40
கயிறுமக்கும் ஆணித் தொழுவைக் கடந்த
உயிரினுக்கும் உள்ளதோ தாமம்? துயிலரசே
அச்சமில்லை உம்மேல் அனைவரும் உய்யவென்
நச்சம் நராந்தக நூற்கு.
உயிரினுக்கும் உள்ளதோ தாமம்? துயிலரசே
அச்சமில்லை உம்மேல் அனைவரும் உய்யவென்
நச்சம் நராந்தக நூற்கு.
உறக்கத்துக்கு அரசனே! உம்மீது எனக்கு அச்சமில்லை. மனித குலத்துக்கு மேன்மை தரக்கூடிய மரணத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதே, என்னுடைய தணியாத விருப்பமாகும். எலும்பும் நரம்பும் வைத்துக் கட்டிய உடல் எனும் சிறையை விட்டு விலகிய உயிருக்கு, வேறு புகலிடம் உண்டா சொல்வீர்? (என்றான் நசிகேதன்).
கயிறு: நரம்பு
அக்கு: எலும்பு
ஆணி: உடல்
தொழு: சிறை
தாமம்: இருப்பிடம், புகலிடம்
துயில்: உறக்கம், மரணம்
நச்சம்: தணியாத விருப்பம், ஏக்கம்
நராந்தகம்: இறப்பு
நூல்: அறிவு, ஞானம்
கோபமும் ஆத்திரமும் தவிர்க்க வேண்டும் என்றாலும், தவிர்க்காத நபர்களிடம் எப்படி நடந்து கொள்வது?
தெளிவோடு பேசத் தொடங்குகிறோம். பதிலுக்கு கோபமும் ஆத்திரமும் வந்தால் நாமும் கலங்கிப் போகிறோம். என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறோம். 'எதற்கு வீண் தகராறு? விரோதம்? நான் என்ன சொன்னாலும் இவர் புரிந்து கொள்ளப் போவதில்லை, சச்சரவை வளர்க்காமல் ஒதுங்குவோம்' என்று பலவாறு குழம்பி ஒதுங்கி விடுகிறோம். இது சரியா, தவறா?
நம் எதிர்ப்பு அறிவார்ந்தது என்றால், ஒரு இலக்கை நோக்கியது என்றால், அந்த இலக்கு வாழ்வின் மிக அவசியமான ஒன்று என்றால்... ஒதுங்கி விடுவதால் எல்லாவற்றையும் இழக்கிறோம். கோபமும் ஆத்திரமும், கொள்பவரின் குணத்தை அழிக்கும் என்றால் இன்னொரு புறம் கூடியிருப்பவரின் இலக்கை மறைக்கும். பிறர் கோபத்திற்கு அஞ்சி நம் இலக்கை மறப்பது முட்டாள்தனம்.
எதிர் கோபமடையலாம். அதனால் பயனில்லை. "உங்கள் கோபத்துக்கு பயப்பட மாட்டேன்" என்று உறுதியுடன் சொல்லலாம். கோபமாக இருப்பவர்களிடம், "சிறிது ஓய்வெடுங்கள், பிறகு பேசுவோம்" எனலாம். "உங்கள் கோபம் என்னைப் பாதிக்கிறது, எனக்கு ஓய்வு தேவை" என்று விலகலாம். வேறு முறையில் கவனத்தைத் திருப்பலாம். என் வீட்டில் நான் கோபப்படும் போதெல்லாம் உடனே எனக்கு ஒரு கப் குளிர்ந்த தண்ணீர் கொடுத்து விடுவார்கள். என் மேலாள நண்பர் ஒருவர் உடனிருப்போர் கோபத்திலும் ஆத்திரத்திலும் பேசினால், உடனே தன் செருப்பைக் கழற்றி மேசை மீதோ நாற்காலியிலோ வைத்துவிட்டு, எந்த இடமென்றும் பாராது, தரையில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு விடுவார். (பலநேரம் அவருடைய செருப்புக்கு பயந்தே) நாங்கள் அடங்கி விடுவோம். கூட்டம் கூட்டிய காரணத்தை மனதில் கொண்டு அமைதியாவோம்.
