வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/04/05

அஞ்சேன் என்றான் நசிகேதன்


39
வந்தது மும்புரட்டல் மூவர மீந்துபின்
வெந்தது மும்புரட்டல் வேதியே - சிந்தியும்
இன்மொழிக்கே அஞ்சுவது இன்மொழிக்கும் அஞ்சலேல்
வன்மொழிக்கோ வற்பை விடும்?

    பேரறிஞரே! நான் இங்கு வர நேர்ந்தது உமது புரட்டல்; மூன்று வரங்களை வழங்கியது உமது புரட்டல்; பிறகு வெகுண்டதும் உம் புரட்டலே! சற்று சிந்திக்க வேண்டுகிறேன். அன்பு மொழிக்கு அஞ்சி அடங்கும் மனம், உங்கள் கனிமொழிக்கே கட்டுப்படவில்லை, கடுமொழிக்கா பிடிப்பை இழக்கும்? (என்றான் நசிகேதன்).

  வேதி: அறிஞர், ஞானி [ஆன்மாவைப் பற்றிய நுண்மையறிந்தவன் என்பதால் எமனை வேதி என்றான். வேதி என்ற சொல்லுக்குத் துன்புறுத்துபவர், ரசவாதம் செய்பவர் என்ற பொருளும் உண்டு. தன்னைத் துன்புறுத்த வல்லவன் என்பதால் வேதி என்றான். தாழ்ந்த பொருளை உயர்ந்த பொருளாக்கும் ரசவாதியைப் போல், அறிவற்ற தன்னை அறிஞனாக உயர்த்த வல்லவன் என்பதாலும் நசிகேதன் எமனை வேதியென்றான்]
  வற்பு: உறுதி.



    ன்புக்குக் கட்டுப்படுவோர் ஆத்திரத்துக்குக் கட்டுப்படுவதில்லை (சிலர் விதி விலக்கு :). அச்சமூட்டுவதால் அந்தக் கணத்து எண்ணம் நிறைவேறக் கூடும். அச்சம் தொலைந்ததும் மதிப்பும் கூடவே தொலைந்து விடுவதால், அச்சமும் ஆத்திரமும் நிலையான வசிய முறைகள் ஆகமாட்டா. மதிப்பைத் தொலைத்ததும் மற்ற நேயங்களும் மறையும்.

    ஆத்திரமும் கோபமும் இரு புறமும் மதிப்பைக் கெடுக்கும். ஆத்திரப்பட்டவர் மதிப்பிழப்பது ஒரு புறம். ஆத்திரத்தால் பாதிக்கப்பட்டவரும் மதிப்பிழக்கிறார்கள். ஆத்திரத்துக்குக் கட்டுப்பட்டதால் 'எளியோன்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மதிப்பிழக்கிறார்கள்; மேலும், ஆத்திரத்தை எதிர்க்க முடியாத இயலாமையால் வெட்கப்பட்டு சுயமதிப்பையும் இழக்கிறார்கள். கோபத்துக்கு பயப்படுபவர்கள் கோழைகள். தன்மான இழப்புக்கும் ஒரு படி கீழே கோழைத்தனம்.

    'அன்புக்கே வசியமாகவில்லை, நான் ஆத்திரத்துக்கா அடங்குவேன்?' என்று நினைத்தான் நசிகேதன். 'என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இந்த எமர்? என் உறுதியைக் குறைவாக எடை போடுகிறாரா?' என்று எண்ணிச் சற்றே தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். எமன் மீதிருந்த மதிப்பு குறையவில்லை எனினும், எமனின் நிலையை எண்ணி சற்றே வருந்தினான். 'சிக்கினாரய்யா நம் கையில்!' என்று தனக்குள் சிரித்தபடி, எமனை நோக்கினான்.

