வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/06/21

ஆன்மா பிறப்பற்றது


54
பிறவாது மட்கி மறையாது பண்டம்
துறந்துந் தளிரும் முகுலம் - மறப்பிலி
வத்தியம் வித்திலாச் சித்ததால் நித்தியம்
தத்திடுந் தத்துவத் தீ.

   ன்மா பிறப்பதில்லை; வாடி அழிவதில்லை; உடலைப் பிரிந்தாலும் தழைத்துச் வளர்வது. முக்காலம் அறிந்தது. இறப்பற்ற இப்பெரும் நுட்பம், உருவாகவோ அழியவோ காரணமற்று இருப்பதால், உண்மை ஒளியென நிலையாக என்றும் எங்கும் தாவிப் பரவுகிறது (என்றான் எமன்).


மட்கி: வாடி, அழிந்து
பண்டம்: உடல்
தளிரும்: தளிர்க்கும், வளரும்
முகுலம்: ஆன்மா, தன்னறிவு
மறப்பிலி: விவேகமுள்ள, 'நடந்த நடக்கின்ற நடக்கவிருக்கும்' அறிவுள்ள*
வத்தியம்: இறப்பு, அழிவு
வித்திலா: துவக்கமற்ற, உருவாக்க இயலாத, உருவாகும் காரணமற்ற, விதையற்ற
சித்ததால்: அறிவு, நுட்பமான பொருள் (சித்து+அதால், சித்து அதனால்)
நித்தியம்: நிலையாக, அழியாமல், என்றும் எங்கும்
தத்திடும்: தாவும், பரவும், வீசும்
தத்துவம்: பெரும் உண்மை, நுட்பமான ஆழ்ந்த அறிவு
* இங்கே காரண-காரிய-விளைவு பற்றிய, 'தொட்டால் சுடும்' என்றப் புலனறிவிலிருந்து, 'தீக்குணம் நன்மை தந்ததில்லை, தருவதில்லை, தரப்போவதில்லை' எனும் உள்ளுணர்வு வரையிலான, அறிவைக் குறிக்கிறது. 'முக்கால அறிவு' என்று நம்பப்படும் பலவகைப் பாமரக் கண்மூடித்தனங்களை அல்ல :).


['..thou canst not stir a flower, without the troubling of a star' - francis thompson]

    தொடரும் அஜாதசத்ரு-பாலாகி உரையாடல்:

"இதோ உறங்கிக் கொண்டிருக்கிறானே, இவனை எழுப்புவோம்" என்ற மன்னன் ஞானியிடம், "இவன் யார் சொல்ல முடியுமா?" என்றான்.

"தெரியாது" என்றார் ஞானி.

"நம்மைப் போல் ஒருவன். உடல், உயிர், உள்ளம், அறிவு, உணர்வு கொண்ட மனிதன் என்பதை ஏற்கிறீர்களா? விழித்திருக்கும் நிலையில் நம்மைப் போல் இயங்கக்கூடியவன், சரியா?"

"சரியே"

மன்னன் புன்னகைத்து, உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்ப முனைந்தான். பலவாறு பெயர் சொல்லி, முதலில் மென்மையாகவும் பிறகு உரக்கவும், அழைத்தான். உறங்கிக் கொண்டிருந்தவன் அசையக் காணோம். பிறகு, தன்னுடைய வாளையெடுத்து அதன் முனையால் மெல்ல உறங்கிக் கொண்டிருந்தவனின் உடலில் அழுத்தினான். உறக்கத்திலிருந்து அலறியடித்து எழுந்தவன், சுற்றுமுற்றும் பார்த்து விழித்தான். மன்னனையும் ஞானியையும் பார்த்துத் திகைத்தான். எனினும், மன்னனைப் புரிந்துகொண்டு பணிந்தான்.

மன்னன் ஞானியிடம், "ஐயா, இவன் இப்போது எங்கிருக்கிறான் சொல்வீர்களா?" என்று கேட்டான்.

"நம்மோடு இந்த அறையில் இங்கே இருக்கிறான்" என்றார் ஞானி.