கோபத்தைக் கண்டு அஞ்சவே கூடாது. கோபத்தின் பின்னே குணமுண்டு என்பது உண்மையோ பொய்யோ, கோபத்தின் பின்னே கோழைத்தனம் உண்டு; 'தன் அதிகாரம் தட்டிக் கேட்கப்படுகிறதே, தன் பிடி விலகிப்போகிறதே, தன் அறியாமை வெளியாகிறதே, தன் இயலாமை புலப்படுகிறதே..' என்ற அச்சம் நிச்சயம் உண்டு. 'i don't argue to win; i simply make my opponent angry' என்றாராம் தாமஸ் ஜெபர்சன். கோபப்படுகிறவர்கள் கோழைகள் என்பதை உணர்ந்தால் கோபத்தை எதிர்கொள்வது எளிது.
பிறருடையக் கோபத்திற்கு அஞ்சி நம் இயல்பையும் இலக்கையும் மாற்றிக் கொண்டால் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இழந்தவராவோம். நம்முடைய அல்லது பிறருடைய கோபமும் ஆத்திரமும் இலக்கிலிருந்து நம்மை விலக்க என்றைக்குமே அனுமதிக்கக் கூடாது. சொல்வதெளிது :).
கேட்க, சொல்ல, அறிய வேண்டியதைத் தெளிவாக்குவது நல்ல மாணவனின் இலக்கணம். எமனுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த சொற்போர்களுக்கு ஒரு முடிவு கட்டினான் நசிகேதன். "ஐயா, எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ஒன்று தான். உயிருக்கு எது உறைவிடம்? உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால் தெளிவாகவே கேட்கிறேன். இதோ எலும்பினாலும் நரம்பினாலும் பிணைக்கப்பட்ட இந்த உடலுக்குள் சிறைபட்டுக் கிடக்கும் உயிர், இந்த உடலை விட்டு விலகியதும் எங்கே போகிறது? அதற்கு புகலிடம் உண்டா? இருப்பிடம் உண்டா? இதை நீங்களறிவீர்கள். அதை எனக்கு விளக்கி என் அறியாமை இருளைப் போக்கி அறிவொளி தாருங்கள்" என்றான். மரணம் மீளா உறக்கம் தானே? மரணத்துக்கு அதிபதி என்பதால் துயிலரசன் என்றான்.
சான்றோர்க்கழகு சேர்ந்தணைத்தல். நசிகேதன் சிறியவன் என்றாலும் சான்றோனல்லவா? தனக்காக மட்டும் கேட்கவில்லை. தனக்குப் பின் வரும் அனைவரும் உய்ய, மரணத்தைப் பற்றிய அறிவு ஒரு உபாயம் என்பதை அறிந்து கேட்டான். தன்னுடைய அறியாமையை அழிக்கக் கிடைத்த வாய்ப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினான். தானும் மனித குலமும் நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய அறிவென்பதால், மன உறுதியுடன் நின்று "இறப்பைப் பற்றிய அறிவையே விரும்புகிறேன்" என்றான்.
தான் உபயோகித்த அனைத்து வசிய முறைகளும் பயன்படாமற் போனதை உணர்ந்தான் எமன். நசிகேதன் தன் பிடிப்பை விட்டுக் கொடுக்க மாட்டான், தளர மாட்டான் என்பது எமனுக்குப் புரியத்தொடங்கியது. ►
19 கருத்துகள்:
'நச்சம் நராந்தக நூற்கு' படிக்க இனிமையாய் இருக்கிறது.
'உயிருக்கு எது உறைவிடம்?' அருமையான கேள்வி. உயிருக்கு உடல்தான் உறைவிடமா? உடல் மட்டும்தான் உறைவிடமா?
வெண்பாவும், கோபத்தை பற்றிய விளக்கமும் மிகவும் அருமை.
கோபத்திற்கான காரணத்தைக் கொண்டு குணமா கோழைத் தனமா என முடிவு கொள்ளலாம் .... பிள்ளைகள் திருத்துவதாக நினைத்து அன்புக்கு மாற்றாக கோபத்தை பயன் படுத்துவது குணம் .இங்கு பொறுமையை கையாள கையாள சினம் தீர வாய்ப்பு அதிகம் .. இயலாமையால் எதிரிகள் மிது செலுத்தும் கோபம் கோழைத்தனம் ..இங்கு வரும் கோபம் அழுத்தம் கூட்டி பல பக்க விளைவுகளை தருகிறது . உங்கள் மேலாளர் பயன் படுத்திய முறை வித்தியாசமாக இருந்தாலும் உடனடி பயனளிக்கவல்லது..