    "ஐயா" என்றான். "புரட்டல் என்கிறீர்களே, புரட்டல் கணக்கு சொல்கிறேன் கேட்கிறீர்களா?" என்றான். "வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை விவரம் தெரிந்தவன் போல் எண்ண வைத்ததும் புரட்டல். விவரம் தெரிந்து தந்தையிடம் வேள்விப்பலன் பற்றிக் கேட்க வைத்ததும் புரட்டல். வேள்விப்பலன் கேட்டது பொறுக்காமல் என் தந்தை சீறியதும் புரட்டல். சீறிச் சிவந்து என்னையே உமக்குத் தானமாகத் தந்ததும் புரட்டல். தானமாக வந்தவன், உம் வீட்டில் தவிக்க நேர்ந்ததும் புரட்டல். தவித்தவனுக்கு மூன்று வரம் தருவதாகச் சொன்னதும் புரட்டல்" என்றான். 'இந்தப் புரட்டல் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?' என்பது போல் எமனைப் பார்த்து, "வரம் தருகிறேன் என்றதும் நுட்பமான வரங்களைக் கேட்க வைத்ததும் புரட்டல். கேட்டதும் கோபத்தில் மிரட்டியதும் புரட்டல். நீங்கள் பேரறிஞர். உங்களுக்குத் தெரியாத புரட்டலா?" என்றான்.

    எமன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். நசிகேதன் விடுவதாயில்லை. "இனியும் புரட்ட வேண்டுமா? தாராளமாகப் புரட்டுங்களேன்" என்று எமனிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. என்ன சொன்னான்?

    "ஐயா, இந்த மனமிருக்கிறதே மனம்.. அது அன்புக்கு அடிமையாகும், அடங்கும், வசியப்படும். வேறு எந்த முறையிலும் மனதை அடைய முடியாது. அன்பு ஒன்றினால் மட்டுமே ஒருவரை வசியப்படுத்த முடியும்" என்று எமனைப் பார்த்தான். "இதில் வேடிக்கை பாருங்கள்.. வேதியரே. நீங்கள் அன்போடு அத்தனை பேசியும் தந்தும் இந்த மனம் உங்கள் வசமாகவில்லை; நீங்கள் சொன்னதைக் கேட்கவில்லை; நிலையாக நின்றது. பயமுறுத்தினால் பயப்படவா போகிறது? இன்சொல்லுக்கு உருகாதது, உமது சுடுசொல்லுக்கு அஞ்சித் தன் நிலையை, உறுதியை, உடைக்கவா போகிறது?" என்றான். இல்லாத மீசையை முறுக்கி, "பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தீரோ?" என்றான்.

    நசிகேதன் பேச்சுக்கு இன்னொரு பொருளும் உண்டு. அன்பானது மயக்கும் தன்மையது. ஒருவருடைய அன்புக்குக் கட்டுப்பட்டு வசியமான மனம், பிறகு அவருடைய கோபம் எரிச்சல் கடுமொழியை எதிர்கொள்ளும் பொழுது அனைத்தையும் ஒதுக்கி அன்பை மட்டுமே மனதிலிறுத்திக் காண்பதால், கோபத்தால் பாதிக்கப்படுவதில்லை. எங்கிருந்தோ வந்த நசிகேதனை எடுத்து அரவணைத்து ஆதரவு தந்து அன்பு காட்டி வசியப்படுத்தி விட்டதால், எமனின் கோபத்தீயை அன்பு வெள்ளம் அடக்கி விட்டது எனலாம். ஆழ்ந்த அன்பின் அறிகுறி. (ஒரு விதத்தில் கண்மூடித்தனம். இக்காலத்தில் மனிதர்களுக்கிடையில் இந்த நிலையேற்படுவது அனேகமாக impractical :)

    நசிகேதனின் துணிவும் முதிர்ச்சியும் எமனை வியக்க வைத்தது. 'அவ்வளவு தானா, இன்னும் ஏதாவது வசியமுறை வைத்திருக்கிறீரா? இல்லையெனில் சொற்படி வரம் தாருமய்யா? உயிர்ப்பயண விவரங்களைச் சொல்லுமய்யா?!' என்று நசிகேதன் விரட்டுவது போல் உணர்ந்தான். விழித்தான். 'இந்தப் பிள்ளை என் வயதுக்குக் கூட மதிப்பு கொடுக்கவில்லையே?' என்று எண்ணினான்.