"சரி. இப்போது புலன்களோடும் உயிரோடும் உணர்வோடும் செயல்படும் இவன், சற்றுமுன் அடங்கி இருந்தான். எத்தனை அழைத்தும் எழவில்லையே? ஏன்? அவனுடைய புலன்களும் உணர்வுகளும் எங்கே போயின? உறக்கத்திலிருந்தவன் எங்கே இருந்தான்?" என்று கேட்டான் மன்னன்.

"தெரியாது" என்றார் ஞானி.

"சிந்தியுங்கள். இப்போது தன்னைப் பற்றியும் என்னைப் பற்றியும் சுற்றச்சூழல் தெரிந்தும் உடனடியாகச் செயலபட்டவன், உறக்கத்தில் ஏன் அடங்கியிருக்க வேண்டும்? அவனுடைய புலன்களும் அறிவும் என்ன ஆயின? உறங்கும் நேரத்தில் வெளியே அவனுக்கு நல்லதோ கேடோ ஏற்பட்டிருந்தால் அறிய முடியாமல் போவது ஏன்? அவனுடைய உணர்வுகள் அடங்கியது ஏன்? சலனமேயில்லாது உறங்கியவன் எங்கே போனான்? என்ன செய்தான்? கேளுங்கள், ஞானியே. மனிதரை அடையாளம் காட்டுவது அறிவு. அறிவே மனிதரின் மிக மேன்மையான பேறாகும். உண்மையில், அறிவு நீங்கலாக மனிதருள் பயனுள்ள வேறு எதுவுமில்லை எனலாம். அத்தகைய அறிவு, கண்மூடித் தூங்கிய பொழுது எங்கே போனது? எங்கே புதைந்தது? இதோ இப்போது மென்மையாகப் பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்கும் இவன், உரக்க விளித்தும் உறங்கிக் கிடந்தானே, ஏன்? மன்னன் வந்திருப்பதைக் கூட மதிக்காமல் கிடந்தானே, ஏன்? தான் என்ற உணர்வு, தான் என்ற எண்ணம், தான் என்ற வேகம், தன்னை முன்வைத்த செயல், பிறர் அறிவு, பிறரைப் பொருட்படுத்தும் செயல்,... இவையெல்லாம் எங்கே போயின?"

"எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை" என்றார் ஞானி, பரிதாபமாக.

"எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன், ஞானியே!" என்ற மன்னன் தொடர்ந்தான். "மனிதர் அனைவருக்கும் அறிவு உண்டு. அதன் உருவத்தை அறிய முடியாது. சக்தியை எளிதில் உணர முடியாது. எனினும் அறிவு மனிதருக்கு உள்ளும் வெளியும் நிரந்தரமாகப் பரவியிருக்கிறது. தேவைக்கேற்ப வெளிப்பட்டும் அடங்கியும் நடக்கிறது. விழித்த நிலையில் செயல்படும் மனித அறிவு, உண்மையான அறிவின் மிக மிகச் சிறிய பகுதியே என்பதால், அதை மனிதரின் உண்மையான அறிவு அல்ல என்பேன். விழித்திருக்கும் மனிதரின் அடையாளம் உறக்கத்தில் மறைந்து விடுகிறது. உறக்கத்தில் இருப்பவருக்குத் தன்னை அடையாளம் காண முடிவதில்லை. உறக்க நிலையில் இந்த மனிதர் ஒரு அரசனாகவோ, ஆண்டியாகவோ, பண்டிதராகவோ, பாமரனாகவோ, விலங்காகவோ, மரமாகவோ இருந்திருக்கலாம். உறங்கியிருந்த நிலையில், கனவுலகில், அரசனாக இருந்தவன் அரசனாகவே வாழ்ந்திருந்தான்; விலங்காக இருந்தவன் அப்படியே வாழ்ந்திருந்தான். நான் இவனை என் வாளால் தொட்டு எழுப்பாவிடில் தொடர்ந்து அரசானகவோ ஆண்டியாகவோ வாழ்ந்து கொண்டிருப்பான். தன் வெளியுலக அடையாளங்களைத் துறந்து உள்ளே இன்னொரு உலகில் இருந்தவனுக்கு, நம் வெளியுலகம் தேவைப்பட்டதாகத் தெரியவில்லை. வெளியுலகின் வெற்றிகளும் தோல்விகளும் தவிப்பும் இழப்பும் பாதிக்கவில்லை. அவனுடைய கண்கள் காணவில்லை; செவி கேட்கவில்லை; மெய் உணரவில்லை; வாய் பேசவில்லை; மூச்சிலும் ஏற்றத் தாழ்வில்லை; அறிவும் நாம் வெளியே உணரும் வகையில் இயங்கவில்லை. ஏன்?"

