வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/06/07

அறிவுளோர் தன்னறிவு தேடுவார்


50
நன்மையும் இன்பமும் ஒன்றென்பார் நாலறிந்தார்
தன்பெருமை தட்டாதார் புன்மையிலார் - தன்னறிவே
கொண்டுவந்த ஒன்றிரண்டில் கொண்டுபோகும் ஒன்றென்னும்
அண்டமெய் கண்டார் அவர்.

   ன்பம் நன்மை இரண்டையும் சீராக ஏற்பவர்கள் அறிவுள்ளவர்கள்; நால்வகை அறிவும் பெற்றவர்கள்; தற்பெருமை பேசாதவர்கள்; அற்ப குணம் அற்றவர்கள். பிறப்பால் வரும் மூன்று உடைமைகளில், இறப்பிலும் உடன்வருவது தன்னறிவு மட்டுமே என்ற மகத்தான உண்மையைப் புரிந்தவர்கள் (என்றான் எமன்).


நாலறிந்தார்: பெறக்கூடிய நான்கு வகையிலும் அறிவைப் பெற்று முதிர்ச்சி அடைந்தவர்
புன்மையிலார்: அற்ப குணங்கள் இல்லாதவர்கள்
கொண்டுவந்த: உடன் பிறந்த
ஒன்றிரண்டு: மூன்று
அண்டமெய்: மிகப்பெரிய உண்மை


['life: the ignorant live it, the clever master it, the wise illuminate it' - emil nolde]

    றிவில் நான்கு வகை என்பதற்குப் பல விளக்கங்கள் உண்டு.

   நான்கு வேதங்களையும் கற்றறிந்த அறிவு என்பது சாதாரண விளக்கம். மனிதரை மேம்படுத்தும் எழுத்து, பேச்சு, சித்திரம், இசை என நான்கு வகைக் கலையறிவுகள் என்பது சற்றே விவரமான விளக்கம். படிப்பறிவு, பட்டறிவு, கேள்வி, ஞானம் என்பன நான்கு வகை அறிவுகள் என்பது சற்றே ஆழமான, எனினும் குறுகிய விளக்கம். மனிதம், மிருகம், தாவரம், கிருமி என நால்வகை உயிரினங்களைச் சேர்த்து வைத்த இயற்கையைப் புரிந்து, அதற்கேற்பச் சீரான மனித வாழ்வை அமைத்துக் கொள்ளும் அறிவு என்பது விளிம்பு விளக்கம்.

   இன்னும் பரந்த, ஆழமான பொருளுண்டா?

   மனித வாழ்க்கை என்பது அறியாமையிலிருந்து அறிவுக்கான பயணம் என்பதை ஏற்றோமானால், அறியாமையும் அறிவே அல்லது அறிவின் ஒரு நிலையே என்பதையும் ஏற்க வேண்டியிருக்கிறது. அறியாமையிலிருந்து அறிவுக்கான பயணத்தின் நான்கு நிறுத்தங்கள் என்று நால்வகை அறிவைக் காண முடியுமா? காண முடிந்தால், அறிவின் ஆழமும் அழகும் புலப்படும் என்று தோன்றுகிறது.

   ஐம்புலன்களினாலும் உணர்ந்து பெறக்கூடியது புலனறிவு. இது பொதுவான, சாதாரண, அடிப்படை அறிவு. புலனுள்ளோர் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய அறிவு. புலனறிவு தேவை; எனினும், புலனறிவை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு வாழும் மனிதர்கள் வீணர்கள்.

   தன் மற்றும் பிறரின் செயல்களை நன்மை, தீமை என்றுப் பகுத்துப் புரிந்து கொள்வது பகுத்தறிவு. மனித எண்ணம் மற்றும் செயல்களில் இரு நிலைகள் உண்டு; ஒவ்வொரு நிலையும் தரக்கூடியப் பலனை ஆய்ந்தறிந்து அதற்கேற்ப நடக்கத் தூண்டுவது பகுத்தறிவாகும். புலனறிவிலிருந்துப் பகுத்தறிவுக்கு நாம் அடியெடுக்கிறோம். எனினும், நம் கண்மூடித்தனங்களினால் புலனறிவுக்கே அடிக்கடி பின்தள்ளப்படுகிறோம். பகுத்தறியும் நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ளாதவர்களுக்குக் கோளில் பொறியில் குணமில்லை எனலாம். ('உண்டு, இல்லை என்பதே பகுத்தறிவு' என்பவர்கள் புலனறிவு மட்டுமே கொண்டக் கண்மூடிகள்).

   புலனறிவையும் பகுத்தறிவையும் மட்டுமே கொண்டு வாழ முடியும். புலனறிவு-பகுத்தறிவு-புலனறிவு என்ற சுழலில் வாழ்வின் பெரும்பகுதியை அல்லது முழுவதையுமே கழிக்கிறோம். எனினும், இவை அறிவல்ல. அறிவைப் போன்ற உணர்வுகளே தவிர, அறிவல்ல. வாழ்க்கை என்பது அறியாமைக் காட்டிலிருந்து அறிவூரை நோக்கிய பயணமென்றால், புலனறிவும் பகுத்தறிவும் அறியாமைக் காட்டின் பகுதிகள். புலனறிவும் பகுத்தறிவும் அறிவல்ல என்று உணர்ந்தவர்கள் அறியாமைக் காட்டைக் கடந்தவர்கள் எனலாம். அறிவூரின் எல்லை மெய்யறிவில் தொடங்குகிறது.

