வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/11/04

தன்னறிவுத் தேர்வு


72
தன்னறிவின் உண்மைகண்ட என்னருமை மாணவனே
உன்னறிவின் நுண்மைகாணும் என்கேள்வி - உன்னில்
பிறப்பவரும் பின்னர் இறப்பவரும் யாவர்?
சிறப்பாகச் சிந்தித்துச் சொல்.

   ன்னறிவைத் தெளிவாக அறிந்த என்னருமை மாணவனே! நீ பெற்ற அறிவின் நுட்பத்தைக் காண விழைகிறேன். (அதனால்) நன்கு சிந்தித்து என் கேள்விக்கேற்றச் சிறந்த பதிலைச் சொல். உனக்குள் பிறவி எடுப்பவரும் பிறகு இறந்து போகின்றவரும் யார்? எத்தனை பேர்? (என்றான் எமன்).




    கேட்ட கேள்விக்கேற்றச் சரியான பதிலைச் சொல்வது, அனைவரும் இளமையிலேயே வளர்த்துக் கொள்ளவேண்டிய கலை. fundamental communication skill.

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வது என்பது சிலருக்கு மிகவும் கடினமான செயல். நடைமுறையில் கேட்கப்படும் சாதாரணக் கேள்விகள் கூட இவர்களுக்குப் பெரும் சங்கடத்தைத் தருகின்றன. இவருள் சிலரது பதில்களோ, கேள்வி கேட்டவரைப் படுத்துகின்றன!

"இன்னிக்கு என்ன சமையல்?"
"போன வாரம் மார்கெட் போனப்போ நாலு பாகற்காய் வாங்கி வந்தேன். அதுல ரெண்டை வறுவல் செஞ்சு போட்டாச்சு.. இன்னும் ரெண்டு இருந்துதா.. அதைவச்சு சாம்பார் பண்ணலாம்னு பாத்தா ஒண்ணு கொஞ்சம் அழுகிப் போனாப்புல.."

"கால்ல அடிபட்டிருச்சா? ரத்தம் வருதே?"
"உடம்பு ஊதிடுச்சா.. கொஞ்சம் ஓடலாம்னு பாத்து வீட்டைச் சுத்தி ரெண்டு ரவுண்டு ஓட நெனச்சேன். முனையில பாருங்க குப்பைத் தொட்டி இருக்குல்லா.."


தன் மகனுக்கு உடல் சுகமில்லை என்று சொல்லியிருந்தார் நண்பர். மறுநாள் பேசியபோது நலம் விசாரித்தேன். கேட்டது இதுதான்: "உங்க மகன் நலமா?". "அது வந்து.. போன வாரம் வீட்டுல சாப்பிட வேணாம்னு ஹோட்டல் போயிருந்தமா.." என்று தொடங்கி தன் மகனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று ஒரு சொற்பொழிவு நடத்தினாரே தவிர, கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை. ஏன் கேட்டோம் என்றாகி விட்டது.

பதில் சொல்கிறார்களோ இல்லையோ, கேள்வியை கேள்வியால் அடிப்பவர்கள் இன்னும் சிலர்.

"என்னங்க, நல்லா இருக்கீங்களா?"
"பாத்தா தெரியலையா?"

"நீ என்னை உண்மையிலே காதலிக்கிறியா?"
"உன்கூட பழகுறதுல இருந்தே தெரிய வேணாமா?"


ஒரு கேள்வி கேட்டால், என்ன பதில் கிடைக்கிறது என்பதை அடுத்த முறை கவனித்துப் பாருங்கள்.

சுற்றி வளைத்துப் பதில் சொன்னால், ஆசிரிய நண்பர் அரசனுக்குக் கோபம் வந்துவிடும். "ஏன்யா.. இன்னிக்கு என்ன கிழமைன்னு கேட்டா நேத்து சனிக்கிழமைன்னு சொல்றியே?" என்பார். கையில் கிடைத்ததை நம் மேல் எறிவார். "கேள்விக்கு பதில் சொல்லிட்டு ஊர் கதையை சொல்லு.. கேக்கறவனுக்கு மரியாதை வேணாம்.. அட, கேள்விக்கு ஒரு மரியாதை வேணாமா?" என்று கோபிப்பார்.