"ஐயா, தெரியாதய்யா" என்றான் ஞானி.

"மனிதரின் தன்னறிவே தன்னுணர்வின் வேர். உணர்வு எங்கே இருக்கிறதோ மனிதன் அங்கே இருக்கிறான். தன்னறிவானது பெருந்தீ போன்றது. விழித்திருக்கும் நிலையில் நம் உணர்வுகள் தன்னறிவுத் தீப்பொறிகளாக எங்கும் சிதறிப் பரவுகையில், நம்மைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற இயலாமல் போகிறது. உறக்க நிலையில் பொறிகள் அடங்கிவிடுகின்றன. கண்களுக்கு வெளிப்பார்வையில்லை, நாவுக்கு வெளிப்பேச்சில்லை, செவிகளுக்கு வெளிக்கேள்வியில்லை, மெய்க்கு வெளியுணர்வில்லை, வெளிமூச்சிருந்தும் உணர்வில்லை... என எல்லாம் அடங்கிவிடுகின்றன. விழித்திருக்கும் நிலையில் நாம் யார் என்பதை அறிய முடியாது. புலன்களைக் கட்டிய நிலையில் நாம் யார் என்று அறிய ஒரு வழி ஏற்படுகிறது. புலன்களை அடக்குவதால் மட்டுமே 'தான் யார்' என்ற உண்மை அறிவைப் பெற முடியாது, எனினும், புலன்கள் அடங்கிய நிலையில் புறத்தாக்கம் மறைந்து விடுவதால், மனிதர்கள் தமக்குள்ளே காணுகிற, தேடுகிற, வாய்ப்பைப் பெறுகிறார்கள்."

உறங்கிக் கொண்டிருந்தவனை உதாரணமாகக் காட்டியதன் காரணம் ஞானிக்குப் புரிந்தது.

   யிர்கள் அனைத்துக்கும் பொதுவான உணர்வு உண்டு என்று சாக்ரேட்ஸ் காலத்திலிருந்து, அவருக்கும் முந்தைய வேத அறிஞர்கள் காலத்திலிருந்து, சொல்லி வருகிறார்கள். 'மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியாவிட்டாலும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும்; காரணம், மனிதர்களுக்கிடையே இருக்கும் பொதுவான உணர்வு தான்' என்ற திசையில் போகிறது இவர்களின் தத்துவம். மானிடம் என்றில்லாமல், இயற்கை முழுதையும் இந்தச் சித்தாந்தத்துள் அடக்கிய சிந்தனையாளர்கள் நிறைய பேர் உண்டு. மனிதம் தொட்ட உணர்வே காதல், அன்பு, பாசம் போன்ற பரந்த புரிதல்களுக்குக் காரணம் என்கிறார்கள். மனிதரை விடுங்கள். நாம் கோபமாகவோ அல்லது மகிழ்ச்சியுடனோ இருக்கிறோம் என்பதை, நம் வீட்டு நாய் எப்படிப் புரிந்து கொள்கிறது? பிறவி அறிவுகளுக்கப்பாற்பட்ட இத்தகைய உணர்வின் ஒருவித உன்னத நிலையே ஆன்மா என்கிறார்கள். ஆன்மா என்பது மானிடத்தை விட, இயற்கையை விடப் பெரியது என்கிறார்கள். உபனிஷதுகள் பெரும்பாலும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றன. நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும், என் மனதில் இருப்பதை நான் சொல்லாமலே பிறர் புரிந்து செயல்படும் நேரங்களில் உள்ளங்கால் வரைத் திடுக்கிட்டுப் போகிறேன்.

