வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/09/16

புலன்களுக்கு அப்பாற்பட்டது தன்னறிவு


66
உணர்ச்சியைத் தாவும் உணர்வதைத் தாவும்
குணமதைத் தாவும் மனமாம் - அணந்தால்
மனமதைத் தாவும் அறிவையும் தாவும்
தனமதுத் தன்னறி வாம்.

   ணர்ச்சிகளைக் கடந்தது உணர்வு; அதைக் கடந்தது நெறி; அதைக் கடந்தது மனமாகும். மேலும் நோக்கினால், மனதைக் கடந்தது அறிவு; அதையும் கடந்தத் தன்மையுடையது தன்னறிவாகும்.


தாவும்: தாண்டும், கடக்கும், அப்பாற்படும்
அணந்தால்: மேல் நோக்கினால்
தனம்: தன்மை


    ல்லோரும் வாழலாம். எப்படியும் வாழலாம்.

'எல்லோரும் வாழலாம்' என்பதில் தொனிக்கும் முற்போக்கும் நம்பிக்கையும் 'எப்படியும் வாழலாம்' என்பதில் தொனிக்கிறதா? என்ன நினைக்கிறீர்கள்?

'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற வரிகளை நிறையச் சிந்தித்திருக்கிறேன். என்ன சொல்கிறார் புலவர்? எல்லோரும் வாழலாம் என்ற பொருளில் பாடினாரா? எப்படியும் வாழலாம் என்ற பொருளில் பாடினாரா?

இரண்டுக்கும் வேறுபாடு உண்டா?

துவ்வாமை என்பது தவமுனிகளுக்கும் தமிழ்முனிக்கும் சுலபமாகத் தோன்றலாம். என்னைப் போன்ற சராசரிகளுக்கும் பெரும்பாலான காவி/அங்கிகளுக்கும் துவ்வாமை தொலைவானது. துவ்வல் இன்றியமையாதது. புலன்கள் நம் வாழ்வின் அடிப்படைத் தேவை எனத் தீர்மானமாக நம்புகிறேன். புலன்களை வைத்து தினம் வாழ்வை அனுபவிக்க நேரம் போதவில்லை. இன்னும் ஒரு ஜோடிப் புலன்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அடிக்கடி எண்ணியிருக்கிறேன். அனைத்தையும் இருமடங்காக அனுபவிக்கலாமே என்று எண்ணியிருக்கிறேன். இப்படி வாழலாம்.

தொட்டால் சுடும் என்பதை உணர்ந்து, தொடாமலே வாழ்வது சற்றே முதிர்ந்த வாழ்க்கை என்று நம்புகிறேன். என்னைப் போன்ற சராசரிகள் சிலர், சற்று சுட்டும் சற்று விட்டும் வாழப் பழக முயல்கிறார்கள். உணர்ச்சியைக் கடந்த உணர்வு நிலையில் வாழ்ந்தால் அது இனிமை என்பது தெளிவாகப் புரிகிறது. பந்தம் பாசம், பொறாமை கோபம், காதல் மோதல் என்று உணர்வுகளை முன்வைத்து புலனைப் பின்னணிக்குத் தள்ளி முதிர்ச்சியோடு வாழ்வது கலை. நான் அறிந்த பலர், உணர்ச்சியையும் உணர்வையும் குழப்பிக் கொண்டு இங்கொரு கால் அங்கொரு கால் என்று தத்துகிறார்கள். இப்படியும் வாழலாம்.

உணர்வுக்கும் ஒரு படி மேலே நின்று நெறியைப் பற்றி வாழ்வது இன்னும் முதிர்ந்த வாழ்க்கை. நெறி வாழ்க்கை சற்று சுவாரசியமானது. நெறி வாழ்க்கை என்பது ஒரு முகமூடி போன்றது. தன்னை மறக்க முகமூடி அணியலாம். தன்னை மறைக்கவும் முகமூடி அணியலாம். அணிந்தவரைப் பொறுத்து மாண்புருவது என்றாலும், நெறி வாழ்க்கை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலை. இந்தக் கூட்டத்தில் விவேகானந்தரும் உண்டு, நித்தியானந்தரும் உண்டு. காலடியும் உண்டு, காஞ்சியும் உண்டு. சீரடியும் உண்டு, சிருங்கேரியும் உண்டு. திருநீர்மலையும் உண்டு, திருப்பதியும் உண்டு. முகமூடிக்குப் பின்னே இருப்பது யார்? அதுதான் சுவாரசியம். நெறி தழுவிய முகமூடிகள் என் போன்றவர்களுக்கு ஒளிவிளக்குகள். நெறி தவறிய முகமூடிகள், புலனை நம்பியே வாழும் என் போன்றவர்களை விடக் கேவலமானவர்கள். பெரும்பாலானக் காவிகளும் அங்கிகளும் இதில் அடக்கம். அத்திபழங்கள். இப்படியும் வாழலாம்.