   மெய்ப்பொருள் காண்பதும் அறிவு. இருமைகளின் நிலையறிந்து, இருமைக்குள் ஒருமையும் ஒருமைக்குள் இருமையும் அடங்கியிருப்பதைப் புரிந்து கொண்டு, சீரான சிந்தையும் நடத்தையும் பெறச்செய்வது மெய்யறிவு. பொய்தீர் ஒழுக்க நெறியைப் புகட்டுவது மெய்யறிவு. 'இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி, ஒளியும் இருளும் வட்டத்தின் விட்டங்கள், பிறப்பும் இறப்பும் சுழலின் வேகம்' போன்ற எளிய, ஆழமான உண்மைகளின் ஆணிவேர் மெய்யறிவு. புலனாலும் பகுப்பாலும் புரிந்தவற்றை வாழ்வின் நடைமுறையாக்கி உணர்ந்து செயல்பட வைப்பது மெய்யறிவு. மெய்யறிவைப் பெற மனமில்லாதவருக்குப் புலனறிவினாலும் பகுத்தறிவினாலும் பயனில்லை எனலாம். மனிதருக்கு அப்பாற்பட்டது மெய்யறிவு என்று சொல்லப்படுகிறது. அதன் உட்பொருள், மெய்யறிவு மனிதரால் எளிதில் பெறமுடியாது என்பதல்ல; மெய்யறிவு பெற்ற மனிதர் கடவுள் போனறவர் என்பதே.

   'ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன் றொளிக்கும்' என வரும் திருநெறிப்பாடல் தெரிந்திருக்கலாம். உமாபதித் தேவரின் கொடிக்கவி பாடலில் வருகிறது. 'ஒளிக்கும் இருளுக்கும் இடம் ஒன்றே; அறிவுக்கும் ஆணவத்துக்கும் (அறியாமை) இடம் ஒன்றே. இரண்டு சக்திகளுக்கும் ஒரே இடம் தான். ஒரு சக்தி மேலிட்டால் இன்னொன்று ஒளிந்து கொள்ளும். அறியாமை மேலிட்ட காலத்து அறிவு ஒளிந்து கொள்ளும்' என்ற பொருளில் தொடரும் பாடல், அறிவு அறியாமையை வென்று நிற்கும் என முடிகிறது. (திருமதி. கீதா சாம்பசிவம் விளக்கியிருக்கும் இந்தப் பாடலின் பின்னணிக்கதை சுவையானது).

   மெய்யறிவு கண்டவர்கள் சக்தி உடையவர்கள். தங்கள் வாழ்வின் அருமையை அறியத் தொடங்கியவர்கள். மெய்யறிவுப் பாதையெனில் 'ஒருமைக்கானத் தீவிர யோகம்' என்று பொருளல்ல. தான் பிறந்த காரணத்தைப் புரிந்து, தன் வாழ்விற்கு ஒரு இலக்கைத் தீர்மானித்து, அதற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள முனைவதும் முயற்சியில் இறங்குவதும் மெய்யறிவே. அறியாமைக் காட்டிலிருந்து வெளிவந்ததும், மெய்யறிவு நிறுத்தத்தில் இளைப்பாறுவது இயல்பே. அங்கிருந்து பயணத்தைத் தொடரலாம், என்றாலும் மெய்யறிவைக் கண்டதே வாழ்வில் பெரும் நிறைவைக் கொடுக்கும் எனலாம்.

   மெய்யறிவில், அறிவின் எல்லையில், காலடி வைத்து மீண்டும் அறியாமைக் காட்டுக்குள் அடைக்கலம் புகுவோர் எண்ணற்றோர். சிலரே தொடர்ந்து பயணித்து வாழ்வின் பொருளறிகிறார்கள்; இலக்கை அடைகிறார்கள்.

   சொந்த பந்த இன்ப துன்ப கால இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு, தன்னையும் பிறரையும் மதித்து, எளிமையான நிலையிலும் தன் வாழ்வை, தன் விருப்பம் போல் வாழந்தால் அதுவே கடவுளைக் கண்டதற்கு ஒப்பான நிறைவையும் நிம்மதியையும் கொடுப்பதால், மெய்யறிவு பெற்றவர்களைக் 'கடவுளைக் கண்டவர்' என்கிறோம்.

   கடவுளைக் காணத் தூண்டுவது மெய்யறிவென்றால், கடவுளைக் கைக்குள் அடக்குவது வாலறிவு. கடவுளைத் தேடி வெளியே போக வேண்டியதில்லை; உள்ளிருக்கும் கடவுளை உன்மனியால் உணர்வது வாலறிவு. 'கடவுளைக் கண்ட' நிலைக்கும் மேலானதொன்று உண்டென்றால், அது 'கடவுளைக் கொண்ட' நிலை எனலாம். இறையையும் தன்னையும் ஒன்றாக்கும் நிலை வாலறிவு. 'தானே இறைவன், தனக்கு இணையானவர் இல்லை, தன் சக்தியும் பெருமையும் எல்லையற்றது' என்று நினைப்பது வாலறிவு அல்ல; அது வாலறுந்த புலனறிவு. வாலறிவு என்பது, ஆணவம் கடந்த அமைதி நிலை. 'தானே இறைவன்' என்ற மகத்தான உண்மை அறிந்து ஆணவமொழித்த நிலை. வாலறிவுக்கு வழிபாடுகள் இல்லை. வாலறுந்த அறிவுக்குக் கோவிலும் வழிபாடும் பலிகளும் உண்டு. இதைப் புரியாமல், கண்மூடிப் புலனறிவுக்குள் புரண்டு கொண்டிருக்கும் மனிதம் பரிதாபமானது.

   வாலறிவாளர் பெரும் சக்தி கொண்டவர்கள். அவர்களின் சாதனைகள் காலத்தை வென்றவை. சாதாரண புலனறிவு, பகுத்தறிவுச் சாதனைகளுக்கு அப்பாற்பட்டவை. மேம்பட்டவை. அதனால் தான் கலிலியோவின் பல சாதனைகளை விட, காந்தியின் ஒரு சாதனைக்கு மதிப்பு அதிகம்.

   வாலறிவு, அறிவூரின் மையம். வாழ்வின் மெய்ப்பொருள் அறிந்த நிலை.