அரசன் என்றில்லை. பொதுவாக ஆசிரியர்களிடம் இந்தக் 'கெட்டப் பழக்கம்' காணப்படுகிறது. பதிலுக்கு ஏற்றவாறு கேள்வியை மாற்றிக் கொள்ளத் தெரிவதில்லை இவர்களுக்கு. என்ன செய்வது?

    மனும் ஆசிரியன் தானே?

எமன் நசிகேதனிடம், 'சிறப்பான பதிலைச் சொல்' என்றானே, ஏன்?

தன் மாணவனின் அறிவைச் சரியான முறையில் சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிப்படைக் காரணம்.

சிறப்பான பதில் என்றால் என்ன? ஏன் அப்படிக் கேட்டான்?

தன் மாணவன் சுற்றி வளைத்துப் பதில் சொல்லக்கூடாது என்ற எண்ணம் ஒரு புறம். தன் மாணவன் அவசரமாக ஏதாவது சொல்லிவிடக் கூடாதே என்ற எண்ணம் ஒரு புறம். தன் மாணவன் சிந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம். தான் எதிர்பார்த்த பதிலைத் தரவேண்டும் என்ற வேகம் ஒரு புறம்.

இவை எல்லாவற்றையும் விட இன்னொரு நுட்பம் இருக்கிறது. ஆசிரிய-மாணவ உறவிலே வெளிப்படும் நுட்பம்.

இயல்பிலே அறிவாளியான தன் மாணவன், கேட்ட கேள்விக்குச் சரியான விடையளிப்பான் என்பது எமனுக்குத் தெரியும். தன் மாணவனை மதிக்கும் எந்த ஆசிரியருக்கும் தெரியும்.

நல்ல மாணவரின் இலக்கணத்தை முதல் பகுதியில் பார்த்தோம். எமன் அதைத்தான் எதிர்பார்த்தான் இங்கே.

நல்ல மாணவர், தன் பதிலால் கேள்விக்கே சிறப்பைச் சேர்க்கிறார். 'ஆகா! எப்பேர்பட்ட கேள்வியைக் கேட்டோம்!' என்று ஒரு ஆசிரியர் தன்னைப் பற்றிப் பெருமை கொள்ளும் அளவுக்கு மாணவரின் பதில் அமைந்து விட்டால், அதுவே சிறப்பான பதில்.

எமனுக்குத் தன் மாணவன் மேல் அத்தனை நேசம், நம்பிக்கை! 'என் கேள்விக்கு அழகைச் சேர்க்கும் பதிலைச் சொல்லையா, சின்னய்யா!' என்று கேட்காமல் கேட்கிறான்.

'யார், யாரிடம் கற்கிறார்கள்' என்ற உணர்வு கடந்த நிலையடையும் ஆசிரிய-மாணவ உறவு இருக்கிறதே.. அதற்கு வடிவமும் இல்லை, விளக்கமும் இல்லை.

தவறாக எண்ணவில்லையெனில், பொறுமையுடன் இதுவரை எழுபது பாடல்கள் போல் தொடர்ந்து படித்து வந்த உங்களிடம் ஒன்று கேட்கலாமா?

நசிகேதன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?