நெறிக்கும் ஒரு படி மேலேறி, மனதைப் பற்றி வாழ்வது இன்னும் முதிர்ச்சி. மனதைப் பற்றி வாழ்வதா? அப்படியென்றால்? பொய் சொல்லாதே என்கிறது நெறி. 'எங்கேடி உன் பிள்ளை?' என்று ஆத்திரத்துடன் வரும் அறிவற்றத் தகப்பனைத் திசை திருப்ப, 'பிள்ளை இங்கே இல்லை' என்று மறைத்துப் பொய் சொல்லும் தாய் நெறி தவறியவரா, மனம் தழுவியவரா? 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்று படிப்பது நெறி மீசை. 'ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று துடிப்பது மன மீசை. மனதைப் பற்றியவர்கள் மட்டுமே கணவனை இழந்த நிலையிலும் 'தேரா மன்னா!' என்று சிலம்பாட முடியும் என்று நினைக்கிறேன். இப்படியும் வாழலாம்.

ஒன்றைக் கவனித்தீர்களா? உணர்ச்சி, உணர்வு, நெறி இவை மூன்றுமே வெளிநோக்கிய வாழ்க்கை. உள்நோக்கிய வாழ்க்கை என்பதே மனதில்தான் தொடங்குகிறது.

மனதுக்கும் சில படிகள் மேலே அறிவு. அறிவற்றத் தகப்பனிடமிருந்து காப்பாற்ற நினைத்தப் பிள்ளையின் கையில் திருட்டுப் பொருள் இருப்பதைக் கண்டதும், செய்ய வேண்டியதைச் செய்யும் நிலை. 'கல்லானாலும் கணவன்' என்று நம்பியவன், கொடுமைக்காரன் என்று தெரிந்ததும் கணவனைக் கல்லால் அடிக்கும் நிலை. அறிவு மனதைச் சீராக்குகிறது. மனதையும் பற்றி அறிவோடும் வாழ்வோர், மிகச்சிலர். நான் அறிந்த ஆயிரக்கணக்கானவருள் இருபது நபர்களை இந்த வகையில் சேர்ப்பேன். இப்படியும் வாழலாம்.

அறிவுக்கு மேலே பல படிகள் சென்று வாழ்வது தன்னறிவைப் பற்றி வாழும் நிலை. தகப்பனுக்கும் பிள்ளைக்கும் ஒருங்கே மந்திரம் சொல்லும் தாயின் நிலை. நான் அறிந்த ஆயிரக்கணக்கானவருள் ஐந்து பேரை இந்த வகையில் சேர்ப்பேன். இப்படியும் வாழலாம்.

எல்லோரும் வாழலாம் என்ற கொள்கை, நெறி பற்றியது என்று தீர்மானமாகச் சொல்லலாம். ஓரளவுக்கு மனம் பற்றியது என்றும் சொல்லலாம். எப்படியும் வாழலாம் என்ற கொள்கை? உணர்ச்சி, உணர்வு, நெறி, மனம், அறிவு, தன்னறிவு எனும் ஆறு நிலைகளில் ஒன்று என்பதை மட்டும் தீர்மானமாகச் சொல்லலாம் :). ஆனால் எந்த நிலை? ஒரு துப்பு தருகிறேன்: சுவாரசியமானது.

    சிகேதனின் கேள்விகளால் தாக்குண்ட எமன் சிந்தித்தான். இந்தப் பிள்ளை கேள்வி எந்திரமாக இருப்பான் போலிருக்கிறதே? தன் மாணவனின் அறிவுப் பசியைப் போக்கச் சரியான உணவைப் போதுமான அளவு படைக்க வேண்டுமே என்று கலங்கினான். உயிர்ப்பயண உண்மைகளை அறியும் பக்குவம் தன் மாணவனுக்கு இருப்பதை அறிந்து நுட்பங்களைச் சொல்வதென்றுத் தீர்மானித்தான். தான் சொல்லாவிட்டால் எப்படியும் தெரிந்து கொண்டு தனக்கே சொல்லித்தருவான் இந்தப் பிள்ளை என்றும் நினைத்தான். "நசிகேதா! ஆன்மா பற்றிய உண்மைகளை உடனடியாகச் சொல்லத் தொடங்குவேன். நம்முடைய புலன்களுக்குப் பல நிலைகளுக்கு அப்பால் இருப்பது ஆன்மா. அதற்கும் அப்பால் பல நிலைகள் கடப்பதே உயிர்ப் பயணத்தின் இலக்கு. நிறுத்தம்" என்றான்.

"நிலைகள் என்றால்?" என்றான் நசிகேதன்.

எமன் சிந்தித்தான். "நசிகேதா, என்னுடன் ஒரு பயணம் வரத்தயாரா?" என்றான்.