['..தேன் என்ன, கடிக்கும் தேள் என்ன, ஞானப்பெண்ணே? வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதையென்ன?' - கண்ணதாசன் ]

    றிவுள்ளவர்களை அடையாளம் காட்டத் தொடங்கினான் எமன். "நசிகேதா, அறிவில்லாதவர்களின் குணங்களைத் தவிர்ப்பவர்கள் அறிவுள்ளவர்கள். எந்த நிலையிலும் சீராக எண்ணிச் செயல்படுவார்கள். 'எல்லாம் நன்மைக்கே' என்ற நிலை கொண்டவர்கள் என்பதால், இன்பங்களினால் பாதிக்கப்படுவதில்லை. இயல்பாகப் பெறுவதையும் ஒதுக்குவதில்லை; தொடர்ந்து இன்பம் தேடும் முயற்சியிலும் ஈடுபடுவதில்லை.

   அறிவுள்ளவர்கள் புலனறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு, வாலறிவு எனும் நான்கு வகை அறிவினையும் பெற்றவர்கள். தங்களுக்குள் இருக்கும் அசாதாரண சக்தியைப் புரிந்து கொண்டு, அதனால் தானும் தன்னைச் சுற்றியிருப்போரும் பயனடையும் விதத்தில் நடப்பவர்கள்.

   அறிவுள்ளவர்களுக்கு எந்த வகைத் தற்பெருமையும் கிடையாது. தன்னையும் பிறரையும் மதிப்பவர்கள். தன்னுடைய பெருமையைப் பிறரின் பெருமையாக எண்ணும் பக்குவமுடையவர்கள்.

   ஆறு வகை நற்குணங்களைக் கொண்டவர்கள். ஆறு வகைத் தீக்குணங்களைக் களைந்தவர்கள். அறிவுள்ளவர்களிடம் அற்பமான எண்ணமோ செயலோ காணமுடியாது" என்றான் எமன்.

   நசிகேதன் சிந்தித்தான். அறிவுள்ளவரைப் பற்றி அறிந்து கொண்டதில் அவனுக்கு மகிழ்ச்சி; எனினும், ஒரு வெறுமையை உணர்ந்தான். அறிவில்லாதவர்களுக்கு எதிர்நிலை என்பது புரிந்தாலும், 'அறிவென்பது இதானா?' என்ற அசாதாரணம் அவன் மனதில் தோன்றியது. 'இதற்கா இவ்வளவு தூரம் வந்தோம்?', 'இவ்வாறு நடந்து கொண்டால் பிறவிப்பிணி தீருமா?' என்று பல கேள்விகள் அவன் மனதுள் ஓடின. "ஐயா, அறிவுள்ளவர்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள்" என்றான்.

   நசிகேதனின் எண்ணங்களைப் படித்த எமன், தன் மாணவன் அடங்கா அறிவுப்பசி கொண்டவன் எனப் புரிந்து கொண்டான். "நசிகேதா, அறிவுள்ளவரின் மிகப் பெரிய அடையாளத்தைச் சொல்கிறேன், கேள். பிறப்பால் பெறும் மூன்று சொத்துக்களில் தன்னறிவு மட்டுமே இறக்கும் பொழுதும் உடன் வருவது என்பதை அறிந்தவர்கள், அறிவுள்ளோர்" என்றான்.

   "பிறப்பால் வரும் சொத்துக்களா? அப்படியென்றால்?" என்று கேட்டான் நசிகேதன்.

   "மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் கொண்டு வருபவை மூன்று. முதல் சொத்து தாய்-தந்தை என்ற உறவு. இரண்டாவது, உயிர்த்துடிப்பு. மூன்றாவது, உள்ளறிவு. இவை மூன்றுமே பிறப்பால் உண்டாகும் சொத்துக்கள். பிற செல்வங்கள் சொந்தங்கள் எல்லாம் இடையில் சேர்ப்பவை, தொலைப்பவை. மனிதர்கள் இறக்கும் தறுவாயிலும் பிறப்பால் பெற்ற மூன்று சொத்துக்களுக்கும் உடைமையாளராக, உரிமையாளராகவே இறக்கிறார்கள்.

   இந்த மூன்றில் 'உண்டான' இரண்டு, பெற்ற உறவும் உயிர்மூச்சும் ஆகும். அவற்றை மாற்றவோ சீராக்கவோ மனிதரால் முடியாது. 'உருவாகக்' கூடியது உள்ளறிவு மட்டுமே. அதனை மட்டுமே மனிதரால் தேடியறிந்து தன் விருப்பம் போல் உருவாக்கிச் சீராக்க முடியும். பிறப்பிலிருந்து இறப்பு வரை, அறிவுள்ள மனிதரின் ஒரே குறிக்கோள், தன்னறிவைத் தேடி வளர்த்துத் தனக்கும் பிறருக்கும் பயனுற வாழ்வதே. 'எப்படி வாழ்ந்தோம் என்கிற முத்திரையைப் பதிக்க வல்லது தன்னறிவு' என்பது அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.

   பிறப்பால் பெற்ற மூன்று உடைமைகளில், இறக்கும் பொழுது உயிர்த்துடிப்பு நின்று விடுகிறது; உயிர் நின்ற கணமே உடன் வந்த பெற்றோர் உறவும் முறிந்து விடுகிறது. அந்நிலையில், இறக்கும் தறுவாயில், தன்னுடன் வருவது தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள்" என்றான் எமன்.

   நசிகேதனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. ஒருமையும் ஒண்குணங்களையும் கடந்தத் தன்னறிவின் வீச்சைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினான். தன்னறிவே தான் தேடிய விடை என்பது அவன் உள்ளத்தில் உருக்கொள்ளத் தொடங்கியது. "ஐயா, தன்னறிவு என்றால் என்ன? அதன் இலக்கணத்தையும் தன்னறிவு பெற்றோரின் குணங்களையும் பற்றி மேலும் அறிய விழைகிறேன்" என்றான்.