துயிலரசன் எம தர்மராசனுக்கு , நசிகேதனுக்கு உயிர் ஞானம் தருவதை தவிர வேறு வழி இல்லை .. இங்கு நசிகேதனின் விடா முயற்சி பாராட்டுக்குரியது .....
Anger is Debatable என்று ஒரு வாசகம் உண்டு. பெரிய முன்கோபி என்று சொல்லிக்கொள்பவன் கூட காரியம் ஆக வேண்டும் என்றால் அனைத்தையும் பொத்திக்கொண்டு இருப்பான். கோபம் பாபம் சண்டாளம் என்று என் பாட்டி சொல்லுவாள். விஸ்வாமித்திரன், துர்வாசர் போன்ற நிறைய உதாரணங்கள் புராணங்களில் இருக்கிறது.
உயிரின் உறைவிடம். அற்புதமான சொல்லாடல் அப்பாஜி! துயிலரசன் என்ன சொல்லப் போகிறான்....
வருக meenakshi, பத்மநாபன், RVS,...
'கோபத்தின் பின்னே குணம் கிடையாது' என்றே நினைக்கிறேன் பத்மநாபன்.
குணம் இருந்தால் கோபம் வரவேண்டிய அவசியமே இல்லை. பிள்ளைகளைத் 'திருத்துவது' என்ற நினைப்பிலேயே 'குணம்' இல்லையே? கொலை, திருட்டு, பொய், தீவிர ஏமாற்று போன்ற செயல்களைத் தவிர்த்து, பிற செயல்களைத் 'திருத்த' கோபம் தேவையா? பிள்ளைகள் அத்தகையப் பாதகச் செயல்களில் இறங்கினால் கூட, திருத்தக் கோபம் கொண்டும் பயனில்லை. இங்கே கோபம் திருத்துவதற்குப் பயன்படுத்தபடும் உபாயம் அல்ல. தன்னுடைய கௌரவம் போனதே என்ற அவமானத்தை மூடப்பார்க்கும் சாதனம் என்று புரிவதற்கு முன்பே கோபம் கொண்டு விடுகிறோம். மற்றபடி சாப்பிடவில்லை, படிக்கவில்லை, தூங்கவில்லை, எதிர்த்து பேசுகிறாள், சண்டை போடுகிறான், சொன்ன பேச்சு கேட்கவில்லை, பெரியவர்களை மதிக்கவில்லை... போன்ற சில்லறை நடத்தைகளுக்குக் கோபம் கொள்வது (இவையே பெரும்பாலும் பெற்றோர்களின் கோபத்தைத் தூண்டுகின்றன)... இவையெல்லாம் சற்று யோசித்துப் பார்த்தால் 'பெற்றோரின் பிடி விலகல்' என்பது புரியும். பிள்ளைகளின் 'வளர்ச்சி' என்பது புரியும். அதற்காகக் கோபப்பட்டு இருக்கும் குணத்தையும் இழக்கிறோம். (குணம் இருந்தால் :)
கோபத்தை நியாயப்படுத்துவது போலித்தனம் என்று நினைக்கிறேன். என்னுடைய அனுபவத்தைச் சொல்கிறேன்: என் தந்தையின் கோபத்தால் பாதிக்கப்பட்டதையும், என்னுடைய கோபத்தால் உறவிலும் நட்பிலும் பலர் பாதிக்கப்பட்டதையும் வைத்துப் பார்க்கும் போது - கோபம் தான் நினைவில் நிற்கிறது. பிறருடைய கோபத்தாலும் என்னுடைய கோபத்தாலும் நான் இழந்தவற்றுக்குக் கணக்கே இல்லை. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் என் கோபத்துக்கு பலியான சிலர் இன்றும் என்னைக் கண்டு நடுங்கும் பொழுது அவமானத்தால் குன்றிப் போகிறேன். கோபத்தின் பின்னே குணம் கொஞ்சம் கூடக் கிடையாது என்பது என் அபிப்பிராயம். கோபம் சண்டாளம் என்பது மிகச்சரி RVS. சண்டாளம் என்பதன் பொருள் புரிந்த நாளில் கோபம் ரத்தத்துடன் கலந்து விட்டதே!