"எதற்கும் தயார். எத்தகையப் பயணம்?"

"கற்பனைப் பயணம். ஒன்றன் மேல் ஒன்றாக ஆறு குகைகளை எண்ணிக்கொள்"

"செய்தேன்"

"கீழ்க்குகையிலிருந்து மேல் குகைக்குப் பயணம் செய்யப் போகிறோம்"

"சரி"

"ஒரு நுட்பம். முதல் ஐந்து குகைகளின் நிலையில்லாமையால் பயணம் அவ்வபோது தடுமாறலாம். தடுமாறினால் தொடங்கிய இடத்துக்கே வர நேரிடும். ஆறாவது குகையில் எந்த விதத் தடுமாற்றமும் கிடையாது"

"பயணத்தின் இலக்கு, ஆறாவது குகையை அடைவதா?"

"பயணத்தில் குறிக்கோள், ஆறாவது குகையிலிருந்து வெளியேறுவதாகும்"

"நன்றி ஐயா.. நான் தயார்"

"புலன்களை அறிவாய் அல்லவா?" என்றான் எமன்.

"அறிவேன். ஐம்புலன்களினால் வாழ்வை நுகரும் எண்ணற்றோருள் நானும் ஒருவனாக இருந்தேன்" என்றான் நசிகேதன்.

"புலன்களை அறிய வைப்பது உணர்ச்சிகள். உணர்ச்சிகளே முதல் குகை. உணர்ச்சிகளை விட நுண்மையானவை உணர்வுகள். உணர்வுகளே அடுத்தக் குகை. உணர்வுகளை விட நுண்மையானது குணம். அதுவே மூன்றாவது குகை. குணத்தினும் நுண்மையானது, அப்பாற்பட்டது, மனம். அடுத்தக் குகை. மனதைக் கட்டும் அறிவோ, அதனினும் நுண்மையானது. அறிவே அடுத்தக் குகை" என்ற எமன், "நசிகேதா, நான் சொல்வது புரிகிறதா? என்றான்.

நசிகேதன் கவனமாகக் கேட்டு, "புரிகிறது" என்றான்.

எமன், "அப்படியென்றால் உனக்குப் புரிந்ததைச் சொல். மாணவனின் திறமையைச் சோதிக்க வேண்டியது ஆசிரியனின் கடமையல்லவா?" என்றான்.

"உயிர்ப்பயணம் பற்றிய என் கேள்விகளைத் தொடர்ந்துக் குகைப்பயணம் பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள். என்னுடைய சிற்றறிவுக்கெட்டிய வரை நீங்கள் குறிப்பிட்டக் கற்பனைக் குகைப் பயணம் உயிர்ப் பயணத்தை ஒத்தது" என்றான்.

எமன் பிரமிப்பை அடக்க முயன்றான். "எந்த வகையில்?"

நசிகேதன் பணிவுடன், "பிறப்பிலிருந்து இறப்பு வரை மனித உயிரானது உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயணத்தில் உயிரானது உலகாயதச் சிந்தனை மற்றும் செயல்களில் ஈடுபட்டுச் சுழல்கிறது" என்றான்.

"மிகச்சரி"

"அப்படியெனில் தன்னறிவு?"

"அறிவுக்கும் அப்பாற்பட்டது தன்னறிவு. ஆறாவது குகை" என்றான் எமன்.

"உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு எல்லாம் புரிந்தது ஆசானே. அறிவுக்கும் அப்பாற்பட்டது தன்னறிவென்றீர்களே? மனதை ஒழுங்கு செய்யும் அறிவுக்கும் தன்னறிவுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வேண்டுகிறேன்"

"அறிவு தன்னுடைய மனதை ஒழுங்கு செய்யும். தன்னறிவோ பிறருடைய மனதையும் ஒழுங்கு செய்யும் தன்மை கொண்டது. தன்னறிவு கண்டவர்கள் தலைவர்கள். தன்னறிவு கண்டவர்கள் வெகு சிலரே. அவர்களால் உணர்ச்சியில் உழல்வோரை உய்யச் செய்ய முடியும். தன்னறிவைக் கண்ட உயிர், பிற குகைகளுக்குத் திரும்புவதில்லை, புரிந்ததா?"