27 கருத்துகள்:

ஜெகதீஸ்வரன்.இரா சொன்னது…

arumaiyaana thoguppu thoola..

ennai unarththuvadhu pol irundhadhu, kulambiya manathutan iruntha enakku intha pathivu oru valigaatti..

meenakshi சொன்னது…

வாழ்கையில் அறியாமையிலிருந்து அறிவுக்கான பயணத்தின் நான்கு வகை நிறுத்தங்கள் எவை என்பதும், அதை பற்றிய உங்கள் விளக்கமும் மிக மிக அருமை. உங்களின் தெளிவான விளக்கம் எண்ணத்தை தெளிவு படுத்துகிறது. இது ஒரு சிறந்த பதிவு!

ராமசுப்ரமணியன் சொன்னது…

ஐம்பது கண்டாச்சா? வாழ்த்துக்கள். செய்யுளைச் சொன்னேன் சார்!

உங்கள் வழியில் கடோவை ரொம்ப அழகாகச் சொல்கிறீர்கள். இந்த இடுகை பிரமாதம் அப்பாதுரை. "கொண்டு வந்த மூன்றில் கொண்டு போகும் ஒன்று" என்ன சொல்வதென்றே தெரியாவில்லை. இதை நினைக்கும் பொழுது உங்கள் எண்ணத்தில் ஒரு நரம்பாக இருந்திருக்கலாமெ என்று தோன்றியது :--)) தொடருங்கள்.

kashyapan சொன்னது…

அப்பதுரை அவர்களே!புலனறிவு,பகுத்தறிவு,மெய்யறிவு,வாலறிவு ---எங்கேயோ ஒரு நெரடல் தெரிகிறது.பளிச்சென்று பின்னூடமிடமுடியாத இடுகை .ஆனாலும் அபூர்வமன சிந்தனைத் தெளிவு.உங்கள் வாதத்தை முழுமையாக ஏற்க முடியவில்லை. மெலும் மெலும் விவதித்து தெளிவடைவோம். வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

பத்மநாபன் சொன்னது…

வள்ளுவரின் முலம் கிடைத்தது இந்த ’’வாலறிவன்’’ அறிமுகம்...

கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றாழ் தொழாரெனின்.

நம்முள்ளே இருக்கும் அடிப்படை அறிவை போற்ற வில்லை எனும் பொழுது என்ன கற்று என்ன பயன்..

அறியாமைக் காட்டிலிருந்து
அறிவூர் பயணம் அருமையாக இருக்கிறது.. எமன் மையத்தை அழுத்தமாக நெருங்குவது போல் உள்ளது..

கவி அழகன் சொன்னது…

ஐயா வணக்கம் நாங்க எல்லாம் சின்ன பிள்ளைகள்

சிவகுமாரன் சொன்னது…

நால்வகை அறிவு பற்றிய விளக்கம் அருமை. நிறைய சிந்திக்க வைக்கும் பதிவு. ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை.
வாலறிவு பற்றி இப்படி ஒரு விளக்கம் படித்தேன். சரியா சொல்லுங்கள்.
The mingling of life in a body evolves knowledge. Organs provide knowledge within their capacity, i.e. not beyond. Experience is gained by the impact of the ecology and society. The knowledge and experience are called ‘arivu’ in Tamil. You have some knowledge and experience of your own. I have some knowledge and experience of my own. He has some knowledge and experience of his own. A cow has its knowledge and experience of its own. Water, air and heat flow according to their knowledge and experience. The totality of all the knowledge and experience are called ‘vaalarivu’ in Tamil.

பத்மநாபன் சொன்னது…

வாலறிவு - கடை அறிவு அதாவது முற்றறிவு என கொள்ளலாமா ? இது தான்... இதை தாண்டி அறிய ஒண்ணுமில்ல எனும் நிலை

geetha santhanam சொன்னது…

'மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி, என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் அதுதான் என் கட்சி' என்றும் கண்ணதாசன் கூறியிருக்கிறாரே.
உங்கள் வெண்பாவையும் விளக்கத்தையும் மீண்டும் மீண்டும் படித்தேன். அருமை.

பத்மநாபன் சொன்னது…

//கடவுள் நம்பிக்கையில்லாதவன் // இந்த முகவரியை தொலைத்திருப்பீர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன் அதற்க்காக ‘’ நம்பிக்கை உள்ளவன்’’ முகவரியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நினைக்கவில்லை..

எதாவது முத்திரை நிச்சயம் தேவையா... கடோவை பிரித்து மேய்பவர் இதை கடக்கவேண்டுமே...

அப்பாதுரை சொன்னது…

வருக
- ஜெகதீஸ்வரன் (வழிகாட்டி மிகப்பெரிய வார்த்தை.. தகுதி எனக்கில்லை. எனினும், நன்றி),
- meenakshi (மிகவும் நன்றி),
- ராமசுப்ரமணியன் (எண்ணத்தில் நரம்பு கேள்விப்பட்டதில்லை..மிகவும் நன்றி சார்),
- kashyapan (நன்றி சார்.. நெரடல் புரியவில்லை..முயற்சிக்கிறேன். இன்னும் இரண்டு para எழுதி வைத்திருந்தேன், நீளம் காரணமாக எடுத்து விட்டேன், ஒரு வேளை அதான் காரணமோ? என்ன/எங்கே நெருடுகிறது என்று கோடி காட்டினால் மேலும் கருத்துப் பரிமாறிக் கொள்ளலாம். நெருடலில் வியப்படையாதீர்கள்.. என் சரக்கு அவ்வளவுதான் சார்!),
- பத்மநாபன் (வள்ளுவரிடமிருந்து வாங்கினால் உங்களுக்குச் சொல்லாமலா? குறளுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி)
- யாதவன் (வருக வருக.. நாம் எல்லாருமே சின்னப் பிள்ளைகள் தானே?)
- சிவகுமாரன் (எங்கே பிடித்தீர்கள் விளக்கம்? பிரமாதம்!)
- geetha santhanam (பொருத்தமான கண்ணதாசன் வரிகள்.. எனக்குத் தோன்றவில்லை. மிகவும் நன்றி. கண்ணதாசன் நிறைய சொல்லியிருக்கிறார், உண்மை)

இது அறிவு என்று prescribe செய்யும் அனுபவமோ தகுதியோ எனக்கு இல்லை. இது அறிவு என்று describe செய்யும் ஆசையில் எனக்குத் தோன்றியதை எழுதியதன் விளைவு, இந்தப் பதிவு.