   த்தனையோ வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது, நினைவுக்கு வருகிறது. ஹைதராபாதில் வேலை செய்த நாட்கள். ஒரு கடுமையான வெயில் நாளில், சார்மினார் சதுக்கத்தில் எங்கள் விநியோகஸ்தரின் ஆளைத் தேடி அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தோம். எனக்கும் உடன் வேலை செய்த நண்பனுக்கும் எரிச்சலோ எரிச்சல். கடைகளில் சரக்கைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பலாம் என்று நினைத்தால் சரக்கு கொண்டு வந்த ஆளைக் காணோம். வெயில் கொடுமை தாளவில்லை. ஒரு ஓரமாக அரைகண்மூடிச் சாய்ந்திருந்த ஃபகீர் ஒருவனிடம் விவரம் கேட்கலாமென்று நினைத்த என்னைத் தடுத்து, "இருடா, உனக்கு இந்தி தெரியாது. நான் கேக்குறேன்" என்ற நண்பன், தன் உடைந்த இந்தியில் ஃபகீரிடம், "இதர்.. ஏக்.. ஆத்மி.. சைகிள் லேகே.. கயா.. தேகா?" என்றான்.

   ஃபகீர் எங்களை இரண்டு நிமிடம் போல் மௌனமாகப் பார்த்துவிட்டு, சரளமாகத் தொடங்கினான்:
        இதர் சே உதர் கயா
       உதர் சே இதர் கயா
       கிதர் சே கிதர் கயா
       கிஸீ கோ க்யா பதா?
       அல்லா கோ பதா

               இங்கிருந்து அங்கு சென்றான்
               அங்கிருந்து இங்கு சென்றான்
               எங்கிருந்து எங்கு சென்றான்
               யாருக்கு என்ன தெரியும்?
               அல்லாவுக்கே தெரியும்.
        இனோனே ஓ லாயா
       உனோனே ஏ லாயா
       கினோனே க்யா லாயா
       கிஸீ கோ க்யா பதா?
       அல்லா கோ பதா

               இவனோ அதை எடுத்து வந்தான்
               அவனோ இதை எடுத்து வந்தான்
               எவன் எதை எடுத்து வந்தான்
               யாருக்கு என்ன தெரியும்?
               அல்லாவுக்கே தெரியும்.

   "ஐயா, இந்தப் பக்கமாக ஒரு சைக்கிள்காரன் சரக்கு எடுத்துப் போனதைப் பார்த்தீர்களா?" என்ற சாதுவான கேள்விக்கு, சாதுவின் பதிலில் அரண்டு போனோம். ஃபகீர், 'இந்த பதா அந்த பதா' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான். நண்பனும் நானும் வேறுவகை தாவில் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

   இப்போது நினைக்கையில், அந்த ஃபகீர், நசிகேதன் கதையை விட நுண்மையாக ஏதோ சொல்ல வந்தான் என்று தோன்றுகிறது.

   டமொழிக் கடோபனிஷதில், இந்தப் பாடல் தொடங்கித் தொடரும் சில பாடல்களின் கருத்தும் வரிகளும், அப்படியே கண்ணன் கீதையில் சொல்வதாக வருகிறது என்கிறார்கள். பெருங்கடவுளின் கருத்தாகக் 'கட் அன்ட் பேஸ்ட்' செய்யப்பட்டிருப்பது, நூலின் கருத்தாழத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்.

['நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' - கண்ணதாசன்]

    "நசிகேதா, ஆன்மாவுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை" என்றான் எமன். "சாதாரணப் பிறவிகளுக்கு பிறப்பு, வளர்ச்சி, மூப்பு, வாடல், மரணம் என்ற ஐந்து நிலைகள் உண்டு. தன்னறிவுக்குக் கிடையாது. தன்னறிவு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது" என்றான்.

    "மனிதருக்குள் தானே இருக்கிறது தன்னறிவென்னும் ஆன்மா?" என்றான் நசிகேதன்.

    "ஆம்" என்றான் எமன்.