"புரிந்தது. மனிதன் இறக்குமுன் ஆறாவது குகைக்கு உயிரைச் செலுத்த வேண்டும். ஆறாவது குகைக்குள் செல்லாத உயிருக்கு அதைவிட்டு வெளியேற வாய்ப்பில்லாது போகிறது"

"அல்ல. அனைத்து உயிர்களுமே தொடர்ந்து பயணிக்கின்றன. ஆறாவது குகையைக் கடந்த உயிருக்கு மட்டுமே அடுத்த பயணத்தின் தெளிவு உண்டாகிறது"

"தன்னறிவால் ஆன்மாவை அறிய முடியும் என்று முன்பு சொன்னீர்கள். இப்பொழுது இன்னும் தெளிவானது. ஆறாவது குகைக்கு அப்பாலிருப்பது ஆன்மாவா? தன்னறிவுப் பயணம் செய்யாத உயிர்கள் ஆன்மாவை அறியாது போகுமா? ஆறாவது குகை வரையிலான பயணம் முழுதும் மனிதன் உயிருடன் இருக்கையில் செய்வதல்லவா? இறந்த பின்னர், பயணம் ஆறாவது குகைக்கு அப்பால் தொடங்குகிறதா?

எமன் வியந்தான். நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

24 கருத்துகள்:

Santhini சொன்னது…

Present! What do you think about, "Be conscious about being unconcious"?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தொட்டால் சுடும் என்பதை உணர்ந்து, தொடாமலே வாழ்வது சற்றே முதிர்ந்த வாழ்க்கை என்று நம்புகிறேன். /

அருமையான பகிர்வுக்கு நன்றி.

அப்பாதுரை சொன்னது…

வருக Santhini, இராஜராஜேஸ்வரி,...
பாதிப் பதிவைப் படித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி.
முழுவதையும் எழுதிப் பதிவு செய்யுமுன் தவறுதலாக அதுவரை எழுதியிருந்தது பதிவாகிவிட்டது.

meenakshi சொன்னது…

//உள்நோக்கிய வாழ்க்கை என்பதே மனதில் தான் தொடங்குகிறது.// அருமை!

யமன், நசிகேதனின் உரையாடல்கள் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாகவும், அருமையாகவும் உள்ளது.

எப்படியும் வாழலாம் என்பது மனம் போன போக்கில் வாழ்வது. அதனால் இது மனதை பொருத்தது. சரியா?

பத்மநாபன் சொன்னது…

குகை பயணம் அருமை... உயிர் பயணமாக நசிகேதன் கூறுவதும் எமனாசானுக்கு ஆர்வம் மேலிடுவதும் நல்ல ஆசிரிய - மாணவ கட்டம்..

ஆறு குகை வாழ்க்கைப்பயணம் ஒரு புதிய /எளிய கோட்பாடாக இருக்கிறது...

"உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு, தன்னறிவு .. எனும் வரிசையில் குகைகள் மேன்பட்டு மேன்பட்டு வருவதை பார்க்கிறோம்..வரிசை மாற்றாமல் ஒவ்வோரு குகையாகத்தான் கடைந்தேற முடியும்.....

geetha santhanam சொன்னது…

இந்தப் பகுதி மிகவும் எளிமையானது என்று சொன்னீர்களே. உணர்ச்சி, உணர்வு இரண்டு குகைக்கும் வேற்பாடு புரியவில்லையே. அனுபவித்தால் உணர்ச்சி, அனுபவிக்காமல் அனுமானித்தால் உணர்வா?

அப்பாதுரை சொன்னது…

வருக meenakshi,பத்மநாபன்,geetha santhanam,...

அப்பாதுரை சொன்னது…

உணர்ச்சி உணர்வு மட்டுமல்ல மற்ற குகைகளுக்கிடையிலும் வேறுபாடு இல்லையென்றும் தோன்றலாம்,geetha santhanam. உண்மையும் அதுதான் என்று தோன்றுகிறது. வேறுபாடு என்ற கண்ணோட்டம் ஒன்றை விட ஒன்று தாழ்ந்தது என்ற பொருளைத் தந்துவிடும் அல்லவா? உணர்ச்சி உணர்வு நெறி குணம் மனம் அறிவு இன்னும் வரப்போகும் நிலைகள்.. இவற்றை ஒன்றிற்கொன்று வேறுபட்டதாக எண்ணினால் இருக்கும் குழப்பத்துடன் இல்லாத குழப்பமும் சேரும் அபாயம் உண்டு :) சுருக்கமாக, வேறுபடும் ஆனால் வேறுபடாது.

வினையாகச் சிந்தித்தால்.. நீச்சல்குளம் போயிருப்பீர்கள்.. இல்லையெனில் இயற்கையின் குளம், ஆறு, கடல் என்று நீர்நிலைகளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். முதலில் அடியெடுத்து வைக்கும் பொழுது சாதாரணமாக இருக்கிறது. நாலடி எட்டடி இருபதடி என்று நீருக்குள் நடந்தால் ஒவ்வொரு கட்டத்திலும் சாதாரணம் அசாதாரணமாக மாறுவது புரியும். அசாதாரணம் பலவகை என்பதும் புரியும். வெளியிலிருந்து பார்க்கும் பொழுது எல்லாமே ஒன்றாகத் தானே இருக்கிறது எல்லாமே தண்ணீர் தானே என்று தோன்றுவது இயற்கை. இறங்கி நடந்தால் தானே தெரியும்? நீந்தத் தெரிந்தவர்கள் ஆழ வேறுபாடு புரிந்து துணிவோடும் அமைதியோடும் தொடர்வார்கள். நீச்சல் தெரியாதவர்கள் கதி? கரையோரமாகத் தான் அலை வருகிறது கடலில். உள்ளே போகப் போக அதே கடல் அதே நீர்.. ஆனால் வேறுபாடு நீரில் அல்ல என்பது புரியும் பொழுது திடுக்கிடுகிறோம், ஆர்ப்பரிக்கிறோம், அல்லது ஏற்று அமைதியாகிறோம். கரைக்கு வந்த பின்னும் அமைதி தொடர்கிறது.

