வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/12/01

தானே தானமாகத் துணிந்தான் நசிகேதன்


4
தேயும்பொன் காயுமா தானந்தான் தானமா?
சேயுந்தான் செல்வம் எனநினைந்தான் - தீயுள்தான்
போந்தாலும் தந்தைக்குப் பேர்தான் எனத்தேர்ந்தான்
தாந்தானத் தானமெனத் தான்.

    ழியக்கூடிய பொன்மணிகளும், வரண்டுபோன கால்நடைகளையும் வழங்குவது தான் தானமா? 'பிள்ளையும் *செல்வம் தானே?' என்று நினைத்தான். தான் தீயிலிறங்க நேர்ந்தாலும் தன் தந்தைக்குப் பெருமையே சேரும் என்றறிந்து, தானே பயனுள்ள தானம் என்று மனந்தேறினான்.

  தேயும்பொன்: அழியும், மறையும் செல்வம் என்ற பொருளில் வருகிறது
  காயுமா: காயும் ஆ; வரண்டு நிற்கும், நொடிக்கும், தானப்பசுக்களைக் குறிக்கிறது
  ஆர்ந்தான்: அடங்கினான், ஒப்புக்கொண்டான்; ஏற்றான் என்ற பொருளில் வருகிறது
  தாந்தானத் தானமென: தான் தான் அ(ந்த)த் தானம் என
*தான் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் வழங்குவது அண்டவாகை வேள்விமுறை. 'பிள்ளையும், பெற்ற செல்வம் என்ற வகையில், வழங்கப்பட வேண்டிய தானம் தானே?' என்று நசிகேதன் நினைத்தான். பசும்பிள்ளைக்கு வேள்விமுறைகளும் பயன்களும் பற்றிய அறிவு எப்படி வந்தது என்ற ரகசியம் பின்னொரு பாடலில் விளக்கப்படுகிறது.



    வறு செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் தவறு செய்தமைக்கு ஒப்பாகும் அல்லவா? தவறு செய்வோர், பெரும்பாலும், அந்தக்கண அறியாமையில் மயங்கித் தவறிழைக்கிறார்கள். அவ்வாறு தவறு நேரும் பொழுது - சிறு பொய் ஏமாற்று திருட்டிலிருந்து, தீயபழக்கம் வெறி ஆத்திரம் கண்மூடித்தனம் வரை - அதைச் சுட்டிக்காட்டுவதோ, திருத்தம் சொல்வதோ, திசை திருப்புவதோ, நேர்வழியில் செலுத்துவதோ... எதையும் உறுத்தாத வகையில் செய்வது, பக்குவ மனதின் சின்னம். தவறையோ தோல்வியையோ பெரிதுபடுத்தாமல், முயற்சியைப் பாராட்டிச் செப்பனிடச் செய்வது மேலாண்மையின் இலக்கணம் என்று அறிவோம். ஆசிரியர்களைப் புனிதர்கள் என்று போற்றக் காரணம் அவர்கள், அறிவைத் தேடும் முயற்சியில் தவறி விழுபவர்களை விழுந்தது தெரியாமல் எடுத்து நிறுத்தி மீண்டும் சரியான பாதையில் செலுத்துவதனாலேயாகும்.

அந்த வகையில் நசிகேதன் ஒரு சிறந்த ஆசிரியனாகிறான். எத்தனை பிள்ளைகள் தந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனர்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அத்தனை பிள்ளைகளும் தான் என்று தோன்றுகிறது. தந்தைகளான நாம்தான் அதை மறந்து புறக்கணித்து விடுகிறோம். கள்ளமில்லாத பிள்ளைகளின் எண்ணங்களிலும் செயல்களிலும், கள்ளத்தனத்தையும் கண்மூடித்தனத்தையும் ஒரு வகையில் பெற்றவர்களும் பெரியவர்களும் தான் உருவாக்குகின்றனர் - பிள்ளைகளுக்குப் பாதுகாப்பும் பொது அறிவும் வழங்கும் சாக்கில் - என்று தோன்றுகிறது. (தந்தை: இங்கே தந்தை/தாய் இரண்டுக்கும் பொதுச்சொல்; உண்மையில் தாயில்லாமல் சேயில்லை, தந்தையுமில்லை)

