16
ஆறுமுறை அந்தனே! என்னறை உன்சிறையாய்
ஊறுநிறை ஆறிலரைப் போதிருந்தாய் - கூறுன்
குறையேதுந் தீர்த்தால் தறையேன் கறைபோம்
முறையேநீ மூன்றுவரங் கேள்.
ஊறுநிறை ஆறிலரைப் போதிருந்தாய் - கூறுன்
குறையேதுந் தீர்த்தால் தறையேன் கறைபோம்
முறையேநீ மூன்றுவரங் கேள்.
    ஆறு நற்குணங்களின் இருப்பிடமான அழகனே! துன்பம் நிறைந்த மூன்று நாட்களை என் இல்லமென்னும் சிறையில் கழித்தாய்; உன் குறைகளைச் சொல், தீர்த்து வைத்தால் விருந்தோம்பல் தவறினால் இழிவடைந்த என் களங்கம் நீங்கும்; (எனவே) மூன்று வரங்களைக் கேட்பாயாக (என்றான் எமன்).
  ஆறுமுறை: ஆறும் + உறை | ஆறு நிறைகுணங்களின் இருப்பிடமான | அன்பு, நன்றி, கருணை, அடக்கம், பொறுமை, நேர்மை என்பன ஆறு நிறைகுணங்கள் | முதல் மூன்றை நற்குணங்களாகவும், கடை மூன்றின் எதிர்குணங்களைப் பகைகளாகவும் (ஆசை, வெகுளி, மயக்கம் எனும் முப்பகை), இறை மற்றும் நெறி இலக்கியங்கள் விவரிக்கக் காணலாம்
  அந்தனே: அழகனே, அறியாதவனே | அரச இளவலை அழகனே என்று எமன் அறிந்து விளித்ததாக ஒரு பொருள் | நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் சிறுவனின் அறிவு இன்னும் விரிவடையவில்லை, வரப்போகும் அறிவூட்டத்தைக் குறிப்பாலுணர்த்தும் பொருட்டு அறியாதவனே என்று விளித்ததாக மற்றொரு பொருள்
  ஊறு: இன்னல், துன்பம்
  ஆறிலரை: மூன்று | நசிகேதன் துன்பப்பட்ட மூன்று நாட்களின் எண்ணிக்கை
  தறை: குற்றம், இழிவு | விருந்தோம்பலில் தவறிழைத்துத் தறைபட்டான் என்பதால் தன்னைத் தறையேன் என்றான் எமன்
  கறை: இருள், இழுக்கு, அழுக்கு | விருந்தோம்பலில் ஏற்பட்ட தவறு, தவறின் பலன்
    பணத்தால் மதிப்பிட்டாலும் சரி, வேறு முறைகளைப் பயன்படுத்தினாலும் சரி, மனித மனதுள் அனைத்துக்கும் விலை உண்டு; அனைத்து நஷ்டங்களுக்கும் இணையான ஈடு உண்டு. பொதுநலக் கொள்கைகளைச் செயல்படுத்தும் போதும், பொதுச்சட்டங்களை இயற்றும் போதும் இந்த "விலையை" கணித்து, அதற்கேற்ற படி திட்டங்கள் சட்டங்களாகின்றன. சம்பளப்படி நிர்ணயத்திலிருந்து இழப்புக்கான நஷ்டஈடு கணிப்பு வரை, 'நியாயமான ஈடு' முறை பயன்படுத்தப்படுகிறது. கலவரக் கட்டுப்பாட்டு வழிமுறைகளில் நஷ்டஈடு முக்கியமானது. வழங்கப்படும் ஈட்டின் அளவுக்கேற்ப, பாதிக்கப்பட்டவர்களின் மனம் நிறைவடைகிறது.
    அழையா விருந்தாளிக்கு மாளிகையும் சிறையே. விருந்தாளி என்றில்லை; நம் குடும்பத்திலோ வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அண்டியிருப்போரை மதியாதபோது அவருக்கு மனதளவில் சிறைத்தண்டனையை வழங்குகிறோம்.
    தன் எதிரியின் வலிமையை அறிந்து கொண்டவன்தான் போரிலே வெற்றி பெற முடியும். தன் மாணவனின் அறிவுத் திறனை, அறியும் திறனை, முழுமையாக அறிந்து கொண்டவனே நல்ல ஆசிரியனாக முடியும்.
    விருந்தோம்பலில் இருந்தக் கவனம், மூன்று வரங்களுக்குத் திசைமாறிவிட்டது. மூன்று நாட்களுக்கு ஈடாக மூன்று வரங்கள் என்ற கணக்கானாலும், எமன் ஒரு வரத்தோடு நின்றிருக்கலாம். 'தர்மராசன் என்று போற்றி வந்தவர்கள் எல்லோரும் இனித் தன் தவறைப் பற்றியல்லவா பேசுவார்கள்?' என்ற பொதுப்பார்வை காரணமாகவும், தன் தவறால் மூன்று நாட்கள் துன்பப்பட்ட பிள்ளையை எண்ணி வருந்தியதாலும், எமன் மூன்று வரங்கள் அளிப்பதாக வாக்களித்தான்.