etymology அளவில் வேறுபாடு உண்டு (எனக்கு அவ்வளவு தான் தெரியும் :). அனுபவிக்க உணர்ச்சி தேவை. உணர்வால் அனுபவிக்க முடியாது - oxymoron. நீங்கள் சொல்வது போல் அனுமானம் தான். அனுபவமாகாது. உணர்வு, நெறி, மனம், அறிவு இவை எல்லாமே அனுமானத்தின் வெவ்வேறு நிலைகள் தாம். சாதாரண அனுமானம் சற்று ஆழமாகி நோக்கு, இலக்கு, இயக்கம், விழிப்பு போன்ற பரிமாணங்களைப் பெறுகிறது. சூடு எப்படி இருக்கும். தீயைத் தொட்டால் தெரியும். தீயைத் தொட்டதும் தொனிக்கும் அந்த "ஆ!" உணர்ச்சி. தீயைப் பார்த்ததும் தோன்றும் அந்த "ஆ!" உணர்வு. காதல் என்பது உணர்வு. அதை வெளிப்படுத்தும் விதத்தில் உணர்ச்சி தேவையாகிறது. ஆசை, கோபம், அன்பு, கருணை எல்லாமே அப்படித்தான். அவற்றை வெளிப்படுத்தவும் 'அனுபவிக்கவும்' உணர்ச்சி சாதனமாகிறது. அந்த வகையில் உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் வேறுபாடு உண்டு.

இது போன்ற கேள்விகளை நசிகேதன் கேட்டிருக்க வேண்டாமோ?

அப்பாதுரை சொன்னது…

நீர்நிலை உதாரணம், நிலத்திலும் கிடைக்கும். மலையேறிப் பார்ப்பதும் (பம்மல் ஊர்காரர்களுக்கு மலையேறுவது என்றால் வேறே பொருள்), நீள்தூர நடை/ஓட்டமும் உணர்ச்சி உணர்வுகளின் வேறுபாட்டை வெளிக்கொண்டு வரும். நீந்த வேண்டியதில்லை, நடக்க வேண்டியதில்லை, ஓட வேண்டியதில்லை, மலையேற வேண்டியதில்லை.. இன்னும் அருகில் தினசரி வாழ்க்கையிலும் இவற்றைக் காணலாம். குடும்ப உறவுகள், நட்புகள், தொழில், சமூகம்... இந்த வலையில் உணர்ச்சியும் உணர்வும் பிறவும் கலக்காத கணம் இல்லை. எது உணர்ச்சி எது உணர்வு எது அறிவு என்பது தெரிந்தால், இந்த வலையில் சிக்காமல் சிலந்தி போல் அமைதியாக உலாவலாம். இல்லையென்றால் சிக்கிய பூச்சி போல் இரையாகத் தவிக்கலாம். qed: எல்லாமே ஒன்றுதான் ஆனால் ஒவ்வொன்றும் வேறு வேறு :) sum of parts.

meenakshi சொன்னது…

கீதா அவர்கள் கேட்டிருந்த கேள்விதான் நேற்றிலிருந்து என் நினைவிலும் உழன்று கொண்டிருந்தது. மிக அருமையான விளக்கம். நன்றி. உணர்வுகள் உணர்சிகளின் மூலம்தான் வெளிப்படுகிறது. தன்மானம், பெருந்தன்மை, இரக்கம் போன்ற உணர்வுகள் எல்லாம் நாம் நடந்து கொள்ளும் விதத்தின் மூலம்தான் வெளிப்படுகின்றன, இல்லையா! உணர்ச்சி என்பது எல்லோருக்கும் பொதுவானது, ஆனால் உணர்வுகள் அப்படி இல்லை என்பது சரியா?

meenakshi சொன்னது…

என் கேள்வியை நான் தெளிவாக கேட்டிருக்கிறேனா என்று தெரியவில்லை, அப்பாதுரை. :) குணங்கள் நல்லதோ, கெட்டதோ எல்லோரிடத்திலும் பொதுவாக இருப்பதில்லையே. புலன்கள் உணரப்படும் உணர்சிகள் நெருப்பு சுடுவது, தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பது போன்றவை எல்லோரிடத்திலும் இயல்பிலேயே இருக்கிறதே! அதனால்தான் கேட்டேன்.

