வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/06/03

அறிவிலார் எமன் வலையில் விழுவார்


49
இன்பங்கள் உண்டு இதுவே உலகென்பார்
அன்னோ! அறிவுச் சிறாரவர்! - அன்னாரோ
உன்மனி யாண்டும் பெறாது உருக்குலைவார்
என்வலையில் மீண்டும் விழுந்து.

   ன்றைக்கு, இப்போது என இன்பங்களை நுகர்ந்து வாழும் அறிவற்றவர்கள், இதுவே உலகம் இதைத்தவிர வேறு உலகமில்லை என்று, விவரம் தெரியாத குழந்தைகள் போல் எண்ணி அறியாமையில் உழல்வார்கள். அந்தோ! உயர்ந்த யோகநிலையினால் அடையக்கூடியத் தன்னறிவை அவர்கள் எந்தக் காலத்திலும் எந்தப் பிறவியிலும் பெற வழியில்லாமல், பிறவிக்குப் பின் பிறவியாக எடுத்துக் கலைத்து, மீண்டும் மீண்டும் என் பிடியில் சிக்குவார்கள் (என்றான் எமன்.)


அன்னோ: பரிதாபச் சொல் (ஐயோ, அந்தோ)
சிறார்: சிறுவர், வளர்ச்சி குன்றியவர், சிறுமையானவர்
உன்மனி: உள்ளிருக்கும் சக்தி, யோக அறிவு, மெய்யறிவு
யாண்டும்: எங்கேயும் எப்போதும் (எந்த உலகிலும், எந்தப் பிறவியிலும்)


['if ignorance is bliss, why aren't more people happy?' - thomas jefferson ]

    வரவருக்குத் தனி அலகு என்றாலும், பொதுவாக 'பொருண்மை அல்லது உலகாயதம் (materialism) எந்த அளவுக்கு நம்மைப் பாதிக்க அனுமதிக்கிறோம்?' என்ற கேள்வியை அடிக்கடி கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. 'பதில் தேடி ஏதும் செய்கிறோமோ?' என்பது இரண்டாம் படி. கேள்வி கேட்கும் முதல் படியே நம்மில் பலருக்கு மிக உயரமாகத் தோன்றுகிறது.

   'rapture ready' என்று ஒரு மதக்குழு. அதன் தலைவர், கேம்பிங் என்று ஒரு மதவாதி. "2011ம் ஆண்டு மே மாதம் 21தேதி மாலை ஆறு மணிக்கு தேவன் வருவார்; அன்றைக்கு 200,000 பேர்களுக்கு தேவனின் ராஜ்ஜியத்திற்கு இலவசப் பயணச்சீட்டு கிடைக்கப் போகிறது; மற்ற எல்லோருக்கும் அவரவர் பாவங்களின் சம்பளம் கிடைப்பதுடன், உலகமும் அழியப் போகிறது" என்று கிட்டத்தட்ட ஒரு வருடமாக உலகமெங்கும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வந்தார். 1970லிருந்து பிரசாரத்தை விட்டுவிட்டுத் தொடங்கினாலும், சமீப இரண்டு ஆண்டுகளாக இவரது பிரசாரம் தீவிரமானது. சென்ற ஒரு வருடத்தில் மட்டும் இவரது பிரசார நிறுவனம் ஏறக்குறைய 11 மிலியன் டாலர் நன்கொடைகள் பெற்றிருக்கிறது.

    தேவ ராஜ்ஜியக் கனவில் இவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல், அல்லது அறிந்து, செய்த செயலின் விளைவு என்ன? மே 21ம் தேதி வந்து போனது. தேவனைக் காணோம். உலகம் அழியவில்லை. பாவங்கள் குறையவில்லை. ஆனால், கேம்பிங்கை நம்பியவர்களின் நிலை குலைந்தது. ஒரே இரவில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட முப்பத்தாறு குடும்பங்களைப் பற்றி, ஒரு வாரமாக அமெரிக்க ஊடகங்களில் அலசல். "சொர்க்கம் கிடைக்கும், நிரந்தர நிம்மதி கிடைக்கும், சொர்க்கத்தில் தேனும் பாலும் ஓட அதில் என் பூர்வீகத்தோடு குளிப்பேன்" என்று கனவு கண்டதாகவும், கட்டத் துணி கூட இல்லையென்றும், ஏமாந்தவர்கள் இப்போது புலம்புகிறார்கள். மதவாதி கேம்பிங் என்ன சொல்கிறார்? "கணக்கில் தேதி தவறாகி விட்டது; அக்டோபர் மாதம் 21ம் தேதி நிச்சயம் அழியப்போகிறது. அன்றைக்குத் தேவனின் பொன்னுலகக் கதவுகள் திறக்கும்" என்கிறார்.