    சிறு பிள்ளையென்றாலும் தானம் வழங்குவதன் காரணத்தைப் புரிந்து கொண்டு, பயனில்லாத தானங்கள் செய்யும் தந்தையின் நிலையை எண்ணி வருந்தினான் நசிகேதன். 'தந்தையின் வழியில் குறுக்கிடாமல் அவரை எப்படி நல்வழியில் திருப்புவது? பயனுள்ள தானம் வழங்கிடச் செய்வது எப்படி?' என்று சிந்திக்கையில் அவனுக்கு வேள்விமுறை நினைவுக்கு வந்தது. 'அண்டவாகை வேள்வியில் தந்தை எல்லாச் செல்வங்களையும் வழங்கியாக வேண்டுமே? பயனுள்ள செல்வங்களைத் தானம் கொடுக்கச் செய்வதெப்படி? அவரிடம் இருக்கும் செல்வங்களிலே மிகவும் பயனுள்ள செல்வம் எது?' என்றெல்லாம் நினைத்தான். பின், தன்னைத் தானே பார்த்துத் தெளிந்தான். தான் அந்தத் தானமானால் தந்தையின் தவறு நீங்கி, வேள்விப்பலனும் கிடைத்துவிடும் என்று அறிந்தான். யாருமே தானம் பெறாமல், தன்னை வேள்வித்தீ விழுங்கினாலும் அதனால் தன் தந்தைக்குப் பெருமையே என்று நினைத்தான். தந்தைக்குப் பேறு கிடைக்க, தானே ஒரு பயனுள்ள தானமாவதென்று தீர்மானித்தான். வயதில் சிறியவன் என்றாலும், தன்னால் பிறருக்குப் பயனுள்ள விதத்தில் நடக்கமுடியும் என்று துணிந்தான்.

'தன்னை வேள்வியில் வழங்குமாறு தந்தையிடம் எப்படிச் சொல்வது? பிறர் சொல் கேளாத இவரைத் தன்வழிக்கு, நல்வழிக்குக் கொண்டு வருவதெப்படி? பெற்ற பிள்ளையைத் தானமாக எப்படி வழங்க வைப்பது?' என்று பலவாறாக நினைத்த நசிகேதன், தந்தை வாசனிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தான்.

15 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

இப்படி யோசிக்கும் பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தான்? இதற்கு மேல் செல்வம் பெற யாகம் வேறு தேவையா? அப்புறம் நமக்கு எப்படி கடோபநிஷத் கிடைக்கும்...இல்லையா>

பத்மநாபன் சொன்னது…

///தானந்தான் தானமா?// முதல் வரியின் முடிவும் //தாந்தானத் தானமெனத் தான்// தமிழின் தந்தனத்தோம் என ரசிக்க வைத்தது... காயுமா - மீண்டும் ஒரு ஈரசை வித்தை ...

நசிகேதனின் ஆசிரியத்தன்மை ஆச்சர்ய படுத்துகிறது.....

// (தந்தை: இங்கே தந்தை/தாய் இரண்டுக்கும் பொதுச்சொல்; உண்மையில் தாயில்லாமல் சேயில்லை, தந்தையுமில்லை) // மிக மிக ச்சரியாக சொல்லியுள்ளீர்கள்.

தந்தையின் பேறுக்கு தன்னையே தர நினைக்கும் செயல் புனிதமானது ...தனயனுக்காக தந்தைகூட நினக்காத செயல் ....

துளசி கோபால் சொன்னது…

அருமையா இருக்கு உங்கள் விளக்கங்களும் வரும் பின்னூட்டங்களும்.

தொடர்ந்து வருகிறேன்.

சிலநாட்கள் ஊரில் இல்லை. இன்னிக்கு மொத்தமா அரியர்ஸ் முடிச்சுட்டேன்:-)

geetha santhanam சொன்னது…

/தாந்தானத் தானமெனத் தான்/
நல்லா இருந்தது உங்கள் வெண்பா.
ஒரு ராஜாவாக இருந்தும் பயனில்லா விஷயங்களைத் தானம் தரத் தூண்டியது எது? இந்த உலக விஷயங்களில் (செல்வத்தில்) இத்தனை பற்று வைத்திருக்கும் அவர் நீண்ட ஆயுள் வேண்டி வேள்வி செய்யாது சொர்கலோகம் வேண்டியது ஏன்?

சிவகுமாரன் சொன்னது…

"தாந்தான தானமெனத் தான்."
ஆகா.
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

சிவகுமாரன் சொன்னது…

"தாந்தான தானமெனத் தான்."
ஆகா.
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

அப்பாதுரை சொன்னது…

நன்றி ஸ்ரீராம், பத்மநாபன், துளசி கோபால்,geetha santhanam, சிவகுமாரன், ...

