வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/12/04

வாசன் நசிகேதனை எமனுக்குத் தானமளித்தான்


5
யாகத்தில் என்னைப் பெறுவார்யார் என்றுசந்
தேகத்தில் தன்பிள்ளை நச்சரிக்க - வேகத்தில்
காலனுக்கே தானம்நீ என்றான் மடமன்னன்
பாலடங்க நீர்தெளிப்பார் போல்.

    "என்னை யார் பெறுவார்?", "யாருக்குக் கொடுப்பீர்கள் தானம்?" என்று தொடர்ந்து பலமுறை கேட்டுக்கொண்டிருந்த பிள்ளை நசிகேதனிடம், பொங்கும் பாலை அவசரமாக நீர் தெளித்து அடக்குவது போல், "உன்னை எமனுக்குத் தந்தேன்" என்றான் அறிவில்லாத அரசன்.




    பேராசைக் குடியிருக்கும் மனதில் பொறுமையோ சகிப்புத்தன்மையோ இருப்பதில்லை. எப்படியாவது நினைத்ததை அடைய வேண்டுமென்ற வேகத்துக்கு அடிமையாகிறது உள்ளம். கண்களுக்கு சுயநலக் கண்ணாடி போட்டு விடுகிறது. விளைவு? அவசர முடிவுகள். அவசரக்காரனுக்கும் புத்தி மட்டே. பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஒன்றை ஒன்று வளர்க்கும் தன்மையன. பொறுமை கோபத்தைக் குறைக்க வல்லது. சகிப்புத்தன்மை எரிச்சலையும் அவசரத்தையும் தவிர்க்க வல்லது. இரண்டையும் வளர்க்கும் உரம் எதுவென்று தெரியவில்லை.

பால் பொங்குகிறது. இறக்கி வைப்பதே உகந்தது என்று தெரிந்தும் அதைத் தணிக்கும் அவசரத்தில் தண்ணீரை அள்ளித் தெளிப்பது, பாலைக் காய்ச்சும் குறிக்கோளுக்கே முரணாவதில்லையோ? நாம் முக்கிய வேலையாக இருக்கும் நேரத்தை மட்டும் சிறு பிள்ளைகள் எப்படியோ தெரிந்து கொண்டு நம்மை அணுகி ஏதாவது கேட்டு நச்சரிப்பார்கள். அந்த நச்சரிப்பைப் பெரிது படுத்தாமல் அமைதியாகப் பிள்ளைகளின் தேவையை தீர்த்தபின் தம் வேலையைத் தொடர்வோரை விட, பிள்ளைகளைச் சற்று நேரம் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டுத் தம் வேலையைத் தொடர்வோர் அதிகம். அவர்களை விட, "அம்மாவிடம் கேள், அப்பாவிடம் கேள்" என்று திசைதிருப்பி கண நேர நிம்மதியைப் பெறுவோர் அதிகம். அவர்களையும் விட, "நான் வேலை செய்வது தெரியவில்லை?" என்று ஏச்சோ அடியோ கொடுத்தனுப்பித் தம் வேலையைத் தொடர்வோர் இன்னும் அதிகம். நம் அவசரம் நமக்கு. நம்மினும் இளையவருக்கும் தேவை உண்டு, அறிவு உண்டு என்பதை மறந்து, எரிச்சலில், அவசரத்தில் அறிவிழந்து முடிவு செய்கிறோம். பிறகு விளைவைச் சுமக்கிறோம். இந்தக் குணம் வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் நம்மைத் தொடர்ந்து வருகிறது. சில சமயம் நம் கண்ணை மூடிப் பெருந்தவறுகளைச் செய்ய வைக்கிறது.