    கேம்பிங் நிறுவனம் பெற்ற 11 மிலியன் டாலரில் சல்லிக்காசு கூட திருப்பப் படவில்லை. சட்டப்படி அவர் எதுவும் தவறு செய்யவில்லை. முறையாக வரி கட்டியமைக்கு, அமெரிக்க வருமானவரித்துறை கேம்பிங் நிறுவனத்தைப் பாராட்டியிருக்கிறது. கேம்பிங் தன் 60 ரேடியோ நிலையங்களில் அக்டோபர் 21ம் தேதிக்கான பிரசாரத்திலும் பிரார்த்தனையிலும் இறங்கிவிட்டார். சொர்க்கத்தில் பொன்னும் மணியும் இன்பமும் அமைதியும் தேடி, இன்னும் எத்தனை குடும்பங்கள் இவரைத் தொடர்வார்கள்? அக்டோபர் 22ம் தேதி தெரியும்.

    ப்பில் நிறுவனம். சாதாரண நுட்பத்தை பப்பளப்பாக்கி ஐ-இது ஐ-அது என்று உலகெங்கும் விற்று, இளைய சமுதாயத்தின் மொத்த ஆதர்சத்தும் அதிபதியாக, இன்றைக்கு உலகத்தின் மிக விலைமதிப்பு மிக்க நிறுவனமாக இயங்குகிறது.

    சில நாட்கள் முன்பு, ஆப்பில் தொழிற்சாலை ஒன்றில் பதினைந்து பேர் கோரமான விபத்தில் இறந்து போனார்கள். நிறைய பேருக்கு இது தெரியவே போவதில்லை. காரணம், தொழிற்சாலை சைனாவில் இருப்பதால் அல்ல; அது ஆப்பில் நிறுவனத்தின் நேர் நிர்வாகத்தின் கீழ் வராததால் மட்டுமல்ல; விபத்தினால் வர்த்தக இழப்பு நேர்ந்து விடக்கூடாதே என்று அவசரமாகக் கூட்டுச்சேர்ந்த இயக்கங்களின் முதிர்ந்த எண்ணத்தினால், முயற்சியினால்.

    உலக மக்கள் ஐபாட், ஐபேட் வேண்டும் என்று துடிக்கிறார்கள். அதனால் ஆப்பில் தயாரிப்புக்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. தேவையைச் சமாளிப்பதற்காக அவசரமாக நியமிக்கப்பட்ட தொழிற்கூடங்களில் விபத்து ஏற்பட்டுப் பதினைந்து தொழிலாளிகள் மரணமடைந்தது, அப்படியொன்றும் பெரிய செய்தியல்ல. செங்டுவில் அந்தப் பதினைந்து குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டு விட்டது. அக்குடும்பங்களில் அடுத்தத் தொழிலாளிக்கு வேலையோ அல்லது அதற்கான உத்தரவாதமோ கொடுக்கப்பட்டு விட்டது.

    நல்லவேளையாக, ஐபாட் ஐபேட் தயாரிப்பு தடையில்லாமல் நடைபெறுகிறது. அதைவிட்டு, அரசாங்கமும் தனியார் வர்த்தக நிறுவனங்களும் கூட்டாண்மையும் சமூக இயக்கங்களும் சேர்ந்து இதைப் பற்றி ஏதாவது செய்திருந்தால் என்னவாகி இருக்கும்? நினைத்தாலே நடுங்குகிறது.