என்னுடைய இந்த இரண்டு கருத்தும் அபத்தமாக இருந்தால் தயவு செய்து நீக்கி விடுங்கள். :)

அப்பாதுரை சொன்னது…

எல்லோரிடத்திலும் பொதுவாகவே இருக்கிறது meenakshi. வெளிப்படுத்தும் விதத்திலும் வேகத்திலும்தான் வித்தியாசம். அதன் காரணம், உணர்வுக்கு மேலே நெறிக்கு மேலே எனும் உட்பயணம் என்று நினைக்கிறேன்.. இந்த வகையில் பத்மநாபன் சொல்லியிருப்பது போல் ஒரு நிலை இன்னொரு நிலையினும் மேம்படுகிறது.

சிலர் இயல்பாகவே பாதிப் பயணம் போய்விடுகிறார்கள்.. பலர் திரும்பத் திரும்ப விழுகிறார்கள்.. அவர்களில் சிலர் எழப் பார்க்கிறார்கள். இன்னும் சிலர் விழுந்த இடத்தின் அழகோ அழுக்கோ அதிலேயே தங்கிவிடுகிறார்கள்.

meenakshi சொன்னது…

தெளிவான பதில். நன்றி!
பத்மநாபன் கமெண்ட் மீண்டும் படித்தேன். அருமை!

அப்பாதுரை சொன்னது…

Santhini..உங்கள் கேள்வியைப் படித்ததும் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து கால்கள் தாமாகவே பக்கத்திலிருக்கும் தாழ்மேசை மேல் ஏறத்தொடங்கின. இளநிலை psych 101 மற்றும் முதுகலை cognitive science வகுப்புகளில் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த நாட்களையும் நினைவுகளையும் கிளறிவிட்டீர்களே, நியாயமா? :)

உலகாயத அறிவு நிலைகளில் conscious, unconscious இரண்டையுமே அறிய வேண்டியிருக்கிறது. குறிப்பாக மேலாண்மை, தந்திரம், தலைமை பற்றிய விசாரணையில் இந்த conscious unconscious நிலைகள் தேவைக்கதிகமாகவே விவாதிக்கப் படுவதாகத் தோன்றுகிறது. வாழ்வின் குறிக்கோள் (வாழ்வு என்பது மனித வாழ்க்கை மட்டுமல்ல, நிறுவன வாழ்க்கை - life of an organization என்ற பார்வை) 'eliminating unconscious incompetence and executing the unconscious competence through conscious competence' என்ற படிப்பறிவு பின்னாளில் பிடிப்பறிவாக மாறுமென்று நினைக்கவேயில்லை. ஏதோ தேற வேண்டும் என்பதற்காகப் படித்தது (conscious competence, conscious incompetence, unconscious incompetence, unconscious competence என்று ஆசிரியர் தோலுரிப்பார். நினைத்தாலே நடுங்குதே சாமியோவ்!). நடைமுறையில் பயன்படுத்துகிறோம் என்பதே உங்களைப் போன்றவர்களின் நுட்பமான கேள்விகளில் தான் புலப்படுகிறது. நன்றி.

தத்துவ வேதாந்தப் பார்வையிலும் இந்த conscious unconscious விவகாரம் ஏறக்குறைய அதே உண்மைகளை அறிவுரைகளாகத் தருகின்றன. மேலை கீழை சிந்தனைகளில் சிறு வேறுபாடும் இருப்பதைக் கவனித்தேன். கிழக்கிலிருந்து (பாரதியார் பத்மநாபன் போன்ற தேசபக்தர்களுக்குப் பெருமை) போன இன்னொரு consciousம் உண்டு. subconscious. இதில் தான் சுவாரசியமே இருக்கிறது என்று நினைக்கிறேன். இன்றைய மேலைச் சிந்தனைகளில் subconscious படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. கிரேக்கச் சிந்தனையாளர்கள் கூட சறுக்கிச் சறுக்கி விழுந்திருக்கிறார்கள் subconscious substrateஐ விளக்க முனைகையில் என்று நினைக்கிறேன். அல்லது அவர்களின் சிந்தனைகளை விளக்கியவர்கள் சறுக்கினார்களோ என்னவோ?

போதிசத்துவர், உபநிசதுகள் (அஜாதசத்ரு பாலாகி உரையாடல் unconscious பற்றியதா subconscious பற்றியதா என்பது முன்பு புரியாதிருந்தால் இப்போது புரிந்திருக்கும்) என்று நில்லாமல் காமசூத்திரம் வரை.. பரந்த சிந்தனைகளில் subconsciousஐச் சேர்த்தது கீழைச் சிந்தனை - குறிப்பாக பாரத சிந்தனையாளர்கள். evelyn underhill எழுதிய mysticism என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா? இல்லையென்றால், இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய bucket listல் சேர்த்துக் கொள்ளுங்கள். 'dark night of the soul' என்று சில பக்கங்கள் எழுதியிருக்கிறார். புல்லரிக்கும்.