    "எனில், மனிதர்கள் இறந்ததும், அவர்களின் உடல் அழிந்ததும், ஆன்மாவுக்கு என்ன ஆகிறது? ஏன் அழிவதில்லை?" என்றான் நசிகேதன். இதே கேள்வியைப் பலமுறை கேட்டதைக் குறிப்பால் நினைவூட்டினான்.

    எமன் புன்னகைத்தான். அவனுக்கு நசிகேதனின் அறிவுக்கான அவசரம் புரிந்தது. "நிதானமாகச் சொல்கிறேன், பொறுமையாகக் கேள்" என்றான். "உடல் அழிகிறது. உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை. தன்னறிவு தழைத்து வளர்கிறது. அதற்குக் காரணம், ஆன்மா பிறவியினும் பெரிது. பரந்திருப்பது. முக்கால அறிவையும் பெற்றுத் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் பிரம்மாணடமாகும். அத்தனைப் பிரம்மாண்டமும், மனிதருக்குள் அடங்கியிருக்கையில் அணுவிலும் அணுவாக, ஆழமாகப் புதைந்திருப்பதாகும்.

    தன்னறிவு எதனின்றும் உருவாவதில்லை; எதையும் உருவாக்குவதும் இல்லை. உருவாகவோ அழியவோ காரணமே இல்லாது, என்றைக்கும் எப்போதும் நிலையாக இருப்பதாகும்.

    தீயானது தன்னிச்சையாக எப்படித் தாவிப் பரவுகிறதோ, அது போல் ஆன்மா எனும் ஞானஒளி நிரந்தரமாக, அழிவில்லாமல், உன்னிலும் என்னிலும் ஏனையோரிலும், தாவிப் பரந்து வீசுகிறது" என்றான் எமன்.

22 கருத்துகள்:

meenakshi சொன்னது…

ஆன்மாவை பற்றி விளக்கும் இந்த வெண்பா ரொம்ப அழகா இருக்கு.
//வித்திலாச் சித்ததால் நித்தியம்
தத்திடுந் தத்துவத் தீ.//
பிரமாதம்! திரும்ப திரும்ப படிச்சதுல செய்யுள் மனப்பாடம் ஆற மாதிரி ஆயிடுத்து. :)

அப்பாதுரை சொன்னது…

இன்றைய பதிவுக்கு நேற்றே பின்னூட்டமிட்ட meenakshiக்கு நன்றி :) அவருக்கு மட்டும் special sneak preview கிடைத்திருக்கிறது.

ஸ்ரீராம். சொன்னது…

//" நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும், என் மனதில் இருப்பதை நான் சொல்லாமலே பிறர் புரிந்து செயல்படும் நேரங்களில் உள்ளங்கால் வரைத் திடுக்கிட்டுப் போகிறேன்"//

அப்பாதுரை கூறியது...
இன்றைய பதிவுக்கு நேற்றே பின்னூட்டமிட்ட meenakshiக்கு நன்றி :) அவருக்கு மட்டும் special sneak preview கிடைத்திருக்கிறது.

!!....:)

அப்பாதுரை சொன்னது…

சுவை ஸ்ரீராம் :) எத்தனை பொருத்தம் பாருங்கள்.. எழுதும் பொழுது எனக்குத் தோன்றவேயில்லை.

பத்மநாபன் சொன்னது…

இன்றைய வெண்பா வித்தியாசமான சொல் நயத்தோடு அமைந்திருக்கிறது ...
மினாக்‌ஷி அவர்கள் சொன்னது போல் மனப்பாடம் செய்ய தூண்டும் வரிகள் குறிப்பாக கடை இரண்டு வரிகள்...வத்தியம் வித்திலா...

உறக்கம் வைத்து தன்னுணர்வு மகிமையை உணர்த்திய கதை அருமை...

ஹைதை இந்தித் தத்துவங்கள்..கலில்ஜீப்ரான் கவிதைகளை நினைவு படுத்தும் வரிகள்...

என்றுமே அழியா ஆன்மா இந்த உடலுள் சில காலம் இருக்கிறது என்பதே சிலிர்ப்பான விஷயம்...

