வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/10/28

எழுந்திரு! விழித்திரு!


71
எழுந்திரு என்றும் விழித்திரு வாளின்
வெழுமுனை யன்னதுன் வாழ்வு - கழுந்தராய்
ஊழ்வினை என்று உழலாதே உத்தமர்போல்
வாழ்வினை நன்றென வாழ்.

   ழுந்திரு! என்றைக்கும் விழிப்புடன் இரு! பளபளக்கும் வாளின் முனையைப் போன்றது உம் மனித வாழ்வு. அறிவு மழுங்கியவர்களைப் போல விதியை நம்பி வீணாகாதே. நன்னெறிகளைப் பேணும் மேன்மையானவர்களைப் போல் சிறப்பாக வாழ்வாயாக! (என்றான் எமன்).


வெழு: பளபளக்கும், சீரான
கழுந்தராய்: அறிவு மழுங்கியவர் போல், சிந்திக்க இயலாதவர் போல்
ஊழ்வினை: விதியின் செயல், பிறவிச் செயல்களின் பலன், தலையெழுத்து


    துயிலெழ மணியடிக்கிறார்கள். துயிலவும் மணியடிக்கிறார்கள். பிறந்தால் மணி. இறந்தாலும் மணி. ஓட மணி. நிற்க மணி. சாப்பிட மணி. உயிரோடும் பசியோடும் உலவும் நம்முடைய சாப்பாட்டுக்கு மணியடிக்கிறார்கள் என்றால், சிலைகளுக்கும் மணியடித்து பழத்திலிருந்து பண்டம் பானம் வரை பாசாங்கு விருந்தோம்பலுக்கும் மணியடிக்கிறார்கள். ஏதேதோ காரணங்களுக்காக, பல நேரம் காரணமே இல்லாமலும், மணியடிக்கிறார்கள். மணியடிப்பதையே தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அடிக்கும் மணிக்கு ஒரு கோவில் கட்டி, அதற்கும் மணி அடிப்பவர்கள் இருக்கிறார்கள்.

எதற்காக?

வேடிக்கைப் பார்வையை ஒதுக்கிவிட்டுச் சிந்தித்தால், மணியோசை போல ஒன்று நம் இயக்கத்துக்குச் சில நேரம் தேவையாக இருக்கிறது. ஒரு துவக்கம் அல்லது நிறுத்தத்திற்கான அடையாளமாகப் பயன்படுகிறது. நம் கவனங்களை ஒருமுகப்படுத்த இந்த அடையாளம் தேவைப்படுகிறது. விழிப்பை ஏற்படுத்த இது ஒரு புறவிசை. உணர்வை ஒருமுகப்படுத்த ஒரு புறவிசை.

அது இல்லாமல் விழிப்பு வருமா? எழுச்சி வருமா? ஒருமுகம் வருமா?

அலாரம் வைத்துத் தூங்குகிறோம். அலாரம் இல்லாமலே விழிப்பு வரும் என்றாலும் ஒரு வேளை தூங்கிவிடுவோமோ என்று அஞ்சுகிறோம். தாமதமாக விழித்துவிட்டு அலாரத்தின் மீது பழியும் போடுகிறோம். அல்லது எழ நேர்ந்த ஆத்திரத்தில் அலாரத்தின் மண்டையிலேயே ஒன்று போட்டு ஒடுக்கித் தொடர்ந்து கண்மூடுகிறோம்.

முரணென்றாலும் இது பெரும்பாலும் மனித இயல்பே. புறவிசையில்லாது நாம் இயங்குவது கடினம். ஏதோ ஒரு அடையாளம் அல்லது அழைப்பு தேவைப்படுகிறது. நம்முடைய தினசரி வாழ்வின் சிக்கல்களின் இடையில் நம்மை ஒரு நிலையில் செலுத்த இத்தகைய அடையாளங்கள் அவசியம் தான். எனினும், அந்த அடையாளம் நம்மை அழைக்கும் பொழுது, அதற்கேற்ப கவனத்தைத் திருப்பி முனைப்போடு செயல்படுகிறோமா?

புலன் தொட்ட வெளிப்பாடுகளுக்கே இப்படியென்றால், அக விழிப்புக்கு அடையாளம் வேண்டாமா? வேண்டும். அகவிழிப்புக்கான மணியோசை இருக்கிறதா? இருக்கிறது.

அதன் பெயர் தன்னறிவு.