    வாசன் அவசரப்பட்டு வாக்கு கொடுத்ததாலன்றோ நசிகேதனுக்கு இந்த நிலை ஏற்பட்டது? எமனும் அவசரப்பட்டு வாக்களித்தானா? நசிகேதன் என்ன கேட்பான் என்பதை எமன் அறியாவிட்டாலும், நசிகேதன் கேட்கும் வரங்களை எப்படி வழங்குவது என்பதை எமன் அறிந்திருந்தான் என்றே கொள்ள வேண்டும்.
    நசிகேதனை அறிவுள்ளவன் என்று அறிந்தவனும் அறிவுள்ளவன் தானே? கேள்வியின் தரத்தை வைத்துத்தானே மாணவனை எடை போடுகிறார் ஆசிரியர்? கேட்கும் வரங்களின் தரங்களை வைத்து கேட்பவனின் தரத்தை எடை போடும் வித்தை. இங்கே எமன் வீசியிருப்பது வலை. நசிகேதன் எப்படிப்பட்டவன்? என்ன கேட்பான்? அவனும் எமனை ஆழம் பார்க்கிறானா? எமனுக்கும் நசிகேதனுக்கும் இடையிலான சதுரங்க ஆட்டம் இனித் துவக்கம். ►
7 கருத்துகள்:
hai uncle ,
I think your profile picture is "Berry the platypus". but my dad is telling that it is a scorpion. Which is correct? please tell me.
நசிகேதன் பதில் வலையை வீசட்டும்...
வருகைக்கு நன்றி vivek, ஸ்ரீராம், ...
platypus is correct, Vivek.
மூன்றிற்கு மூன்றாய் சதுரங்கத்தில் முதல் அசைவை எமன் நகர்த்த நசிகேதனின் அசைவு ஆர்வத்தை அதிகமாக்குகிறது..இதில் தோல்வி பெறுபவர் வெற்றியாளராக கொள்ளப்படுவாரோ...என்பது போல் எமனின் அசைவு இருக்கிறது..
\\\பணத்தால் மதிப்பிட்டாலும் சரி, வேறு முறைகளைப் பயன்படுத்தினாலும் சரி, மனித மனதுள் அனைத்துக்கும் விலை உண்டு; அனைத்து நஷ்டங்களுக்கும் இணையான ஈடு உண்டு.//
நிதர்சனமான உண்மை. பத்திர்க்கைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த ஒரு நடன இயக்குனரின் காதல் வழக்கு நினைவுக்கு வருகிறது. கோடிக்கணக்கில் செட்டில் பண்ணியதும் இப்போது மனைவி கப்சிப் ஆகிவிட்டாராம்.
\\வழங்கப்படும் ஈட்டின் அளவுக்கேற்ப, பாதிக்கப்பட்டவர்களின் மனம் நிறைவடைகிறது.//
நூத்தில ஒரு வார்த்தை (வாக்கியம்?)
முப்பகையில் ஒன்று 'வெகுளி' என்கிறீர்களே, வெகுளித்தம் என்பது குழந்தைதனம்தானே, அது எப்படி பகையாகும்?
//கேள்வியின் தரத்தை வைத்துத்தானே மாணவனை எடை போடுகிறார் ஆசிரியர்? //
இதை படித்த பின்னும் இந்த கேள்வியை தைரியமாக கேட்டிருக்கிறேன்.:)
'மனித மனதுள் அனைத்துக்கும் விலை உண்டு'. முற்றிலும் உண்மை.
வெண்பாவை விளக்குவதற்காக நீங்கள் எழுதும் விளக்கங்களை படிக்கும்போது ஒரு நிறைவு உண்டாகிறது. சில வரிகள் சிந்திக்க வைக்கிறது. சில வரிகள் மனதை சீர்படுத்தவும் உதவுகிறது. நன்றி!
வெகுளி என்றால் சினம், வெறுப்பு. குழந்தைத்தனம் அல்ல.
நீங்கள் சொல்லும் பொருளில் 'வெகுளித்தனம்' வழங்கப்படுவது உண்மை; காரணம் எனக்குத் தெரியாது. வெகுளிக்குக் காரணம் அறியாமை அல்லது அறிவு மழுங்கல். குழந்தைகள் எல்லாவற்றையும் அறிந்து செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் அறியாமை என்ற பொருளில் 'வெகுளித்தனம்' வந்திருக்கலாம். இதில் வியப்பு என்னவென்றால், "வெகுளி" என்னவோ சிறப்பான அடைமொழி போல் "ரொம்ப வெகுளி" என வழங்குவதே.
கருத்துரையிடுக