பெயரில்லா சொன்னது…

ஞானி யாரு? மன்மோகன் சிங்கா?

meenakshi சொன்னது…

நம் மனதில் இருப்பதை அப்படியே அடுத்தவர் சொல்வதற்கு தானே இது பொருந்தும். இந்த பதிவு தவறுதலாக வெளிவந்து அதை தற்செயலாக நான் பார்த்து, படித்து கருத்து சொன்னதுக்கு இது எப்படி பொருந்தும் ஸ்ரீராம்! :)
அப்பாதுரை, நேற்று தவறுதலாக வெளிவந்தது உங்கள் வெண்பாவும், சிறிது இடைவெளி விட்டு மேற்கோள் காட்டியிருக்கும் கண்ணதாசன் வரிகள் மட்டும்தான். நீங்கள் எழுதி இருந்த வெண்பாவின் வார்த்தைகள் அழகாகவும், படித்தபோது மிகவும் இனிமையாகவும் இருந்ததால் என் பின்னூட்டதை உடனே எழுதி விட்டேன். இன்று முதலில் வந்த உங்கள் பின்னூட்டமும், பின் வந்த ஸ்ரீராமின் பின்னூட்டமும் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தது.

அஜாதசத்ரு - பாலாகி கதை வெகு அருமை. இதை படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு என் நன்றி. நம் மனதில் இருப்பதை அப்படியே அடுத்தவர் சொல்ல கேட்டு ஆச்சரிய பட்டு சிலிர்த்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டது உண்டு. ஒரு சிலரை பார்த்தாலே சட்டென்று பிடித்து போவது, என்னவோ நீண்ட நாட்களாக அவர்களுடன் பழகியது போன்ற உணர்வெல்லாம் ஏற்படுவது என்பதெல்லாம் ஆன்மாவினால் ஏற்படும் ஒரு உன்னதமான உணர்வுதானா! 'Soul mate' என்பது இதுதானோ! பத்மநாபன் எழுதி இருப்பது போல் இந்த ஆன்மா இப்பொழுது நம்முள் இருப்பது சிலிர்க்கத்தான் வைக்கிறது.
அந்த ஃபகீர் சொன்ன வரிகளில் ஒரு ஹிந்தி பாடல் இருக்கிறது. இதை படித்த போது அந்த பாடல்தான் நினைவுக்கு வந்தது.

இந்த வாரம் கண்ணதாசனின் பிறந்த நாள். நீங்களும் தற்செயலாக இந்த வார பதிவில் மேற்கோள் காட்டியிருக்கும் அவர் எழுதிய வரிகள் ...... இது ஒரு அற்புதமான பொருத்தம், இல்லையா!

அப்பாதுரை சொன்னது…

நன்றி பத்மநாபன், meenakshi, ...

பிழை நேர்ந்தது ஸ்ரீராமுக்குத் தெரிய வாய்ப்பில்லையே meenakshi? பதிவைப் படிக்குமுன்னால் கமென்ட் போடுவது (சில பேர் செய்யுறாங்கனு வைங்க) கஷ்டம்னாலும், இது சுவையான விபத்து - டாபிக்குக்கு பொருந்துது இல்லையா? சில சுவாரசியங்களை ஆராயக்கூடாதுனு சொல்வாங்க. ஏதோ உங்களுக்குனு ஞானிப் பட்டம் குடுக்குறப்ப வாங்கிட்டுப் போவீங்களா..?

கண்ணதாசன் பிறந்த நாளா? நல்லது.