தேடிச் சோறு நிதந்தின்று பல
   சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
   வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்
   கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் பல 
வேடிக்கை மனிதரைப் போலே நான் 
   வீழ்வேன் என்று நினைத்தாயோ?
எந்தச் சோர்விலிருந்தும் நம்மை நாமே அடித்து எழுப்பிக்கொள்ள பாரதி தந்தத் தமிழ்ச்சவுக்கு.


10 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

புரட்டல்களை பட்டியல் இட்டு , அன்பின் பெருமையை , ஆத்திரத்தின் சிறுமையை எடுத்து சொன்ன நசிகேதனிடம் எமன் ,உயிர் பயண ரகசியத்தை என்ன சொல்லி மறுக்க முடியும்...

முண்டாசு கவியின் தமிழ் சவுக்கு இடம் பார்த்து விழுகிறது....

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! அற்புதமான சொல்லாடல்."தமிழ் சவுக்கு".---காஸ்யபன்

RVS சொன்னது…

தமிழ் சவுக்கு. அப்படியே விளாசுகிறது. புரட்டல் என்று சொல்வதற்கும் கோபப்படுவானோ யெமா?

சென்னை பித்தன் சொன்னது…

பாரதியின்’தமிழ்ச்சவுக்கை’முடிவில் இணத்த விதம் மிக நன்று!

ஸ்ரீராம். சொன்னது…

என்ன மாமா என்று அழைக்காத குறையாய் எமனை அன்பால் வீழ்த்தி விட்ட சிறுவன்...

RVS சொன்னது…

சார்! ஸ்ரீராமின் பின்னூட்டத்தை வெகுவாய் ரசித்தேன். ;-))
பாசக்கார மாமா என்பதற்கு பதிலாக பாசக்கயிறு மாமா என்று கூப்பிட்ருப்பானோ? ;-))

அப்பாதுரை சொன்னது…

வருக பத்மநாபன், kashyapan, RVS, சென்னை பித்தன், ஸ்ரீராம்,...

கோடு போட்ட கடோவின் தயவில் கொஞ்சம் ரோடு போட்டிருக்கிறேன் - விலகவில்லை என்று நம்புகிறேன், தொடர்ந்து படிப்பதற்கு மனமார்ந்த நன்றி. (சாய்ராம் - நான் உபயோகித்திருக்கும் விதம் சரிதானா? இல்லை கோடு-ரோடுக்கு வேறே அர்த்தமா?)

அப்பாதுரை சொன்னது…

ஸ்ரீராம்: மாமா கமென்ட் வாழைப்பழ-ஊசி நாசூக்கு.
RVS: நீங்க பதினாறு அடி தாண்டுறீங்க - பாசக்கயிறு மாமா பர்ஸ்ட் க்லேஸ்.

மோகன்ஜி சொன்னது…

அன்பில் பந்தப்பட்ட மனமானது,கோபம் வெறுப்பென தம் அன்புகுறியவர் காட்டும்போதும் அதை தாங்கிக் கொள்வதை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். அன்பு வலிமையான ஆயுதமே. முத்தாய்ப்பாக பாரதியின் கவிதை இன்னும் பொருத்தமாய் இருக்கிறது.
"காலா! அருகே வாடா! சற்றே உன்னைக் காலால் மிதிக்கிறேன்" என்று சொன்னவனல்லவா அவன் !

சிவகுமாரன் சொன்னது…

அன்புக்கு அடங்காத மனம் அதட்டலுக்கு அடங்குமா? நசிகேதனின் துணிச்சல் வியக்க வைக்கிறது. பாரதியின் கவிதையை இணைத்தது மிக அருமை.