    முதல் வேலையாகத் தொழிற்கூடங்களைத் தற்காலிமாக மூடியிருப்பார்கள். விசாரணை தொடங்கியிருப்பார்கள். தயாரிப்பு முடக்கப்பட்டிருக்கும். நஷ்டவழக்கு போட்டு நியாயம் பெற்றுத் தருவதாகப் பெரிய பெரிய சட்ட நிறுவனங்கள் களமிறங்கியிருக்கும். விற்பனை பின்தங்கியதால் ஆப்பில் நிறுவனததுக்கு வருமானம் குறைந்திருக்கும். நிறுவனத்தில் வேலை செய்வோருக்குக் கால்வருட போனஸ் கிடைத்திருக்காது. பங்குச்சந்தையில் ஆப்பில் நிறுவனம் அடிபட்டு பலருக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். கடைகளில் விற்கப் பொருளில்லாமல் தவிப்பார்கள். மக்கள் ஐபாட் ஐபேட் வாங்க முடியாமல் பெரும் துன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள். சைனா-அமெரிக்கா தொழிலுறவு முறைகளில் சிக்கல் உண்டாகியிருக்கும். மற்ற நிறுவனங்கள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பார்கள். அது, மேலும் சைனாவின் தொழிற்சாலைகளைப் பாதிக்கத் தொடங்கும். அங்கிருப்போர் வேலையிழப்பார்கள். சைனா அரசாங்கத்துக்கு செலவு ஏற்பட்டிருக்கும். இதனால் 6 பிலியன் டாலர் பொருள் நஷ்டம் உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

    உயிர்ப்பலி கொடுத்தப் பதினைந்து குடும்பங்களுக்கு அவசர நஷ்டஈடும், மறு வேலைக்கான உத்தரவாதமும் கொடுத்து, பங்கு பெற்ற அத்தனை இயக்கங்களும் மகத்தான இழப்பைத் தவிர்த்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய சமயோசிதம். இதனால் பள்ளி, கல்லூரித் திறப்பு, மற்றும் மணநாள், பிறந்தநாள், பண்டிகை, பிற விழாக்களைப் பரிசு வழங்கிக் கொண்டாடப் பொதுமக்களின் விருப்பப்படி கலர் கலராய் ஐபாட் ஐபேட் கிடைக்கும். 6 பிலியன் டாலரும் பிழைத்தது.

   னிதராய்ப் பிறக்க, மாபெரும் தவமும் புண்ணியமும் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஆறறிவாமே?

['மனிதஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா' - கண்ணதாசன் ]

    'அறிவற்றோர் கதி பற்றிச் சொல்கிறேன், கேள்" என்று தொடர்ந்தான் எமன். "இன்பங்களைத் தேடியடைந்து, நற்குணங்களை விரட்டி, தீக்குணங்களை வளர்த்து தன்னைச் சுற்றியே வாழ்வை அமைத்துக் கொள்ளும் அறிவில்லாதவர்கள் செய்வது என்ன? இன்பங்களை நுகரும் அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் யாவை?

   இன்பத்தில் மிதப்பதால், அறிவை இழந்த நிலையில் என்ன செய்கிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்தக் கணத்தின் இந்த இன்பம் நிலைக்கும், இதுவே உலகம், இதைத் தவிர வேறு உலகமே இல்லை என்று ஆணவமாக எண்ணத் தொடங்குகிறார்கள். விவரம் அறியாச் சிறு குழந்தைகள் போல, தன் உலகம் நிலையானது, இன்பம் நிரந்தரமானது என்றுத் தங்கள் சிந்தனை, சொல், செயல்களில் வெளிப்படுத்துகிறார்கள்.

   அவர்களின் நிலை பரிதாபமானது. ஆணவத்தாலும், அறிவின்மையாலும் வேறு உலகங்கள், நிலைகள் பற்றிய எண்ணங்களே அவர்களுக்குத் தோன்றுவதில்லை. எடுத்துச் சொன்னாலும், பிடிவாதம் கொண்ட விவரமறியாக் குழந்தை போல் அவர்கள் புரிந்துகொள்ள மறுப்பார்கள்.

    ஒவ்வொரு மனிதருக்கு உள்ளிருக்கும் அறிவை, யோகமுறை மற்றும் சீரிய நெறிகளால் உணர்ந்து பயன்படுத்தக் கூடிய சக்தியை, தன்னறிவை... இத்தகைய அறிவிலிகள் அடையவே முடியாது" என்றான் எமன்.

   "அப்படியென்றால் அவர்களுக்கு உய்வில்லையா?" எனக் கேட்டான் நசிகேதன்.