அப்பாதுரை சொன்னது…

அஜாதசத்ரு-பாலாகி உரையாடலை ரசித்தமைக்கு நன்றி பத்மநாபன், meenakshi. சுவாரசியமான புத்தகம் - ப்ரகதாரண்யக உபனிஷது. நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் படிக்க வேண்டிய புத்தகம். (அப்படி படிச்ச பிறகு வரிக்கு வரி அப்படியே இல்லையே என்று என்னிடம் வம்புக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பாவம். அங்கங்கே புரியாமல் விழித்ததாலும், கொஞ்சம் சுவாரசியத்துக்காகவும், உரையாடல் நடையில் இட்டுக்கட்டியிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்)

ஸ்ரீராம். சொன்னது…

எழுதப் போகும் பதிவுகளை இப்படி ஏதாவது பிழை நேராமல் முன் கூட்டியே அறிய முடியாது என்று தெரியும் மீனாக்ஷி...சும்மா ரசனைக்குத்தான் குறிப்பிட்டு எழுதினேன். நிற்க....(அடேடே உட்காருங்க..உட்காருங்க...சப்ஜெக்ட் மாற இது எழுத்து வழக்குல சொல்றதுங்க...!!! )நீங்கள் சொல்லும் ஹிந்திப் பாடல் ஆந்தி படப் பாடல் தும் ஆகயே ஹோ பாட்டில் வரும் சரணமா, முஹம்மது ரஃபி பாடும் 'ஆத்மி முசாஃபிர் ஹை பாடலா...

அப்பாதுரைஜி,
இந்த மாதிரிப் பதிவில் இப்படிப் பட்ட கேள்விகளா என்று கோபிக்காமல் இந்தக் கேள்வியை அனுமதிப்பீர்கள் என்றே நம்புகிறேன்...!

அப்பாதுரை சொன்னது…

ஸ்ரீராம் நானே கேட்க நினைத்தேன்.. இந்திப்பாட்டு எந்திப்பாட்டுனு. (இந்த மாதிரி பதிவா? ஒரு மாதிரி பதிவுன்றீங்களா?)

அப்பாதுரை சொன்னது…

meenakshi கிட்டே தான் கேட்கணும்.. இந்திப்பாட்டுனு நான் சொல்லவே இல்லையே? இந்திப்பாட்டுனு சொன்னா அதுக்காக இந்தியா? இந்தி மாதிரி தமிழ்ப்பாட்டுனு அர்த்தம்னு ஒரே அடியா அடிச்சாலும் சொல்றதுக்கில்லே. :)

ஸ்ரீராம். சொன்னது…

//"(இந்த மாதிரி பதிவா? ஒரு மாதிரி பதிவுன்றீங்களா?"//

ஒரு மாதிரி காட்டுக் குள்ளே காவி கட்டின பதிவா இருக்கு. எல்லாம் என் மனத்தால் சுமக்க முடியாத கனம். இதுல வெட்டிப் பேச்சு பேச தயக்கம்னு சொல்ல வந்தேன். உண்மையில வெண்பா எல்லாம் எனக்கு வராத கலை. இந்தப் பதிவில் நீங்கள் எழுதியிருக்கும் வெண்பாவில் வத்தியம் போன்ற வார்த்தைகள் எனக்குப் புதிது.

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் தொடர்ந்து படிப்பதே பெரிது. நன்றி, ஸ்ரீராம். (வத்தியம் எனக்கும் புதிது. இதையெல்லாம் தினசரி வழக்கில் பயன்படுத்தவா போகிறோம் என்று தோன்றினாலும், வெண்பா எழுதும் பொழுது சில தட்டுக்கள் மேலேறத் தோன்றுகிறது. பரவாயில்லை என்று படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் :)

கருத்து கனம் என்றா சொல்கிறீர்கள்? இதை ஆறாம்-எட்டாம் வகுப்பு அளவில் மோரல் சயன்ஸ் என்று சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். morals என்ற அளவில் ஏற்பு இல்லாவிட்டாலும், அந்த வயதில் critical thinking திறனை வளர்த்திருக்கும்; emotional quotient போன்ற இன்றைய தேவைகளுக்கான அடிப்படையைக் கொடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! சுவாமி சின்மயானந்தா கூறுவார். இரவு 12 மணிக்கு வந்து கதவைத்தட்டுகிறீர். உமது மனைவி "யார் ?" என்கிறார். "நாந்தான் !' என்கிறீர் "நாந்தான் என்றால்"! "நாந்தான் வசு!" என்று மீண்டும்கறுகிறீர். புரிந்து கொண்ட மனைவிகதவைத் திறக்கிறாள்.
சுவாமிகள் கேட்பார் ."முதலில் நாந்தான் என்றாய். அப்போது யாரை நினைத்துச்சொன்னாய். இந்த ஐந்தடி ஐந்து அங்குல உடம்பையா? பின்னர் கூறிய நாந்தான் என்பது " வசு"என்பவனையா ? எந்த நாந்தான் நீ? உனக்குள் வெறொரு நாந்தான் இருக்கிறானா? அவன் யார்? அவனுக்கும் வசுவுக்கும் என்ன தொடர்பு?" என்று கேள்விகளை அடுக்குவார்.
பிரமை பிடித்தவன் போல் அவருடைய உரையை கெட்டு முகிழ்ந்திருக்கிறேன்.பின்னர் விஞ் ஞான ரீதியாக சிந்தித்து புரிந்து கொண்ட தும் மாறிவிட்டேன். இருந்தாலும் அவருடைய வாதங்கள் சிறப்பாக இருக்கும் ---காஸ்யபன்