20 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பொதுவாக ஆசிரியர்களிடம் இந்தக் 'கெட்டப் பழக்கம்' காணப்படுகிறது. பதிலுக்கு ஏற்றவாறு கேள்வியை மாற்றிக் கொள்ளத் தெரிவதில்லை இவர்களுக்கு. என்ன செய்வது?/

இது அழ்காக இருக்கிறதே!
மாணவனின் பதிலுக்கு ஏற்றவாறு கேள்விகள் மாற்ற புத்திசாலி ஆசிரியரால் முடியுமே.
மாணவன் எதைக்கேட்டாலும் தெரியாது என்றுதான் பதில் சொல்வானென்று தெரிந்தால்

ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா?
தெரியும் என்பதற்கு எதிர்ச்சொல் என்ன என்கிறமாதிரி கேள்விகள் அமைக்கத் தெரிய வேண்டும்....??!!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வது என்பது சிலருக்கு மிகவும் கடினமான செயல். நடைமுறையில் கேட்கப்படும் சாதாரணக் கேள்விகள் கூட இவர்களுக்குப் பெரும் சங்கடத்தைத் தருகின்றன. இவருள் சிலரது பதில்களோ, கேள்வி கேட்டவரைப் படுத்துகின்றன! /

மிக நிதர்சனமான அருமையான அனுபவ உண்மை.
எங்கள் உறவினர் ஒருவரிடம் ந்ல்லா இருக்கீங்களா என்று பேச்சுக்குக் கேட்டு பட்ட அவஸ்தகள் நினைவில் படுத்துகின்றன..

middleclassmadhavi சொன்னது…

கேள்வி கேட்பதும் ஒரு கலை தான்!! அதில் சிக்காமல் பதில் சொல்லி திசை திருப்புவதும் ஒரு கலையே! :-)

உங்கள் கேள்விக்கு - நான் நடுவில் வந்தேன் - ஒழுங்கா எல்லாப் பாடலையும் படிச்சுட்டு பதில் சொல்லலாமா?

பெயரில்லா சொன்னது…

Dear Teacher
Please excuse me from the exam as I am having severe flu. I cannot come to school till exam is over.

geetha santhanam சொன்னது…

உனக்குள் பிறவி எடுப்பவரும் பிறகு இறந்து போகின்றவரும் யார்? எத்தனை பேர்?//
என்ன அருமையான கேள்வி. ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய பொருள் நிறைந்த கேள்வி. நசிகேதனும் திறமைசாலிதானே. நிச்சயம் நெத்தில அடிச்சமாதிரி பதில் சொல்லியிருப்பார். அது என்னன்னு அவரைமாதிரி யோசிப்பேன்னாலும் மொதல்ல அவரைச் சொல்லவிடுவதுதானே மரியாதை.(கேட்ட கேள்விக்கு நேரான பதில் சொல்வது ஒரு கலை என்றால் பதில் தெரியாது என்று சொல்லாமல் பேசி மழுப்புவது ஒரு கலை.)

geetha santhanam சொன்னது…

எனக்குள் பிறவி எடுப்பதும் பிறகு மரிப்பதும் பேரான்மாவின் ஒரு அங்கமே. அப்படியானால் எத்தனை பேர் என்ற கேள்விக்கு பேரான்மா ஒன்றுதான் என்று சொல்லலாமா.
(பதிலே சொல்லாமல் இருப்பதுதான் தப்பு. தப்பாக சொல்வது அதைவிட பரவாயில்லை என்று ஆசிரியராக இருக்கும் என் தோழி சொன்னது. அதனால் சொல்லிவிட்டேன். நசிகேதனின் பதிலை அறிய ஆவல்.)

அப்பாதுரை சொன்னது…

வருக இராஜராஜேஸ்வரி, middleclassmadhavi, geetha santhanam,..

அப்பாதுரை சொன்னது…

//ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா?
அட்டகாசம் இராஜராஜேஸ்வரி! (அடடே! உங்களை மாதிரி ஒருத்தர் எனக்கு டீச்சரா இல்லாம போயிட்டாங்களே?! )