அப்பாதுரை சொன்னது…

கீதாவின் கேள்விக்கு ஸ்ரீராமின் கேள்வியில் பதிலோ? பேராசை. இருக்கும் பொழுது கிடைத்த வசதிகள் போதாதென்று இறந்தபிறகும் வேண்டினான் மன்னன்.

சாதாரணமானருக்கே உயிருடன் இருக்கும் பொழுது, தன் நிலை பற்றிய ஆணவம் வரும். அதன் காரணம், இருக்கும் பொழுது நம்மைச் சுற்றி நடப்பவற்றை ஓரளவுக்கு பிடிக்குள் கொண்டு வர முடிகிறது. கண்ணுக்கும் மனதுக்கும் புலப்படாத மரணம் சொர்க்கம் நரகம் போன்றவற்றை எண்ணியவுடன் அத்தனை அறிவும் போச்சு! விரதம், பூஜை, பலி, தானம், தருமம் என்று 'போகும் வழிக்கு' புண்ணியம் தேடிக் கொள்கிறோம் இல்லையா? அதுவும் பெரிய அரசனாக இருக்கும் பொழுது கேட்க வேண்டுமா? மண்ணுலகத்தை ஆள்பவனுக்கு விண்ணுலகப் பேறும் கிடைக்க ஆசை வந்தது - விண்ணுலகில் சாதாரண பிரஜைகளோடு வாழப் பிடிக்கவில்லையோ என்னவோ! இந்த நாளிலும் அந்த நாளிலும் சரி, மரணம் என்கிற புரியத அவஸ்தையிலிருந்து விடுபட மக்கள் என்ன வேண்டுமானலும் செய்வார்கள் போல! 'பிறப்பையும் நாம் உணரவில்லை; இறப்பையும் உணரப்போவதில்லை - எதற்காக வீண் கலவரம்?' என்ற விழிப்பு வருமா தெரியவில்லை. நல்ல கேள்வி கீதா.

meenakshi சொன்னது…

எவ்வளவு அற்புதமான பிள்ளை நசிகேதன்! இப்படி ஒரு பிள்ளை தனக்கு வாய்த்திருப்பதை கண்டு, மகிழ்ந்து, கொண்டாடி பேரின்பம் அடையாமல், விண்ணுலக பேரின்பம்! அது உண்மையில் பேரின்பம் தருமா என்றே தெரியாத ஒன்றிற்கு இவ்வளவு பெரிய யாகத்தை நடத்தும் மன்னனின் அறியாமையை என்னவென்று சொல்வது!
உங்கள் விளக்கம் மிகவும் அருமை! மனதிற்கும் நிறைவை கொடுக்கிறது.
பின்னூட்டங்களும் அருமையாக இருக்கிறது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நசிகேத வெண்பா அமைப்பும் விளக்கங்களும்சிறப்பாக உள்ளன.தொடர்ந்து படித்துச் செல்ல வேண்டிய பதிவுகள்.வாழ்த்துக்கள்

geetha santhanam சொன்னது…

//நல்ல கேள்வி கீதா//
திருவிளையாடல் நாகேஷ் போல் எனக்குக் கேள்வி கேட்கத்தான் தெரியும்.

agaramamuthan சொன்னது…

தேயும்பொன் காயுமா தானந்தான் தானமா?
சேயுந்தான் செல்வம் எனநினைந்தான் - தீயுள்தான்
போந்தாலும் தந்தைக்குப் பேர்தான் எனவார்ந்தான்
தாந்தானத் தானமெனத் தான்.



மூன்றாமடியின் நான்காம்சீரை இப்படி மாற்றலாம் எனக்கருதுகின்றேன்.

'எனஓர்ந்தான், எனத்தேர்ந்தான்' .

எனவார்ந்தான் - ஆர்ந்தான் என்னபொருளெனப் புரியவில்லை.

அப்பாதுரை சொன்னது…

தேர்ந்தான் - எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அமுதன் சார். ஓசை நயம் குறையாமல் வரியின் இரண்டாம் சீருக்குப் பொருத்தமாகவும் அமைகிறது.

ஆர்ந்தான்: அடங்கினான், தெளிந்தான், முழுமையாக உணர்ந்தான் என்று அகராதி பொருள் சொல்கிறது. (உ-ம்: உளமார்ந்த, மனமார்ந்த)

உங்கள் அனுமதியுடன் 'எனத்தேர்ந்தான்' என்று மாற்றி விடுகிறேன். குட்டு பட்டாலும் இப்படிப் பட வேண்டும், நன்றி.

தமிழ் சொன்னது…

வெண்பாவில் வார்த்தை விளையாட்டு அருமை

geethasmbsvm6 சொன்னது…

தகப்பன் சாமி.