   "பரிதாபம்! உடல், உணவு, பொருள் என்று புலனின்பம் மட்டுமே தேடிப் பிற நிலைகளைச் சிறிதும் எண்ணாத அறிவிலிகளுக்கு உய்வில்லை. அவர்களுக்கு எந்தக் காலத்திலும் ஞானம் கிடைக்காது. மெய்யறிவு கிடைக்காது. பிறவியைத் தொடர்ந்து பிறவி என்று, என் வலையில் விழுந்து விழுந்து எழுவார்கள். மீண்டும் வந்து விழுவார்கள்" என்றான் எமன்.

   நசிகேதனுக்கு இந்த உண்மை புரிந்ததும் தன்னைப் பற்றிய ஒரு ஐயம் எழுந்தது: தான் அறிவில்லாதவனா, அறிவுள்ளவனா? "நன்றி ஐயா, அறிவற்றோரைப் பற்றிப் புரிந்து கொண்டேன். அறிவுடையோரைப் பற்றிச் சொல்லுங்கள்" என்று எமனிடம் கேட்டான்.

18 கருத்துகள்:

meenakshi சொன்னது…

இந்த வெண்பா இனிமையாய் இருந்தாலும் உங்கள் விளக்கத்தால் தான் புரிந்தது. 'உன்மணி யாண்டும்' புதிய சொற்களை அறிந்து கொண்டேன். நன்றி!

என் மகனின் வகுப்பிலும் மே இருப்பத்தி ஒன்றாம் தேதியை
ஆசிரியர்கள் உட்பட 'ஜட்ஜ்மெண்ட் டே' என்று சொல்லி ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டும், இனிப்புகள் கொடுத்தும்
பிரிவு உபசாரம் நடந்தது. இதையெல்லாம் என்னவென்று சொல்லுவது, நினைப்பது.

சமீபமாக உங்கள் விளக்கங்களில் கண்ணதாசன் வரிகளையும், மேதைகளின் பொன்மொழிகளையும் பொருத்தமாக சேர்த்திருப்பது உங்கள் விளக்கங்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

பத்மநாபன் சொன்னது…

உன்மத்தம் மாதிரி உன்மனி நல்ல சொல்லாடல் ... ஆப்பில் விவகாரம் வஞ்ச புகழ்ச்சியோ... கேம்பிங் போன்ற விவகாரங்கள் அடிப்படை அறிவு உயரும் வரை தொடரும் ...நல்ல இடத்தில் கொடுத்த உதாரணம் ..

ஸ்ரீராம். சொன்னது…

அறிவற்றோரைப் பற்றி தெரிந்து கொண்டது போல அறிவுடையோரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும்போது நம்மைப் பற்றி ஒரு ஐடியா கிடைத்து விடும் என்று நசி போல நானும் எண்ணுகிறேன்!

அப்பாதுரை சொன்னது…

வருக meenakshi, பத்மநாபன், ஸ்ரீராம், ...

அப்பாதுரை சொன்னது…

meenakshi, ஒரு தமிழ்த்தாடிக்காரர் முன்பே பயன்படுத்தியுள்ளார். 'யாண்டும் இடும்பை இல' :)
எதுவுமே புதிதில்லை என்கிறது கடோ - பிறகு பார்ப்போம்.

அப்பாதுரை சொன்னது…

ஆப்பில் விவகாரம் என்னை மிகவும் பாதித்தது பத்மநாபன்.

சைனா சென்ற போதெல்லாம் மலைத்திருக்கிறேன். செங்க்டு தொழிற்பேட்டையில் பத்துலட்சம் பேர் வேலை செய்கிறார்கள். பதினைந்து மரணங்கள் பெரிதா? அப்படித்தான் இதில் கலந்து கொண்ட இயக்கங்கள் சொல்லியிருக்கின்றன. விபத்துக்கள் நேர்வது இயல்பு. அது தணிக்கும் வாய் நாடாமல், வர்த்தகத்தையே நாடியது வருத்தமாக இருக்கிறது. இந்த மாதம் என் மகனுக்கு ஐபாட் வாங்கிக் கொடுக்கத் தயங்க மாட்டேன் என்பதும் வருத்தமாக இருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

நல்ல எண்ணம், ஸ்ரீராம் :)
பெண்களைப் பற்றி ஆண்களிடமும், ஆண்களைப் பற்றிப் பெண்களிடமும் கட்டுரை எழுதச்சொன்னாராம் நாலாம் வகுப்பு ஆசிரியர் - இளமையில் சகிப்புத்தன்மையை வளர்க்க அவருடைய திட்டம். யோசித்து யோசித்து ஒரு மாணவன், ஆண்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி முடிவில் 'இந்தப் பெண்கள் இருக்கிறார்களே, ஆண்களுக்கு நேர் எதிர்' என்று ஒரு வரி எழுதினானாம்.