    [இந்தப் பாடல், கடோவின் சிறந்த பாடல்களுள் ஒன்று. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் விதம் விதமான சிந்தனைகளைத் தூண்டும் பாடல். அடிப்படை விழிப்புணர்வை மிக அருமையாகத் தேவைப்படுத்திச் சொல்கிறது. உபரி விவரம்: வடமொழிப் பாடலின் முதல் வரிகளை விவேகானந்தர் தன்னுடைய இயக்கத்தின் அழைப்பாக அமைத்துக் கொண்டார். வடமொழிப் பாடலை மாற்றாமல், சற்றே மேம்படுத்திச் சொல்ல முயன்றிருக்கிறேன்.]

    "நசிகேதா! நீ விரும்பியவாறே உனக்கு மெய்யறிவைப் பற்றிய விளக்கத்தையும் அதைப் பெறும் வழிமுறைகளையும் சொன்னேன். இனி நீ பெற வேண்டிய அறிவு என்னிடம் எதுவும் இல்லை. நான் சொன்னது அனைத்தையும் புரிந்து கொண்டாயா?" என்று கேட்டான் எமன்.

"ஆம், ஐயா! பிறப்பிறப்பு உயிர்ப்பயணம் மற்றும் சொர்க்க நரக அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன், நன்றி. கண்மூடித்தனங்களைப் பற்றிப் புரிந்து கொண்டேன், நன்றி. முனைப்புடன் தன்னறிவைப் பெற வேண்டிய அவசியத்தையும் அறிந்து கொண்டேன், நன்றி" என்றான் நசிகேதன்.

"நன்று நசிகேதா! இனி உனக்குச் சொல்ல வேண்டியவை சொற்பமே! பெற்ற அறிவைப் பேணுவதும் பயன்படுத்துவதுமே நல்ல மாணவனுக்கு அழகு. பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவரையும் மேம்படுத்துவதே நல்ல மாணவன் தன் ஆசிரியனுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும். தான் பெற்றை அறிவை, தனக்குப் பிறகும் தொடர்ந்து பரவச் செய்வதே நல்ல மாணவன் தான் பெற்ற அறிவுக்குச் செய்யும் மேம்பாடாகும்" என்றான் எமன். "நசிகேதா! என் அருமை மாணவனே! அகத் துயிலினின்று எழுந்திரு! என்றைக்கும் விழிப்போடு செயல்படு! கண்மூடச் செய்யும் காவிகளைக் கண்டறிந்து ஒதுக்கு. கண்மூடுவதால் கிடைக்கும் எந்தப் பலனையும் ஏற்காதே! விழிப்போடு இரு!".

"நல்லது ஐயா"

"நீ இளவரசன் தானே? வாள் அறிவாய் அல்லவா?"

"அறிவேன். வாளின் பளபளப்பும் சீரான அமைப்பும் கூர்முனையும் என்னை மிகவும் கவர்ந்தவை"

"நசிகேதா! அரசனுக்கு வாளைப் பிடிக்கத் தெரிய வேண்டும். அரசன் வாளினால் போரிட வேண்டியதில்லை. யாரையும் வெட்டித் துண்டு போட வேண்டியதில்லை. ஆனால் அரசனிடம் வாளிருபப்து தெரிந்தால் எல்லாருமே அடங்கி அமைதியாக நடக்கிறார்கள் அல்லவா?"

"ஆமாம்"

"மனிதர்கள் எல்லாருமே அரசர்கள் தான். அவர்களிடம் தன்னறிவு என்ற வாளிருக்கிறது. அதைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. பயன்படுத்தாவிட்டாலும், தன்னறிவு இருப்பது தெரிந்தாலே தீக்குணங்கள் தலைபணிந்து விலகும்"

"புரிகிறது ஐயா"

"இன்னொரு விதத்திலும் சொல்கிறேன் கேள். வாளின் கூர்முனையைப் போன்றது மனிதரின் வாழ்வு. உம்மக்கள் என்று அடிக்கடிச் சொல்கிறாயே, அவர்களின் தினசரி வாழ்க்கை கத்தி முனையில் நடப்பது போன்றதாகும். எதையும் அதிகமாக நுகரத்துணியும் பொழுது அதுவே ஆபத்தாகி விடுகிறது. கத்தி முனையில் அழுந்தி நடப்பதற்கு ஒப்பாகிவிடுகிறது. நன்னெறிகளை மறவாமல் பற்றறுத்து வாழ்வது, கத்தி முனையில் நடந்து முடிப்பதற்கு ஒப்பாகிறது. தன்னறிவு எனும் விசை, கத்திமுனையை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. மனிதகுலம் அதை மறவாமல் வாழவேண்டும்"

"உண்மை எமனாரே!"