வாலறிவு என்பது கடவுளுக்கு உரியது என்று இறையிலக்கியங்கள் சொல்லும் பொழுது, என்னைப் போல் கடவுள் நம்பிக்கையில்லாதவன் கத்தி மேல் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. தனக்குள் கடவுள் என்ற படிமத்தை ஏற்றுக் கொண்டபோது, வாலறிவன் நிலை என்பது அறிவு முதிர்ச்சியில் ஒரு மைல்கல் என்று ஒரு எளிமையான கோணம் புலப்பட்டது. மெய்யறிவு என்பது தன்னை அடையாளம் காண வைக்கும் ஒரு நிலை என்பது எனக்குப் புரிந்தது (போலிருந்தது:). ஆனால், அதற்கு மேலும் ஒரு படி இருக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னை அறிந்து கொண்டு என்ன செய்வது? அதனால் என்ன பயன் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். (அடுத்த பதிவின் கண்ணதாசன் மேற்கோள் :) Nanum கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் கிடைத்தது போலிருந்தது. புத்தன் யேசு காந்தியின் மரபணுவில் வாலறிவு ஒட்டிக்கொண்டிருப்பது போல் பட்டது.

நாலறிவு என்பது வேதங்களின் அறிவு மட்டுமே என்பதை ஏனோ என்னால் ஏற்க முடியவில்லை - இன்றைய நாளில் நான்கு வேதங்களின் அறிவு உருப்படாத அறிவு என்ற ஆணவ எண்ணம் தோன்றியது. அதே நேரம் கடோ என் கருவல்ல என்பதையும் உணர்ந்தேன். இதைப் படிக்கவும் இதைப்பற்றி எழுதவும் கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ந்து நன்றியுணர்வோடு.. அதே நேரம் என் பாணியில் சொல்ல எந்த அளவுக்குச் சுதந்திரம் எடுத்துக் கொள்வது என்ற சங்கடத்துடன் எழுதியதால் சற்று முரணாக வந்திருக்கலாம். அப்படியென்றால் மன்னிக்க வேண்டும். எனக்குத் தோன்றிய இவை எல்லாவற்றையும் புரட்டி எழுதினேன். புலனறிவு...வாலறிவு எதுவுமே புதிதில்லை. பிற இறையிலக்கியங்களிலும் தத்துவ நூல்களிலும் எழுதப்பட்டவையே.

நசிகேதன் கதையையும் என் editorialஐயும் தனியாக வைத்து இது வரை சமாளித்து வந்தேன். இந்தப் பதிவில் இரண்டையும் கலந்து விட்டேனோ?

விடிந்ததும் மேலும் எழுதுகிறேன் :)

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் சொல்வது சரியே பத்மநாபன். கடக்க வேண்டும் தான்.
உண்டு இல்லை என்ற கட்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லை. கட்சி சார்பு அவரவர் விருப்பம் என்பதே என் கருத்து.
அதே நேரம் ஒரு அருமையான கருத்து ஒரு கட்சியின் சார்பில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது அதை எப்படி பொதுவில் வைப்பது என்ற சங்கடம் தோன்றுகிறது இல்லையா? இந்தச் சங்கடம் நான் எந்தக் கட்சி என்பதால் வருவது அல்ல என்று மட்டும் சொல்லிக்கொள்ள அனுமதி கொடுங்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

இந்தப் பதிவு பல ஆழமான விஷயத்தை தொட்டுள்ளது என்று சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில் உங்கள் பதில்கள், குறிப்பாக பத்மநாபனுக்கு நீங்கள் சொல்லியிருக்கும் பதிலைப் படித்த போது கமலஹாசன் பேசுவது போல் இருந்தது என்பதை சொல்லிக் கொள்ள என்னையும் அனுமதிப்பீர்கள் என்றே நம்புகிறேன்!

அப்பாதுரை சொன்னது…

வருக ஸ்ரீராம். கமலகாசன் பேசுவது போலவா? கொஞ்சம் விளக்கமா சொல்லியிருக்கக் கூடாதோ? சப்பாணியா கல்யாணராமனா பிரசன்னாவா?

பத்மநாபன் சொன்னது…

தசாவதார கோவிந்த் ? ஆளவந்தான்? என கொஞ்சம் சுத்தவிட என்னையும் அனுமதிப்பீர்கள் என்றே நம்புகிறேன்....

பத்மநாபன் சொன்னது…

கமலஹாசனை இழுத்துள்ளோம் போக்கு வரத்து நெரிசல் தாண்டி ஆர்.வி.எஸ் வருகிறாரா பார்க்கலாம்...

அப்பாதுரை சொன்னது…

இன்னும் கொஞ்சம் விவரம். மெத்தப் படித்தப் புரிந்த ஞானி அல்ல; உங்களுடன் நானும் கலந்து பயணித்து அறிந்து கொள்கிறேன் என்பதை நினைவில் வைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

இந்த நசிகேத வெண்பாவின் செய்தி, 'கொண்டு வந்த மூன்றில் கொண்டு போகும் ஒன்று' என்பதாகும். நாலறிவல்ல. இருந்தாலும் நாலறிவைப் பற்றிய கருத்துக்கள் சூடுபிடிப்பதால், அதைப் பற்றிப் பேசுவோம். (தூங்கி எழுந்ததும் கொஞ்ஞ்ஞ்சம் தெளிவு பிறக்கிறது - கலப்படமில்லாத அரேபிகா காபி கூட காரணமாக இருக்கலாம் :).