அறிவுரை வழங்க எனக்கு அருகதை இல்லை, இருந்தாலும் கோபத்தைக் காட்டுவதும், கோபத்துக்கு அடங்குவதும்.. இரண்டுமே மிக மிகத் தாழ்ந்த நிலைக்கு நம்மை எடுத்துச் செல்ல வல்லவை என்பதை உணரவேண்டும். நடந்ததை மாற்ற முடியாது; இனியாவது கோபத்தை அறவே ஒழிக்க முயல்வது நல்லது என்று நம்புகிறேன். "நான் கோபப்படும்படி நடந்து கொள்ளாதீர்கள்" என்று முன்பெல்லாம் சொல்வேன் - அதன் அசிங்கமும் முட்டாள்தனமும் புரிந்த போது மிக அருவருப்பாக உணர்ந்தேன். "என் கோபத்தைக் கண்டு பயப்படாதீர்கள்" என்று என் பிள்ளைகளுக்குச் சொல்லும் அளவுக்குக் கேவலமாக இருந்த நாட்களும் உண்டு.
என் நெருங்கிய உறவினர் ஒருவர் சொல்வார்: "கோபம் கொள்வதில் தவறே இல்லை துரை; எல்லோருக்கும் கோபம் கொள்ள உரிமை உண்டு. அதை வெளிப்படுத்து தான் தவறு; அதுவும் பிறர் மேல் வெளிப்படுத்த உரிமையே இல்லை". (மனிதருக்கு கோபமே வருவதில்லை என்று நினைத்தோம் நாங்களெல்லாம்; சூடு சுரணை கிடையாதா என்று கிண்டல் செய்வேன் முன்பெல்லாம், இப்போது கோபமின்மை அவருடைய வரம் என்று நினைத்து நெகிழ்ந்து போகிறேன்).
அவமானமாக இருக்கிறது இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ள, இருந்தாலும் பொதுவில் இறக்கி வைத்து கொஞ்சம் சுமை குறைந்தது போல் பாவனை செய்கிறேன்.
கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் மேலாளரின் உத்தி அவரின் கோபத்தைத் தான் காட்டுகிறது. எதிரில் இருப்பவர்களை அவமானப்படுத்தும் செயல் அது என்பது என் எண்ணம்,
தாமஸ் ஜாபர்சனின் கருத்து நிறையவே யோசிக்க வைக்கிறது. நல்ல உத்தி அது.
எல்லாக் கோபமும் கோழைத்தனம் அல்ல. ரௌத்திரம் பழகச் சொன்னானே பாரதி ஏன் ?
எனது இந்தக் கவிதையை படித்திருக்கிறீர்களா ?
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/08/ada-aamaam.html
நீங்கள் சொல்வது சரியென்றே படுகிறது சிவகுமாரன். என் நண்பர் கோபமாக எதுவுமே பேசமாட்டார்.. கூட்டத்தில் நாங்கள் சிலசமயம் இலக்கை மறந்து கூச்சல் போடுவோம்; அதுவும் தொழிற்சங்கத் தொடர்பான கூட்டமென்றால் நிச்சயம் கோபதாபம் இருக்கும். நண்பரின் நடத்தை அவரின் கோபத்தை மறைமுகமாகக் காட்டினாலும் எங்கள் இலக்கை மறவாமல் இருக்க உதவியது. முதலில் அவருடைய நடத்தை விசித்திரமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. பழகியது, அவர் செருப்பைக் கழற்றப் போகிறாரே என்று அடிக்கொரு தரம் அவரைக் கவனிக்கத் தொடங்கினோம் (அதுவும் எங்கள் இலக்கை மறைத்தது என்று பின்னாளில் அவரிடம் சொன்னேன்).
