்ந்தான். "இனி நீ செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே" என்றான்.

19 கருத்துகள்:

middleclassmadhavi சொன்னது…

சரியாகத் தான் சொல்லியிருக்கீங்க! நசிகேதன் கதையைப் படித்திருக்கிறேனே தவிர இவ்வளவு ஆழமான விளக்கத்தை இப்போது தான் படிக்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி!

//விளக்கெண்ணை கலந்த வெண்டைக்காய் சேப்பங்கிழங்குக் கூழில் ஊறிய வாழைப்பழத் தோலாக விடையளிப்போர் ஒரு வகையினர// சூப்பர் வழுக்கல்!!

அப்பாதுரை சொன்னது…

நன்றி middleclassmadhavi.

சிவகுமாரன் சொன்னது…

முதலில் அந்த ஈற்றடி .
காற்றுக்கு உண்டோ கரை- என்ற ஈற்றடியில் எபோதோ ஒரு வெண்பா எழுதியது நினைவுக்கு வந்தது. (பரணில் தேட வேண்டும்)

சிவகுமாரன் சொன்னது…

காந்தி உண்மையில் எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார்?
என் மர மண்டைக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்

சிவகுமாரன் சொன்னது…

நாகேஷ் தி கிரேட். சார்லி சாப்ளினுக்கு நிகரானவர் என்பேன்.
சிறு வயதில் நான் கெச்சலாக இருந்ததால் என்னை நாகேஷ் என்று பக்கத்து வீட்டு பாட்டி கிண்டல் செய்வார். எனக்கு அப்போது அழுகையாய் வரும்.
இப்போது பெருமையாய் இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

வெண்பா இனிமை! உங்கள் விளக்கம் பிரமாதம். தெளிவாக புரிந்தது. கரு முதல் மூப்பு வரை உள்ள நிலையை எல்லோருமே காண்பதில்லையே. இது எதனால்? இந்த நூலில் இதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கிறதா?
இந்த கேள்வியை கேட்க கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. கேள்வி அபத்தமாக இருக்குமோ என்ற அச்சத்தினால்தான்.

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே1மிகவும் உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்."கூட்டிற்குள்ளும் கூட்டிற்கு வெளியேயும் " என்ற விளக்கம் அருமை. வெளியே என்று வரும்பொது அஞ்சுகிறோம் .அத்துணையும் நம் மனம் எண்ணுவது என்றாகும் பொது ஆச்சரியமாக இருக்கிறது ."மனம் என்பது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம்( Mind is nothing but the chemical reaction in brain) என்ற கூற்றை நினைக்கும் போது இயற்கையின் சிருஷ்டியை பிரமிப்போடு பார்க்கவே முடிகிறது.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

அப்பாதுரை சொன்னது…

நன்றி சிவகுமாரன்.
வெண்பாவைத் தேடிப்பிடிங்க முதலில்.

காந்தி எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதைப் பற்றி என் கருத்து இது. அதற்கு முன், அன்றைய காலகட்டம் பற்றிச் சிலவரிகள். முதல் உலகப் போர் முடிந்து, இரண்டாம் உலகப்போருக்கான அறிகுறிகள் வலுவான நேரம். மேற்கத்திய நாடு என்று சொல்லப்பட்ட இடலி, ஜெர்மனி நாடுகளில் நிறைய மனிதநேயம் மறந்த அட்டூழியங்கள் நடக்கத் தொடங்கிய நேரம். பொதுவாகவே கீழை நாடுகளைச் சூறையாடிப் பொருள் சேர்த்த இங்கிலாந்தின் அரசு. ஒரு அரசைப் பிடிக்கவில்லையா - அடி உதை சுடு கொல் என்ற முறைகளைக் கையாண்ட மேற்கத்திய நாகரீகம். இந்நிலையில் உண்ணாவிரதம், உப்புச்சத்தியாகிரகம், ராட்டை என்று எளிமையினும் எளிமையாக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத "ஆயுதங்களை" வைத்து இருநூறு வருட அரசாங்கத்தை அசைத்துப் போட்ட காந்தி.

இந்தப் பின்னணியில் நடந்த உரையாடல். ஆங்கிலத்திலேயே எழுதி விடுகிறேன்:
: mr.gandhi, what do you think of western civilization?
: i think it is a good idea!

கேட்டவர் எண்ணியது புரிகிறது. "ஐயா கதர் வேட்டி.. இத்தனை அழகாகவும் சீராகவும் இருக்கும் இங்கிலாந்து - மேற்கத்திய நாகரீகத்தின் ராணி - இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?". அதாவது, மிகவும் பின்தங்கிய இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அரை naked மனிதர் இங்கிலாந்தைப் பார்த்து பிரமித்துப் போயிருப்பார் என்ற எண்ணத்தை வெளிக்கொணர விரும்பிய கேள்வி. பாதி ignorance பாதி arrogance.

பதில் சொல்ல வேண்டியவர் எண்ணியதும் ஓரளவுக்குப் புரிகிறது. "நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சோணங்கி போல கேள்வி கேட்டிருக்கிறான். இன்னொரு நாட்டின் வளத்தைச் சூறையாடி தன்னை மேம்படுத்திக் கொள்ளும் கூட்டத்தை எப்படி விழிக்கச் செய்வது?" அதாவது, காந்தியின் மனதில் மேற்கத்தியர் அனைவருமே மனித நேயத்தை அதிகமாக மதிக்காதவர்கள் என்பதை உணர்த்த வேண்டிய அவசியம் ஓடியிருக்க வேண்டும். அதை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாது. வசதியாக வாய்த்த கேள்விக்கு பொருத்தமான பதில். பாதி mischief பாதி brilliance.