அப்பாதுரை சொன்னது…

//எங்கள் உறவினர் ஒருவரிடம் ந்ல்லா இருக்கீங்களா என்று...
உண்மைதான். எத்தனையோ பேர் இது போல் இருக்கிறார்கள். எனக்கும் இந்தக் குறைகுணம் உண்டு. 'சாப்பிட்டியா?' என்று யாராவது கேட்டால், 'என்ன, எப்ப பாத்தாலும் சாப்பிட்டியானு கேள்வி?' என்று கேட்டவரிடம் சண்டைக்குப் போவதுண்டு. 'ஏண்டா.. சாப்பிட்டியானு கேட்டா தப்பா?' என்று என் அம்மாவிலிருந்து நிறைய பேர் என்னிடம் வருத்தப்படுவார்கள். சமீபத்தில் என் நண்பர் ஒருவர் சொன்னது: "சாப்பிட்டியானு கேட்க யாராவது இருக்காங்களே உனக்கு?" என்றார். பொட்டில் அறைந்தது போலிருந்தது. கேள்வியல்ல சாரம் என்பது புரிய இத்தனை நாளானது! இப்பொழுதும் யாராவது 'சாப்பிட்டியா?' என்று கேட்டால் எரிச்சல் வரும்; ஆனால் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

//கேள்வி கேட்பதும் ஒரு கலை தான்!! அதில் சிக்காமல் பதில் சொல்லி...
அடுத்த பாடலைப் படித்துவிட்டீர்களோ?

அப்பாதுரை சொன்னது…

//பதிலே சொல்லாமல் இருப்பதுதான் தப்பு. தப்பாக சொல்வது அதைவிட பரவாயில்லை என்று ஆசிரியராக இருக்கும் என் தோழி சொன்னது.

உங்கள் தோழி சொன்னது மிக அருமையான அறிவுரை. விளைவு பிழையாகிவிடுமோ என்று அஞ்சிச் செயலில் இறங்காமல் இருப்பதுதான் நம் வாழ்வின் மிகக் கொடுமையான சாபம். எல்லோருமே வாழ்வின் ஒரு அல்லது பல காலக்கட்டங்களில் இந்த சாபத்துக்கு ஆளாகிறோம்.

நன்றி geethasanthanam. நீங்கள் சொன்ன பதில் சரியே.

geetha santhanam சொன்னது…

அட!!!

geetha santhanam சொன்னது…

நசிகேத வெண்பா எழுதியவர் அத்வைதத்தைப் பின்பற்றுபவரோ?

geetha santhanam சொன்னது…

மன்னிக்கவும், கடோபநிஷத்தை எழுதியவர் அத்வைதத்தைப் பின்பற்றுபவரோ என்று கேட்க வந்தேன்.

அப்பாதுரை சொன்னது…

//அட!!!
சரியான விடையை சிறந்த விடையாக்க முயற்சி செய்யுங்களேன்?

//கடோபநிஷத்தை எழுதியவர் அத்வைதத்தைப் பின்பற்றுபவரோ..
தெரியாது geetha santhanam. நல்ல கேள்வி (பதில் தெரியாவிட்டால் உடனே கேள்வியை நல்ல கேள்வி என்று சொல்லிவிட வேண்டும்).

அத்வைதம் என்ற தத்துவம் எத்தனையோ காலம் தொட்டே இருந்து வந்திருந்தாலும் அதற்குப் பெயர் கொடுத்து தத்துவத்தின் ஆசிரியராகப் பரிசைத் தட்டிக் கொண்டு போனவர் ஆதிசங்கரர். (ஆக்சிஜன் கண்டுபிடித்ததாக ப்ரீஸ்ட்லி/ஷீல் சொன்னது போல).

கடோவின் காலம் சங்கரருக்கு முந்தையது. அத்வைத சிந்தனை இருந்திருக்கலாம் ஆனால் அதற்கு வேறு பெயர் இருந்திருக்க வேண்டும்.

கடோவை எழுதியவர் யாரென்று தெரியாததும் துரதிர்ஷ்டம். ஒருவரா பலரா என்று தெரியவில்லை. முதல் மூன்று பகுதிகளை எழுதியது ஒருவராக இருக்கும் என்கிறார்கள். பின் மூன்று பகுதிகள் பிற்சேர்க்கை என்கிறார்கள். முதல் மூன்று பகுதிகளிலும் பிற்சேர்க்கை இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. பல உபநிஷதுகளின் கதியும் இதே. எழுதியவர் யாரென்று எந்த விவரமும் இல்லை. ஒருவேளை பின்னால் வந்தவர்கள் நைசாக முதலில் எழுதியவர் பெயரை நீக்கிவிட்டார்களோ என்னவோ!