பாரதி சொன்னால் என்ன சிவகுமாரன்? கோபம் கோழைத்தனம் என்றே நினைக்கிறேன். வடமொழியில் ரௌத்ரம் என்பது அநீதி கண்டு எழும் அழிவு எழுச்சி - தமிழில் என் எண்ணத்தைச் சரியாகச் சொல்ல வரவில்லை. ரௌத்ரம் என்பதற்குக் கோபம் சரியான தமிழ்ச்சொல்லா தெரியவில்லை - கோபம் என்றே பொருள் சொல்லி வருகிறோம். சினத்துக்கும் எழுச்சிக்கும் வேறுபாடு உண்டே?
மகாபாரதத்தில் தர்மனுக்கு பீஷ்மர் சொன்ன கதை ஒன்றுண்டு.
மேதாதிதி எனும் ஒரு முனிவர் இருந்தார்.அனைத்தும் கற்றவர் கோபம் மட்டும் அடக்க கற்றாரில்லை. பெரும் முன்கோபி. அவருக்கு நேரெதிரான குணங்களுடன் அவர் மகன் திகழ்ந்தான்.அனைத்து சாத்திரங்களையும், புலனடக்கத்தையும் இளமையிலேயே கற்று.. நிதானத்தைக் கடைபிடிப்பவனாய் இருந்ததினால் அவனை அனைவரும் ‘சிரகாரி’ என்றழைத்தனர்.
ஒரு நாள் முனிவர் ஏதோ காரணத்தால் தன் மனைவி மீது மிகுந்த சினம் கொண்டார். பிள்ளையை அழைத்து, தான் திரும்பும் முன் அவளைக் கொன்றுவிடக் கட்டளை இட்டு, தர்ப்பைப்புல் அறுக்க காட்டுக்குள் சென்று விட்டார்.
பிள்ளை யோசனையில் ஆழ்ந்தான். கடவுளையும் விட மேலான தாயைக் கொல்வதா? கொல்லவில்லை என்றாலோ தந்தையும் குருவுமான முனிவரின் கட்டளையை மீறியது ஆகும். தந்தை இட்ட கட்டளை கோபத்தினால் ஆதலால் கோபம் தணிந்தபின் அவர் மனம் மாறலாம். தாயைக் கொன்றுவிட்டாலோ அவர் மனம் மாறியும் பயனிருக்காது. கொல்லாமல் விட்டுவிட்டால் முனிவரின் சாபம் மட்டுமே எஞ்சும். அதுவும் தன்னை மட்டுமே பாதிக்கும். தாய் வாழ சந்தர்பம் இருக்கும். எனவே கொல்வதில்லை எனத் துணிந்தான்.
காட்டுக்கு சென்ற முனிவரின் சினம் மெல்லத்தணிந்தது. தன் கட்டளையின் விளைவை எண்ணிக் கலக்கமுற்றார். தன் மகன் அதை நிறைவேற்றியிருக்கக் கூடாதே என வேண்டியபடியே பர்ணசாலைக்கு ஓடி வந்தார்.
வாசலில் நின்றிருந்த மகன் முனிவரைப் பார்த்ததும் கையிலிருந்த வாளைக் கீழே எறிந்து விட்டு அவர் காலில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டினான். ரத்தமில்லா வாளைக் கண்டு சமாதானமானார். இனி என்றும் கோபிப்பதில்லை என உறுதிபூண்டார்.
கோபம் தன்னிலை மறக்கச் செய்யும். நன்மைக்கும் தீமைக்கும், நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் உள்ள வித்தியாசம் புலப்படாது. காலமெல்லாம் வருத்தம் தரக் கூடிய நிலையைத் தோற்றுவிக்கும்.
பிறர் கோபம் காட்டும் போதும், தான் கோபம் கொள்ளாதவன் பாக்கியவான்.
சுமதி சதகம் எனும் நீதி நூலொன்று தெலுங்கில் உண்டு.
பர நாரி சோதுருடை
பர தனமுலகு ஆச படக,
பரலகு ஹிதுடை,
பரலு தனு போகட நெகுடக
பரு லலிகின நாலுக நடடு பரமுடு சுமதி!
என்ன நாக்கு சுளிக்கிடிச்சா? அர்த்தம் இதோ.