ஒரு நல்ல செயலுக்கான அனுமதியைப் போல் அமைந்தது காந்தியின் பதில். இது என் கருத்து. காந்தி சொன்னது இருக்கட்டும். சொல்லாதது என்ன? "நாலு வருடத்துக்கொரு முறை போர், மற்ற நாடுகளைச் சூறையாடுவது, ஏழை நாடுகளை ஏமாற்றுவது.. என்ற கொள்கைகளில் குளிர் காய்கிறீர்களே... உங்கள் மேற்கத்திய நாகரீகத்தைப் பற்றி கேட்பதற்கு உங்களுக்கே வெட்கமாக இல்லை? என்னய்யா நாகரீகம் இருக்கிற்தென்று கேள்வி கேட்கிறீர்கள்?"

தமிழ்நாட்டுப் புலவனாக இருந்தால் மீசையை முறுக்கி கண் சிவக்க "யாரிடம் கேட்கிறாயடா நாகரீகம்?" என்று ஏதாவது பாடியிருப்பார். குஜராத்தி வக்கீல் அல்லவா? நறுக் நறுக்.

அப்பாதுரை சொன்னது…

நன்றி மீனாக்ஷி. கரு முதல் மூப்பு வரை நாம் கண்டு கொள்ளாததன் காரணம் அந்நிலைகளை பிறப்பு இறப்பு என்ற கண்ணோட்டத்தில் காண வேண்டிய அவசியம் இல்லாததால் - என்று நினைக்கிறேன். separationல் இருக்கும் தீவிரம் transitionல் என்றைக்குமே தெரிவதில்லை. கடோவில் இதைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. இந்தப் பாடல் நான் சேர்த்தது. (ராமசுப்ரமணியன் சொல்வார் - பொறுங்கள் :)

கடோவில் இல்லை என்றாலும் இந்தத் தத்துவம் ஒன்றும் புதிதில்லை. ஆதி சங்கரரிலிருந்து நிறைய பேர் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

அப்பாதுரை சொன்னது…

kashyapan சார், மிகவும் நன்றி.
நீங்கள் சொல்வது மிகச் சரி. (electrical) energy, (chemical) reaction இவற்றை வைத்து உயிர் மனம் இரண்டையும் விளக்க முடியும் என்று நம்புகிறேன். இன்னும் சில நூறு வருடங்களில் இது சாதாரண physics பாடமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

geetha santhanam சொன்னது…

பல நேரங்களில் இடைசெருகல்கள் மிகச்சிறப்பாக இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பாடலும் ஒன்று.
காந்திஜியின் பதிலில் இருந்த சுருக் இன்னமும் புரியவில்லை (அந்த பதிலில் இந்த விளக்கம் எப்படி பிடித்தீர்கள்?)

சிவகுமாரன் சொன்னது…

ஏதோ புரிந்த மாதிரி தெரிகிறது .
Thanks.

அப்பாதுரை சொன்னது…

geetha santhanam.. சிவகுமாரன் கேட்ட கேள்விக்கு எனக்கு தெரிந்த விடையை நேராகவே சொல்லியிருக்க வேண்டும் :)
மேற்கத்தியருக்கு நாகரீகம் கிடையாது (uncivilized) என்ற பொருளில் காந்தி அப்படிச் சொன்னார்.

சிவகுமாரன் சொன்னது…

"அப்பா"டா -- புரிஞ்சு போச்சு

ஸ்ரீராம். சொன்னது…

நழுவும் பதில்கள் விளக்கம் அருமை. காந்தி பதில் எனக்கும் இரண்டாவது பதிலில்தான் புரிந்ததாகத் தோன்றியது. நான் நினைத்தது.."Follow பண்ணலாமா என்று கேட்கிறீர்களா...நல்ல யோசனைதான்.."அதாவது அவர்கள் அதை பின் பற்றவில்லை என்ற அர்த்தத்தில் என்று நினைத்தேன்.

சிவகுமாரன் சொன்னது…

நானும் ஸ்ரீராம் சொன்னது போல்தான் நினைத்தேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எந்த வகையிலும் அடங்கித் தனிப்படாமல், இம்மூன்று வகையிலும் தேவைக்கேற்பப் புகுந்து வெளிப்படுவோர், பொதுவாக வாழ்க்கையில் மிகுந்த வெற்றியை அடைகிறார்கள்./

மிகவும் பயனுள்ள வரிகள்..

அருமையான ஆழ்ந்த தத்துவங்களை
எளிமையாக விளக்கியிருப்பதற்கு நன்றி..

அப்பாதுரை சொன்னது…

வருக ஸ்ரீராம், இராஜராஜேஸ்வரி,...

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் சொல்வதும் சரியே ஸ்ரீராம்.
இல்லாத ஒன்றை உருவாக்க அல்லது செய்யாத செயலைச் செய்ய, 'good idea' என்று உற்சாகப்படுத்துவதும் மேற்கத்திய வழக்கம். 'ஏட்டுச் சுரைக்காய்' என்ற பொருளிலும் good idea என்பது வழக்கம். உ.ம்: what do you think about democracy? good i.d.e.a. 'நல்ல எண்ணம், நடைமுறையில் உதவாது' உதாரணம்: what do you think about marriage? g.o.o.d idea.

காந்தியின் intonation தெரியாமல் என்ன பொருளில் சொல்லியிருப்பார் என்று யூகிப்பது கடினம். பத்திரிகை குறிப்பை வைத்து காந்தி இன்ன பொருளில் சொல்லியிருப்பார் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

எதிர்மறையை குறிப்பாகச் சொல்லாமல் நேராகவும் சொல்வதுண்டு. உ.ம்: what do you think of a second term obama? b.a.d idea. :)