meenakshi சொன்னது…

நான் மனதில் நினைத்த பாடலை நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ஸ்ரீராம். :) 'aadmi musafir hai.....' பல முறை தூர்தர்ஷன் 'சித்ரஹார்' நிகழ்ச்சியில் பார்த்த பாடல் இது. அதனாலேயே இன்றும் நினைவில் இருக்கிறது. அப்பாதுரை ஃபகீர் சொன்னதாக எழுதி இருந்ததை படித்த போது பாடலின் இந்த வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

'kyaa saath laaye, kya tod aaye
rasta mein hum kyaa kyaa chod aaye
manzil pe jaa ke yaad aata hai'

அப்பாதுரை சொன்னது…

நன்றி காஸ்யபன்! சின்மயாநந்தாவின் உரைகள் சில படித்திருக்கிறேன். அருமையான கேள்விகளை எழுப்புகிறார் - சிந்திக்க வைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அவர் கொடுத்திருக்கும் கடோபனிஷதின் விளக்கம் பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது - சில சமூகங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடும் இடங்களைத் தவிர :)

Santhini சொன்னது…

" இருக்கிறேன் !"

சாய்ராம் கோபாலன் சொன்னது…

உங்கள் வெண்பாவின் முதல் வார்த்தை பார்த்தவுடன் நடிகர் நாகேஷின் "வீட்டுக்கு வீடு" படத்தில் வரும் "பிகவா வகம் தாகும்" பாடல் தான் நினைவுக்கு வந்தது. "ரா" வராத குடும்பம் (மகளும் / அம்மாவும்) பாட்டு கற்றுக்கொள்கிறேன் என்று வந்து "பிறவா வரம் தாரும்" என்ற பாடலை இப்படி பாடியவுடன். பாகவதர் பட்டுவாக வரும் நாகேஷ் "ரோகுல லாகி வகும், பாக்து போங்க" என்பார் (ரோடுல லாரி வரும், பார்த்து போங்க - என்பதற்கு பதில் !!)

சிவகுமாரன் சொன்னது…

சீரியசான பதிவையும் பின்னூட்டங்களையும் படித்துக் கொண்டிருக்கையில் சாயின் பின்னூட்டம் படித்து குபுக்கென்று சிரித்தேன்

சிவகுமாரன் சொன்னது…

\\வத்தியம் வித்திலாச் சித்ததால் நித்தியம்
தத்திடுந் தத்துவத் தீ.//
அருமை அருமை அருமை.
சித்தர் பாடல்களிலும் , திருப்புகழிலும் இது மாதிரியான , முடுகு சீர் வெண்பா படித்திருக்கிறேன்.
எங்கோ உச்சத்திற்கு சென்று விட்டீர்கள்.
நானும் வெண்பா எழுதுவேன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது.
.

அப்பாதுரை சொன்னது…

பாராட்டுக்கு நன்றிகள் சிவகுமாரன். உச்சமாவது... நீங்க வேறே! ஈற்றடி சட்டென்று தோன்றியதும் அங்கிருந்து புரட்டியது... எல்லாமே தற்செயல் தான் சார். உங்கள் தன்னடக்கம் வியக்க் வைக்கிறது.