பத்மநாபன் சொல்லியிருக்கும் "இதை தாண்டி அறிய ஒண்ணுமில்ல எனும் நிலை" என்ற கருத்து பிடித்திருக்கிறது. சரியா தெரியவில்லை, பிடித்திருக்கிறது. அறிவு என்பதற்கு முடிவு கிடையாது என்று நினைக்கிறேன். எனினும், ஒரு நிலையில் சாதாரண அறிவுகள் முடிந்து விடுவதால், முற்றறிவு என்பதும் பொருத்தமே.

வால் என்பதற்கு தூய்மை, வெண்மை, மிகுதி என்று பல பொருளுண்டு. அறிவுக்கு அடைமொழியாகும் பொழுது, முழுமையான, விளக்கத்திற்கப்பாற்பட்ட, தூய்மையான என்ற பொருளில் அறிவை அழகுப்படுத்திக் காட்டுகிறது. வெண்மை என்ற நிறம் சாதாரணம் என்று நினைக்கையில் சாதாரணம் தான். கண்ணுக்குப் புலப்படும் அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியது என்று புரிந்ததும் வெண்மையின் அசாதாரணம் உறுத்துகிறது. அந்த வகையில் வால் என்பது பொருத்தமான அடைமொழி - தன்னறிவு வாலறிவோடு நிறைவு பெறுகிறது எனலாம் (என்பேன்?).

புலனறிவில் தொடங்கிப் படிப்படியாகப் போக வேண்டியதில்லை. ஒன்றை விட்டொழித்து இன்னொன்றைத் தக்க வைக்க வேண்டுமென்பதில்லை. ஒவ்வொரு அறிவு நிலையில் இயங்கும் பொழுது அதற்கான வெளிப்பாடுகளைப் புரிந்து கொண்டு இயங்கலாம் என்பதே இங்கே செய்தி. புலனறிவை வைத்தே வெளியுலகின் தொடர்பு ஏற்படுவதால், நம் அறிவை வெளிப்படுத்த புலனறிவு ஒரு வாகனமாகிறது. மெய்யறிவு நிலையில் இயங்கும் மனிதன் புலனறிவின் உந்துதல்களை உடனே அறியத் தொடங்கி அதற்கேற்ப நடந்து கொள்ள முடியும். அப்படி நடக்காத பொழுது, புலனறிவில் மட்டுமே இயங்கும் பொழுது, அறிவில்லாதவர் போல் நடக்கத் தொடங்குகிறான்.

புலிவாலைப் பிடித்துப் விட்டேன். புலிவாலா, வால் புலியா?

-தொடரும்

அப்பாதுரை சொன்னது…

நசிகேதன் கதைக்கும் என் கருத்துக்கும் வருகிறேன்.

கடோவின் பின்னொரு பகுதியில் 'அறிவுகள்' பற்றி வருகிறது. நாலுக்கு மேல் கொசுறாக இரண்டு வைத்திருக்கிறார்கள். இதற்கே இப்படி என்றால், ஆறறிவை எப்படி சாமி விளக்கப் போகிறேன்?! ஆறறிவு என்றால் புழு,பறவை... மனிதப் பரிணாம அறிவல்ல - அது எளிது. என்னால் கூட விளக்க முடியும். கடோவின் ஆறறிவு, சூட்சும சமாசாரம். (கொஞ்சம் உடான்ஸ் என்பது என் எண்ணம். ஆற்றுக்கு வந்தபின் கடப்பதைப் பற்றி யோசிக்கிறேன் :)

கடோவின் பின்னொரு பகுதியில் நாலறிவு வருகிறது என்றேனே - அதை முன்னோட்டமாக இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறேன். இந்த அறிமுகம் இங்கே அவசியமானதென்று நினைத்தேன் (அதனால் வந்த வினை? வடமொழி போல் திடுப்பென்று நாலையும் ஆறையும் இறக்கி வைக்க மனமில்லை :)

வடமொழியின் சொல்/பொருள் ஆழங்கள் பிரமிக்க வைக்கின்றன. எல்லாவற்றுக்கும் என்னமாகத் தனித்தனி சொல்/பொருள் வைத்திருக்கிறார்கள்! கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும், தமிழில் நல்ல வேளையாக எத்தனையோ மொழிச்சித்தர்கள் இருந்ததால் ஓரளவுக்குப் பிழைத்தோம். ஆங்கிலத்தில் இதை விவரிக்கவே முடியாது என்று தோன்றுகிறது (எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்).

விஷயத்துக்கு வருகிறேன். எமன் நான்கு அறிவுகளை இந்த்ரியம், மனம், புத்தி, ஆத்மா என்று விவரிக்கிறான். இந்த்ரியம்: புலனறிவு. மனம்: ஆய்ந்தறிவதால் பகுத்தறிவு. புத்தி: உண்மையை உணர்ந்து சீராகச் செயல்பட வைப்பது - மெய்யறிவு. ஆத்மா: மூன்றையும் கடந்த உள் நிலை; தன்னறிவு. (வாலறிவு. ஹிஹி)

எமன் இத்தோடு விடுகிறானா? இன்னும் கொஞ்சம் வேணுமா என்கிறான். ஆத்மா என்ற நிலை 'மகத்'துவம் என்கிறான். அதற்கு மேலே 'அவ்யக்தம்:'புலப்படாத ஒன்று' என்கிறான். அதுக்கும் மேலே?.. ம்ம்ம்.. பட்டு...'புருஷம்:எல்லாம் அடங்கிய நிலை' என்கிறான் எமன்.

there you go! ஆறறிவு - கடோ ஸ்டைல். (அந்தப் பகுதி எழுதும் வரை தேறிவருமா பார்ப்போம். இல்லாவிட்டால், சாரத்தையாவது இங்கே கொடுத்தேனே!)