"நசிகேதா, மேலும் கேள். இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று தம்மைப் போல் அறிவற்றவரையோ, எல்லாம் அறிந்தவர் போல் போலிப் பகட்டுடன் திரிவோரையோ, முன்வினை பாவம் புண்ணியம் பரிகாரம் என்று பலவாறு சொல்லி ஏய்ப்பவரையோ, பேரான்மாவெனும் மகத்தான மனிதசக்தியைப் போன்றோ அல்லது அதைவிட மேலான சக்தி உண்டென்றோ சொல்லி அதையறியச் சடங்குகளை உண்டாக்கித் திரியும் சதிகாரரையோ... நம்பாதே! அவ்வாறு நம்புவது, அறிவு மழுங்கிய கண்மூடிகளின் செயலாகும். உறங்குவோரை விழிக்கச் செய்யலாம்; கண்மூடிகளை விழிக்கச் செய்வது இயலாது. உழல்வது அவர்களின் வாடிக்கை. அவர்களைப் போல் உழலாமல், நீ விழிப்போடு வாழ வேண்டும். கண்மூடிகளை நான் கவனித்துக் கொள்கிறேன், இறுதியில் என்னிடம் தானே வரப்போகிறார்கள்?"

"நான் என்ன செய்ய வேண்டும், நமனாரே?"

"வாழ்வை நேரான முறையில் சிறப்பாக வாழ்ந்து முடி. எண்ணத்தாலும் செயலாலும் உயர்ந்தவனாக இரு. வாழும் நாளிலே சிறப்பெய்த, தன்னறிவைத் தேடிப் பெறு. உம்மக்களையும் உய்யச் செய்"

"அப்படியே செய்வேன், ஆசானே" என்றான் நசிகேதன். "எனக்கு விடை கொடுங்கள்".

"பொறு" என்ற எமன், புன்னகைத்தான்.

7 கருத்துகள்:

middleclassmadhavi சொன்னது…

//வாழ்வை நேரான முறையில் சிறப்பாக வாழ்ந்து முடி. எண்ணத்தாலும் செயலாலும் உயர்ந்தவனாக இரு. வாழும் நாளிலே சிறப்பெய்த, தன்னறிவைத் தேடிப் பெறு. உம்மக்களையும் உய்யச் செய//

சாற்றை பிழிந்து அழகாகக் கொடுத்து விட்டீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

geetha santhanam சொன்னது…

மிடில் க்ளாஸ் மாதவி சொன்ன இந்த வரிகள் சாறு மட்டுமல்லாது மேன்மையான வாழ்க்கை வாழ ஒரு டானிக் போன்றது. இந்த பதிவைத் திரும்பப் படித்து கருத்துக்களை மனதில் இருத்திக்கொள்ள முயல்கிறேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

. புறவிசையில்லாது நாம் இயங்குவது கடினம். ஏதோ ஒரு அடையாளம் அல்லது அழைப்பு தேவைப்படுகிறது.

நிதர்சனமான உண்மை...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழும் நாளிலே சிறப்பெய்த, தன்னறிவைத் தேடிப் பெறு. உம்மக்களையும் உய்யச் செய்"

கருத்துச்செறிவுள்ள சிறப்பான அற்புதப் ப்கிர்வ்வுக்கு பாராட்டுக்கள்..

சிவகுமாரன் சொன்னது…

ஆகா .
உத்வேகம் தரும் வெண்பா.
எனக்கு நான் எழுதிய

"விழுந்தால் இனிமேல் விதையாய் விழுவாய்
எழுந்தால் தொடுவாய் இமயம் - அழுந்தும்
புதைமணல் வாழிவினி போதும் ! விதிக்கு
சிதையினை மூட்டிச் சிரி, "

என்ற வெண்பா நினைவுக்கு வந்தது.

விவிவேகானந்தருக்கு முன்பே கடோவில் சொன்ன வரிகளா இவை ?

அற்புதம் அப்பாஜி.

பெயரில்லா சொன்னது…

சிறப்பான பதிவு.

கடமையை செய்வதற்குதான் புறவிசை தேவைபடுகிறது. மனதிருக்கு விருப்பமானதை செய்யும்போது அகவிழிப்பு தானாகவே ஏற்படுகிறது, இல்லையா!

அப்பாதுரை சொன்னது…

நன்றி middleclassmadhavi, geetha santhanam, இராஜராஜேஸ்வரி, சிவகுமாரன், மீனாக்ஷி,...

சிவகுமாரன்: அறிவை முறுக்கேற வைத்தக் கவிதை. அருமை!

//கடமையை செய்வதற்குதான் புறவிசை தேவைபடுகிறது.
சமாதானம் போலத் தொனிக்கிறதே மீனாக்ஷி? :) கடமையைச் செய்ய எந்த விசையும் தேவையில்லை என்பது என் கருத்து. கடமையும் மனதிற்கு விருப்பமிருந்தால் தான் கடமையாகிறது. இல்லாவிட்டால் காரணமற்ற செயலாகிறது என்று நினைக்கிறேன்.