சிவகுமாரன் சொன்னது…

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே ...
--என்ற வல்லாரின் தெய்வமணி மாலை நினைவுக்கு வந்தது உன்மனி என்ற சொல்லைப் படித்ததும் .

சிவகுமாரன் சொன்னது…

ஆப்பிள் விவகாரம் திகைக்க வைத்தது. உயிரை விட ஐ பாட் விலை மதிப்பானது போலும் .

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன். வள்ளலாரின் அருமையான பாடலை நினைவு படுத்தியதற்கு நன்றி.

'உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன்றாகி' என வரும் அருமையான திருவருட்பா பாடல் படித்திருக்கலாம்.

பத்மநாபன் சொன்னது…

//'உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன்றாகி' // திருவருட்பா , திருவாசகம் என பல மேற்கோள்களை படித்து பகிரும் உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது...

அப்பாதுரை சொன்னது…

நன்றி பத்மநாபன். நேரமும் நிறைய இருக்கிறது/இருந்தது :)

திருவருட்பா அதிகம் படித்ததில்லை; வாங்கி வைத்திருந்த புத்தகத்தைத் தொலைத்தேன். திருவாசகம் பிடிக்கும்; முடிந்த போதெல்லாம் புரட்டுவேன்.

சிவகுமாரன் சொன்னது…

வள்ளலாரின் - என்பதற்குப் பதிலாக வல்லாரின் என்று பதிவாகி விட்டது. எல்லாம் வல்லானை பாடியதால் வல்லார் என்பதும் பொருத்தம் தானோ ?

சிவகுமாரன் சொன்னது…

\\உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
உற்றஅதன் வெளிப்ப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளி///


தங்கள் தயவால் இந்த திருவருட்பாவை தேடிப் பிடித்துப் படித்தேன் . நன்றி

à¬ó:

அப்பாதுரை சொன்னது…

பிரமாதம் சிவகுமாரன்! 'ஒருமையுடன்' பாட்டும் திருவருட்பா பாடலும் என் அம்மா பாடிக் கேட்டதோடு சரி (என் பள்ளிப்பிராயத்தில் எனக்கு சொல்லிக்கொடுத்த பாடல்கள்) - நெஞ்சில் அவ்வப்போது நிரடும். அடுத்த வரிகள் மறந்து விட்டன; தேடிப்பிடித்தமைக்கு நன்றி. என் தயவா?! உங்களுக்குப் பொருட்டில்லையெனில், தேவாரக் கூட்டத்தில் தினம் பாடும் என் அம்மாவின் தயவென்று விடுவோம்.

அப்பாதுரை சொன்னது…

'வல்லாரின்' என்பதையே இப்போது தான் கவனிக்கிறேன் சிவகுமாரன்! என் கண்ணில் வள்ளலார் என்று தான் பட்டிருக்க வேண்டும்!!

('எல்லாம் வல்லானா' என்பது எனக்குத் தெரியாது, வல்லார் என்பது வள்ளலாருக்குப் பொருத்தமான பெயர் தான் :)

ஸ்ரீராம். சொன்னது…

//"'ஒருமையுடன்' பாட்டும் திருவருட்பா பாடலும் என் அம்மா பாடிக் கேட்டதோடு சரி"//

'பொறுமையுடன் நினது' பாடலை சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில் 'நாணல்' திரைப் படத்தில் பாடலாகக் கேட்டிருக்கிறேன்!

அப்பாதுரை சொன்னது…

என் அம்மா பாடியது என்று திருவருட்பாவோடு சேர்த்து எழுதிவிட்டேன். எம்எல்வி குரலில் வள்ளலார் பாடலை விரும்பிக் கேட்பேன் (இதுவும் திரைப்பாடல்தான் ஸ்ரீராம்). எம்எல்வி முழுப்பாடலையும் பாடினாரா அல்லது ஒரு செய்யுள் மட்டும்தானா தெரியாது.