பெயரில்லா சொன்னது…

பதிவு ரொம்ப நல்லா இருக்கு.
communication skill எனக்கு சுத்தமா கிடையாது. வளர்த்துக்கொள்ள நானும் நீண்ட நாட்களாக முயன்று வருகிறேன். வந்தால்தானே! நானெல்லாம் கேள்வியை கேட்டு முடிக்கறதுக்குள்ளேயே பதிலை சொல்ற பேர்வழி. அதாவது கேள்வி என்னங்கறத கூட சரியா காதுல வாங்கிக்காம குடு குடுன்னு ஒரு பதிலை உளறிடுவேன். தப்பித்தவறி கேள்வியை சரியா வாங்கிண்டாலும், பதில் கேள்விக்கு ஏத்ததா முக்கால்வாசி நேரம் இருக்காது. என்ன பண்றது! முதல்ல அடுத்தவங்க பேசறத குறுக்க பேசாம ஒழுங்கா கேக்கற ஆற்றலை வளத்துக்கணும். இது ரொம்ப முக்கியம்.
கொஞ்ச நாள் முன்னாடி அப்பாதுரை அவர்கள் பேசும்போது சொன்னது, மூளையும் வாயும் funnel மாதிரி இருக்கணும். நிறைய விஷயங்களை உள்வாங்கிக்கணும். பேசறது கொஞ்சமா இருக்கணும்னு ரொம்ப அருமையா சொன்னார். அவர் அவ்வளவு அருமையா சொன்னத, அதே வரில எனக்கு இங்க, இப்போ சரியா சொல்ல வரல. மன்னிக்கணும்!

//கேக்கறவனுக்கு மரியாதை வேணாம்.. அட, கேள்விக்கு ஒரு மரியாதை வேணாமா?" என்று கோபிப்பார்.// மிகவும் ரசித்தேன். என்னை பொறுத்தவரை பதிவு உலகம் ஒரு நல்ல எழுத்தாளரை இழந்து விட்டது.

ஸ்ரீராம். சொன்னது…

கேள்விக்கு விடை வந்து விட்டது அல்லவா...

geetha santhanam சொன்னது…

விவரங்களுக்கு நன்றி துரை. இவ்வளவு நல்ல நூலை எழுதியவரின் பெயர் தெரியாமல் போனது வருத்தமே.

சிவகுமாரன் சொன்னது…

அதாவது , நான் நசிகேத வெண்பா ஆரம்பித்தில் இருந்து படிச்சிட்டு வர்றேன்னா, இடையிடையே டேக்கா கொடுத்திறேன்னா, எல்லா கேள்விக்கும் நசிகேதன் டாண் டாண்ணு பதில் சொல்றானா, ஆமா.. அப்பாஜி நீங்க என்ன கேட்டீங்க ?

அப்பாதுரை சொன்னது…

வருக ஸ்ரீராம், மீனாக்ஷி, சிவகுமாரன்,...

சாமர்த்தியமான பதில் தான் ஸ்ரீராம், சிவகுமாரன் :) எனக்கு மட்டும் என்ன - கேக்கத்தான் தெரியும்.

இன்னொருத்தர் என்ன செஞ்சாரு கேளுங்க. எமன் கேட்டதா நான் கேட்ட கேள்வியை எங்கிட்டயே லேசா மாத்திக் கேட்டாரு.. நானும் சட்டுனு கவனிக்காம யோசிச்சப்ப தான் தோணிச்சு.. 'என்னடா இந்த கேள்வியை இதுக்கு முன்னால எங்கியோ கேட்டிருக்கமே?'னு..