ஆறறிந்தார், நாலறிந்தார் - இரண்டுக்கும் இடையே கொஞ்சம் குழம்பியிருந்தேன் (நிறையவே). ஆத்மா வரை புரிந்தது. அதற்கு மேல் உதைத்தது. அவ்யக்தம், அதாவது புலப்படாத நிலை, எனும் பொழுது - அதற்கு மேல் ஒன்று உண்டு என்பது எமனுக்கு எப்படிப் புலப்பட்டது? பாழாய்ப் போன கேள்வி என்னை விடவில்லை. அப்படியே கண்மூடித் தொடர்ந்தாலும் புருஷம் என்பது எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய நிலை - குறிப்பாக சிவம்-விஷ்ணு எனும் பொழுது சறுக்கி விழுந்தேன் (ஆதி சங்கரர் கூட இதைச் சொன்னதாகச் சொல்கிறார்கள்). எமன் கடவுள் பெயரைச் சொல்லத் தொடங்கும் சில இடங்களில் கசகச என்றது.

தமிழ் இறையிலக்கியங்களில் தேடிய பொழுது புலனறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு வரை சுலபமாகக் கிடைத்தது. தமிழர்கள் கண்மூட மறுப்பவர்கள் அல்லவா? அவ்யக்தம் பற்றி நான் தேடியவரை ஒன்றையும் காணோம். மெய்யறிவு கொடப்பா கந்தா கடம்பா என்பதோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள் என்று படுகிறது. புருஷம் என்பதற்கு இதுவரை தமிழில் நான் எதுவும் பார்க்கவில்லை (புருஷம் என்பதை அப்படியே அபேஸ் பண்ணி சிலர் எழுதியிருப்பதைத் தவிர்த்து). தேடல் முடியவில்லை, தொடரப்போகிறேன். கைவசம் நிறைய நேரமிருக்கிறதே, யோசிப்போம் என்று புத்தகங்களையும் சிந்தனையையும் புரட்டிய போது வாலறிவன் தான் புருஷன் என்று தமிழர்கள் முடிவு கட்டினார்கள் என்று எனக்குத் தோன்றியது. புலப்படாத ஒன்று என்றை இழுத்து அதற்கு மேல் புலப்படும் ஒன்று என்பானேன்? தேவையில்லை என்று எளிமைப்படுத்தி விட்டார்கள். அதான் சொன்னேனே, தமிழர்கள் எளிதில் கண்மூட மறுப்பவர்கள் என்று :)

ஏற்கனவே 'அவ்யக்த' நிலையிலிருக்கும் நான், இதற்கு மேல் இதை இழுக்க மனமில்லாமல், நாலறிவோடு நிறுத்திக் கொண்டேன்.

இருந்தாலும், என் இஷ்டத்துக்குக் கடோவைப் புரட்டிப் போட்டால் கண்ணியமில்லை என்பது புரிகிறது; கடோ இறையிலக்கியமே. முடிந்தவரை அப்படியே சொல்லி - commentaryக்கு மட்டும் என் பகுதியை எழுதுகிறேன். அதுதான் இந்த formatன் - இரண்டு பகுதிகளின் - background. இந்தப் பாடல் வரை சமாளித்தேன்.

பின்னூட்டங்களைப் படிக்கும் பொழுது இந்தப் பின்னணியை எழுதத் தோன்றியது. நீளத்துக்கும் குழப்படிக்கும் மன்னிக்கவும்.

பத்மநாபன் சொன்னது…

புலி வாலா...வால் புலியா எவ்வளவு பொருத்தமான similarity ..

//தமிழர்கள் கண்மூட மறுப்பவர்கள் அல்லவா // பாராட்டா திட்டா...

வடமொழியின் சொல்/பொருள் ஆழங்கள் பிரமிக்க வைக்கின்றன.

அடுத்து வடமொழி பாடம் ஆரம்பித்தால் தமிழின் பெருமையை இன்னமும் தெரிந்து கொள்ளலாம்

( அவ்யக்த நிலை = புலப்படாத நிலை)

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! இந்த சிவகுமரன் சொல்வதை மனம் ஏற்கச்சொல்கிறது. அறிவு மறுக்கிறது. ஐயா ! பலமரம் கண்ட தச்சன் ஒருமரத்தையும் அறுக்க மாட்டான் என்பார்கள்.
அறிவு பற்றி கீதாசாரியன் சொல்கிறான் .பதினென்றாவது யோகமென்ரு நினைக்கிறேன்.க்ஷேத்ர க்ஷ்த்ரக்ஞ வைபாவ யோகம் என்பார்கள்.அறிவு ஞானம் என்று விவாதிக்கும்.அறிவு என்பது அனுபவத்தின் சாறு.அனுபவம்,அனுபவிப்பவன்,அனுபவிக்கப்படுவது என்ற மூன்று மிருக்கவேண்டும். அனுபவிப்பவனும் நான் தான். அனுபவிக்கப்படுவதும் நான் தான் .அதனால் கிடைக்கும் அனுபவமும் நான் தான் என்கிறான் கிதாசாரியன். இது தான் உள்ளறிவா? இதுதான் வாலறிவா?
அப்பாதுரை என்று உம்மை அழைக்கிறேன். நீர் இருக்கிறீர். இருப்பதால் உம்மை அப்பாதுரை என்கிறேன். நீர் இல்லாவிட்டால் அழைக்கமாட்டென். எது முக்கியம் நீர் இருப்பதா? அப்பாதுரையா?நீர் மனிதர். மனிதர் என்ற பிரஞை உள்ளது.யானைக்கு தான் யானை என்ற ப்ரக்ஞை இருக்குமா? இருக்கும்.இருக்காது.இரண்டுமே சரிதான்.யானை தன் வம்ச விருத்திக்கு மற்றொரு யானையைத்தான் தேடும். மற்றப்படி...? அது தூண்டுதல் உணர்வுதானே? யானைக்கு யானை என்று பெயர் வைத்தது யார் ? மான்,புலி சிங்கம் என்று பெயர் வைத்தவன் மனிதனே. இந்தப் பாத்திரமிவனுக்கு மட்டும் எப்படிக்கிடைத்தது?
, மற்ற உயிரினங்கள் இயற்கையோடு இயற்கையாக இருந்த போது மனிதன் இயற்கையோடு இருந்து கொண்டு இயற்கையிலிருந்து தனித்தும் இருக்க முற்பட்டான்.he is a subject for himself and also an object for him also.. நாம் உலகத்த புரிந்து கொள்வது நம் புலனுணர்வால் மட்டுமே அதன் தீட்சண்யத்திற்கு ஏற்றபடி நம் புரிதல் சிறப்படைகிறது.உயிரினங்களில் கண்ணிலாத வொவ்வால் காதிலாத பாம்புகள் வாழ இயற் கை ஏற்பாடு செய்துள்ளது.மனிதனுக்குமட்டும் கூர்மையான புலங்கள் கிடைத்தன. காரனம் மற்ற உயிரினங்களுக்கு கிடைகாத ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் முன் கால்கள் கைகளாக மாறியது.அவன் உழைக்கலானான். இது அவனுடை ய பரிணாம வளர்ச்சியில் மிகப்பெரிய பாய்சலைகொடுதது. இந்த அனுபவம் அவன் அறிவை விருத்தி செய்தது. விசாலமாக்கியது.
நான் எழுதிக்கொண்டே பொவேன் நான் ஒரு மூடன் .இறுதியில் ஒரு கேள்வி.
Are you a being because you are a humanbeing.Or are you a human being because you are a being? முடித்து விடுகிறேன் .Quite confusing---then that is fine!
வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