இந்தப் பாடலுக்கு பொருத்தமான கேள்வி. சொல்லப்பட்டிருக்கும் ஆறு நிலைகளும் conscious unconscious என்ற குடைக்குள் வருகின்றன.. subconscious? இனி வரும் நிலைகளுக்கு segue.

உங்கள் தயவில் காபி சூடு தணிந்தது கூடத் தெரியவில்லை. நன்றி.

அப்பாதுரை சொன்னது…

'tibetan book of the dead' என்று இன்னொரு புத்தகம். அதையும் படித்துப் பாருங்கள். இன்னான்றீங்க..conscious unconscious subconscious அல்லாந் தாண்டி, புச்சா meta consciousனுது புக்கு.

படித்தால் நாம் semi conscious ஆகிவிடும் அபாயம் உண்டு :)

உங்கள் கருத்தையும் அறிய ஆவல் Santhini..

Santhini சொன்னது…

சாதாரண நிலையில் நாம் கடக்கும் உணர்ச்சி பூர்வமான நிமிடங்களையே நாம் unconscious mind என சொல்கிறோம்.
உணர்ச்சி நிலைகளின் பல்வேறு நிலைப் பாடுகளையும், அதன் ஆழங்களையும், தூர இருந்து பார்க்கும், அளவிடும் தன்மை பெறும்போது அது உணர்வு நிலையாகி விடுகிறது ( conscious mind )
இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட கனவு நிலை, நனவாகும் கனவுகள், ESP, சித்து விளையாட்டுகள், மந்திரம், தாந்ரீகம், எந்திரம், பில்லி சூனியம் போன்ற நிலைகள் sub-conscious and meta conscious போன்ற நிலைகளில் வகைப்படுத்தப் படுகின்றன. முக்தி என்று வர்ணிக்கப்பட்ட நிலை - இடையில் நிற்கும் இவ்விரு நிலைகளையும் உதறித் தள்ளிவிடுகிறது. ஆயினும் முக்தியை நோக்கிய பயணத்தில், இடையில் நிற்கும் இந்த நிலைகளை அறிந்து, கடந்தும் செல்வதாக பல குறிப்புகள் சொல்கின்றன.
நிற்க. உணர்ச்சி பூர்வமாக வாழும் நிலையிலும், வாழ்வின் இறுதி நிலைகளில் ஒன்றாக கருதப்படும் உணர்வு நிலையிலும் ( ஆன்மா, தன்னறிவு என்று அது மேலும் பிரிக்கப் படுவதால் ) இந்த இடைப்பட்ட நிலைகளின் தேவை இருப்பதில்லை. ஆயினும் இத்தகைய இடைப்பட்ட நிலைகளில் சஞ்சரித்தவர்கள், இயற்கையின் விதிகளை மென்மேலும் நுண்ணுணர்வோடு கண்டறிந்து உலகத்திற்கு அறிவித்தவர்களின் பட்டியலில் உள்ளார்கள்.
ஆதலால் இதை முற்றாக அலட்சியப்படுத்துவதற்கில்லை.

ஆயினும்...துகள்களும், அலைகளுமாக விரிந்து பரவும், அனைத்து சாத்தியங்களும் நிரம்பிய இந்த உலகில், எல்லாவற்றையும் ஒன்றாகவும் பார்க்கலாம், வரையறைகளையும், எல்லைகளையும் வரைந்து தனித்தனியாகவும் பார்க்கலாம். மொழி வளர வளர வரையறைகளும் வளர்ந்து கொண்டே போகின்றன. மொழியில்லாது போயின் ......என்னாகும் ? எதைப்பற்றி யார் யாரிடம் என்ன பேசுவார்கள்?

அப்பாதுரை, நீங்கள் குறிப்பிட்ட புத்தகங்களை படித்ததில்லை இதுவரை. வாய்ப்பு கிடைக்கும்போது படித்து விடலாம்.

அப்பாதுரை சொன்னது…

மொழி வளர்ச்சியை இணைத்துப் பார்த்தது வியக்க வைத்தது. அருமை! மொழி வளர்ச்சியால் சிந்தனை வளர்ந்ததா, சிந்தனை வளர்ந்ததால் மொழியானதா? (இதை சினிமா பாட்டாக எழுதினால் ஒரு பயலும் கேட்கமாட்டான்).
முக்தி என்ற நிலை எல்லோருக்குமே கிடைக்கிறது (இது தான் கடோவின் என்னுடைய interpretation). இப்படி இருந்தால் தான் முக்தி அப்படி இருந்தால் தான் முக்தி என்ற அங்கி/காவிகளின் புருடாவை நம் வாழ்நாளில் ஒடுக்க முடியாது போகிறதென்பது வருத்தமே.