பிற பெண்களை சகோதரிகளாய் நினைப்பவன் ;
பிறர் செல்வத்தை விரும்பாதவன் ;
பிறர் நலம் விழைபவன் ;
பிறர் புகழ்ச்சியில் மயங்காதவன் ;
பிறர் கோபிக்கும் போதும் அமைதி காப்பவன் எவனோ
அவனே மேம்பட்டவன் என அறிவாய் சுமதி!
ஆகவே மகாஜனங்களே! கோச்சுக்காதீங்க..
கதையும் நீதியும் வெகு பொருத்தம் மோகன்ஜி. கோபம் பாழ் - இதை மறக்கவே கூடாது. சுமதியையும்.
சுமதியை மறக்கக் கூடாதா! நன்னா சொன்னேள் போங்கோ. அவள் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெலுங்கு சுமதியாக்கும்.
எந்த நூற்றாண்டா இருந்தா என்ன மோகன் அண்ணா ?
கோவம் பற்றிய விளக்கம் அருமை. கோவம் இயலாமையைக் காட்டும்- கோவம் கொள்பவர் அல்லது கோவத்தை எதிர்கொள்பவர் இருவரின் இயலாமையும். பெரும்பாலும் இரண்டாமவரின் இயலாமையே கோவம் கொள்பவருக்குச் சாதகமாகிறது.
"சுமதி என் சுந்தரி" அப்படின்னு அப்பாஜி சொல்லலையே மோகன் அண்ணா! ;-)))
மோகன் அண்ணா மஹாபாரதக் கதை அற்புதம்.
சிவா ..,... ரொம்ப தப்பு.. எந்த சுமதியா இருந்தா என்னான்னு கேக்கறீங்களே அப்பறமா சுமதி எப்படி இருந்தா என்னான்னு கேட்டுடப் போறீங்க..
ச்சே..ச்சே.. ரூட்ட மாத்து... வெண்பா படிக்கிற இடத்துல பெண்பா படிக்கக்கூடாது... ;-)))
கீதா மேடம் கருத்து சிந்திக்கத் தக்கது.
'சுமதி என்றும் சுந்தரி' என்கிற தலைப்புல அந்த சதகத்தை தமிழில் இன்று தான் எழுத ஆரம்பித்தேன். அதுக்குள்ள சிவாவும் ஆர்.வீ.எஸ்ஸும் என் சுந்தரி உன் சுந்தரின்னு சொந்தம் கொண்டாடறது நல்லாவா இருக்கு?
/வெண்பா படிக்கிற இடத்துல பெண்பா படிக்கக்கூடாது../ன்னு நடுவுல அப்பாவி அறிக்கை வேற! என்னவோ போங்க.. எனக்கு கோவம் கோவமா வருது.
வருக geetha santhanam
பெண்பாவா? ஆகா RVS! (எவனோ துரத்துறா மாதிரியே இருக்கே.. நான் புலவன் இல்லே.. இல்லை.. நீங்கள் புலவர்.. நீங்கள் தான் புலவர். நான்.. நான்.. நான் புலவன் இல்லை..)
///அவமானமாக இருக்கிறது இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ள, இருந்தாலும் பொதுவில் இறக்கி வைத்து கொஞ்சம் சுமை குறைந்தது போல் பாவனை செய்கிறேன்.//
அவமானம் என்பது தன்மேல் கொண்ட கோபம் அல்லவா? அதையும் விலக்கி விட்டால்.......
--
ஆகா! மண்டையில ஒண்ணு போட்டீங்க!
>>>அவமானம் என்பது தன்மேல் கொண்ட கோபம் அல்லவா?
@மோகன்ஜி
அண்ணா ரொம்ப சாரி! கொனைஷ்டை இல்லாம இருக்க முடியலை... ;-)
பிரிய ஆர்.வீ.எஸ் ! நான் கொஞ்சம் கலாய்த்தேன்.. உமக்கு அழகே அந்த கொனஷ்டை தான் மைத்துனரே! அதை விட்டுட்டு அலையாதேயும்.. அப்புறம் சீனியர் சிடிசன்னு பாஸ் கொடுத்திடுவாங்க! இன்றுபோல் என்றும் வாழ்க!
கருத்துரையிடுக