அப்பாதுரை சொன்னது…

சுவையான கருத்துக்கள், காஸ்யபன்.
தத்துவம் பிசின் போன்றது - வழுக்கவும் செய்யும், பிடிக்கவும் செய்யும். Forms, Problem of universals படித்திருக்கலாம் - கிரேக்க கீதை? (philosophy 101 வகுப்பை இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது :)

இருக்கிறேனா இல்லையா என்பதைக் கண்டறிய தத்துவமேதை தேகார்ட் சொல்லியிருக்கும் வழி எனக்குப் பிடித்தமானது: 'cogito, ergo sum'.
i think, therefore i am! இதில் சந்தேகமே வரக்கூடாது என்பது என் பணிவான கருத்து!

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! இந்திய தத்துவ மரபில் சர்ப்ப கந்த யோகமென்பார்கள் இருட்டில் கயிறைப் பார்த்து பாம்பு என்று பதறுவது. பின்னர் பாம்பைப்பார்த்து கயிறு என்று நினைத்து மிதித்து வைப்பது. பாம்பு இல்லாமலேயே நாம் நினைப்பதால் இருப்பது . கயிறு இல்லாமலேயே நாம் நினைப்பதால் இருப்பது.இதனை சங்கரரின் மாயாவாதத்தோடு இணைப்பார்கள். பாம்பு என்று ஒன்று பார்க்கப்பட்டது.கயிறும் பார்க்கப்பட்டது. பாம்பும் கயிறும் இருப்பது உண்மை. இல்லாத ஒன்றை நினைக்கமுடியாது அதனால்தான் இல்லாத கடவுளுக்குக் கூட கண், மூக்கு, காது என்றும் யானைமுகம்சிங்கமுகமென்றும் வைத்திருக்கிறொம்அது நம் ஐம்புலன் களால் உணராத ஒன்றை நினைக்க முடியாது .இங்கு being தான் முக்கியம். I am alive and kicking. therefore i am thinking.சரிதானா? வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

அப்பாதுரை சொன்னது…

interesting view, காஸ்யபன் சார். சிந்திக்க வைக்கிறீர்கள்.

சிந்திக்க முடிகிற ஒன்றை உணராமல் இருக்க முடியும்; அதனால், உணராத ஒன்றை சிந்திக்க முடியும் என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்லும் கடவுள்தனமே ஒரு உதாரணம் போல் படுகிறது.

சிவகுமாரன் சொன்னது…

காஷ்யபன் அய்யாவின் கருத்துக்கள் சுவையாக இருக்கின்றன. என் 21 ஆவதுவயதில் என் சித்தாப்பா சுந்தர பாரதியுடன் கன்னியாகுமரியில் நடந்த, ஒரு கம்யூனிச பயிலரங்கத்திற்கு சென்றிருந்தேன், மூன்று நாட்கள்- லெனினியம் மார்க்சியம் , இந்திய தத்துவங்கள் என்று வகுப்புகள் நடந்தன. இது போன்ற விவாதங்கள் எல்லாம் அங்கே நடந்தன. காஷ்யபன் அய்யாவின் கருத்துக்கள் எனக்கு பழைய நாட்களை நினைவூட்டின.

மோகன்ஜி சொன்னது…

//வாலறிவு என்பது கடவுளுக்கு உரியது என்று இறையிலக்கியங்கள் சொல்லும் பொழுது, என்னைப் போல் கடவுள் நம்பிக்கையில்லாதவன் கத்தி மேல் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.//

இதைத்தான் "வாலுபோச்சு கத்தி வந்தது" என்று சொல்கிறார்களா...

அப்பாதுரை சார்.. நிறைய சிந்தித்து இதை எழுதி வருகிறீர்கள்.. உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது..

அப்பாதுரை சொன்னது…

//
இதைத்தான் "வாலுபோச்சு கத்தி வந்தது" என்று சொல்கிறார்களா...

முறுவல், மோகன்ஜி.

ராமசுப்ரமணியன் சொன்னது…

யப்பா! ஒரு மணி நேரம் இந்த பதிவை படித்து புரிந்து கொள்ள! மோகன்ஜி சொல்வது போல் உங்கள் உழைப்பு தெரிகிறது. புலிவால் அற்புதம்! வாழ்த்துக்கள் அப்பாதுரை.