பத்மநாபன் சொன்னது…

//கீதா அவர்கள் கேட்டிருந்த கேள்விதான் நேற்றிலிருந்து என் நினைவிலும் உழன்று கொண்டிருந்தது.// அதே தான் மீனாக்‌ஷி.. இதற்கு உணர்ச்சிகள் உணர்வுகள் என பன்மை படுத்தினால் புரிவது மாதிரி இருக்கிறது என தட்டச்சி விட்டு அடித்துவிட்டேன்.. அப்பாதுரை அவர்களின் இந்த அருமையான பெரிய / எளிய விளக்கம் சில தெளிவுக்கு வழி காட்டுகிறது...உ/உ உதாரணங்களை நீரில் காணலாம்...நிலத்தில் காணலாம்..குடும்ப வாழ்வில் காணலாம் என்று சொன்ன வரிகள் திரும்ப திரும்ப படிக்க வைக்கின்றன..

ஸ்ரீராம். சொன்னது…

படிக்கும்போது எனக்கும் கீதா சந்தானம் கேட்ட அதே கேள்விதான் மனதுக்குள் ஓடியது. மூன்றாம் பாகம் எளிமை என்றாரே....என்று தோன்றியது. அவருக்கு நீங்கள் சொன்ன பதிலும் படித்தேன். நீர், தீ உவமையிலிருந்து சற்று புரிகிறது. உங்கள், சாந்தினி உரையாடல்கள் தலை சுற்றுகிறது. தொடர்கிறேன்.

Santhini சொன்னது…

"முக்தி என்ற புருடா" :) ))))))
உண்மையில் சாதாரண உணர்ச்சி நிலைகளில் வாழும் எவரும் முக்தி பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை, எட்டாக்கனி என்ற கோணத்தில்.
அவ்வப்போதோ அல்லது அடிக்கடியோ அல்லது எப்போதுமோ உணர்வு நிலை கூடப் பெற்றவர்கள் முக்தி பற்றி அறிந்து கொண்டுவிடுவதால், அவர்களும் கவலைப்படுவதில்லை . இடைப்பட்ட ஒரு மிகச்சிறிய சதவீத கூட்டமே முக்தி பற்றி கவலைப்பட்டு ஏங்கி தேடிக் கொண்டிருப்பது. அதனால் இந்த காவி அங்கிகளின் புருடாவினால் பெரிய சேதம் ஒன்றும் விளைந்துவிடாதெனவே நினைக்கிறேன்.

Santhini சொன்னது…

ஸ்ரீராம்,
எனக்குத் தெரிந்த அளவில் எளிமைப்படுத்த நினைத்தும் முடியாமல் போனதற்கு வருத்தம். கீதா அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலே , இந்த பதிவில் அனைவரும் தெளிவாக அறிந்துகொள்ள முயலுவது என எண்ணுகிறேன். என்னால் முடிந்த மிகவும் எளிய ஒரு பதிலைத் தர எண்ணுகிறேன்.
முற்றிலும் புதிதான ஓர் ஊரில் GPS or MAP or phone என எதுவும் இல்லாமல் தொலைந்து போனால் அது "உணர்ச்சி". AAA map, TOMTOM GPS, I-phone with google map with great signal and nice temperature - ல் நீங்கள் தொலைந்து போகும் வாய்ப்பே இல்லை என்பதை அறிந்து கொண்டு வேண்டுமென்றே கண்டமேனிக்கு வண்டி ஓட்டினால் அதற்கு "உணர்வு" என்று பொருள். இதுவேதான் unconsciousness and consciousness. :)

geetha santhanam சொன்னது…

துரை, முதலில் சாரி, இரண்டு மூன்று நாட்களாகக் கணிணி பக்கமே வரவில்லை. நீங்கள் மிகவும் விரிவாக, அழகாகக் கொடுத்த பதிலுக்கு நன்றி. உங்கள் மற்றும் சாந்தினி அவர்கள் உரையாடல் அடுத்த லெவெலில் இருப்பதால் மீண்டும் பல முறை படித்துவிட்டு வருகிறேன். நன்றி.

geetha santhanam சொன்னது…

சாந்தினி அவர்கள் conscious and unconscious mind மூலம் உணர்வு, உணர்ச்சி இரண்டையும் பிரித்துக் காட்டியது தெளிவாக இருந்தது. நன்றி.

பெயரில்லா சொன்னது…

//தொட்டால் சுடும் என்பதை உணர்ந்து, தொடாமலே வாழ்வது சற்றே முதிர்ந்த வாழ்க்கை என்று நம்புகிறேன். //

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.