    ன்னனின் பேதமை புரிகிறது. மகன் கேள்விகளின் பின்னே ஏதும் அறிவு இருக்கிறதோ? அண்டவாகை வேள்வியில் இம்மைச் சொத்துக்களை எல்லாம் தந்தை தானமும் பலியும் கொடுத்தாக வேண்டும். மன்னனுக்குப் பிறந்தவன் மன்னனின் சொத்தெனில், தானும் இந்த வேள்வியில் வழங்கப்பட வேண்டியவன் தானே? பெற்ற பிள்ளை என்று ஒரு வேளை வழங்காமல் போனால், வேள்வியின் முழுப்பலன் கிட்டாமல் போய்விடுமா? தந்தைக்கு வேள்வியின் முழுப்பலனும் கிடைக்க வேண்டுமே, தன்னை வழங்க மறந்து விடக் கூடாதே என்ற கலக்கம். அப்படி வழங்கினால், இன்னும் மழலை தட்டும் அதிகம் பயனில்லாத சிறுவனான தன்னை, யார் பெறுவார்கள் என்ற ஐயம். அதனால் தந்தையை அணுகி, "ஐயா, என்னை யாருக்குத் தருவீர்கள்? யார் பெறுவார்கள் என்னை?" என்று தொடர்ந்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான். இதைப் புரிந்து கொள்ளாத மன்னன், அவசரத்தனத்தில் அவசரத்தானம் செய்து விட்டான்.

அறிவற்றச் செயல்களைச் செய்யும் தந்தையின் பழக்கத்தை அறிந்த பிள்ளை (சற்று சிந்தித்தால் அண்டவாகை வேள்வியே அறிவற்ற செயல் என்பதை நசிகேதன் உணர்ந்திருந்தான் என்பது நமக்குப் புலப்படும்), தந்தையின் அவசரபுத்தியையே தனக்குச் சாதகமாக, தந்தையை நல்வழியில் செலுத்த ஒரு சாதனமாக, பயன்படுத்திக் கொண்டான். தந்தைக்குப் பொறுமை கிடையாது என்பது பிள்ளைக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால் நச்சரித்து, நினைத்ததை நடத்தியே முடித்தான் நசிகேதன் என்றும் தோன்றுகிறது.

அவசரத்தில் அறிவிழந்து வாக்குக் கொடுத்த வாசனின் நிலை என்ன?

20 கருத்துகள்:

பவள சங்கரி சொன்னது…

அருமையான பதிவுங்க......குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான பகுதி......பகிர்வுக்கு நன்றி.

துளசி கோபால் சொன்னது…

பிள்ளைகள் நச்சரிப்பு உண்மைதாங்க.

என் மகள் சின்னப்பொண்ணா இருந்தப்ப நான் எதாவது ஃபோன்காலில் மும்முரமா இருக்கும்போது நாம் வேணாடாமுன்னு முன்னே சொல்லி வச்சுருக்கும் எதாவது ஒன்னை எடுத்துக்கவான்னு கேப்பாள்.

நாமும் தோழிகளுடன் அரட்டை அடிக்கும் பிஸி(!!!???) யில் தலையை ஆட்டுவோம். அவ்ளோதான்..........

அப்போ இந்த கார்ட்லெஸ் ஃபோன் வரலை பாருங்க.:-))))))

இந்தப் பதிவு ரொம்ப எளிமையா சட் னு புரிஞ்சது.

இனிய பாராட்டுகள்.

சென்னை பித்தன் சொன்னது…

கடோபநிஷதத்தை வெண்பா வடிவில் படிக்க எளிதாக்கி அருமையான விளக்கத்துடன் கொடுத்திருக்கிறீர்கள். எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.தொடர்ந்து படிப்பேன்.

பத்மநாபன் சொன்னது…

பாலடங்க நீர் தெளித்தல் நல்ல உவமை ...நடைமுறை வாழ்க்கை உதாரணங்களும் அருமை ....

பேராசையின் தீமைக்கு பொறுமை சகிப்புத்தன்மையும் தான் தீர்வென சொன்னது சரியாக இருந்தது

அண்ட வாகையே தண்டம் என நசி புரிந்து கொண்டானோ ...

இனி தந்தைக்கு எப்படி புரிய வைப்பானோ....

ஸ்ரீராம். சொன்னது…

பிறப்பின் நோக்கமறிந்த பிள்ளை!

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கும் தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து, துளசி கோபால், சென்னை பித்தன், பத்மநாபன், ஸ்ரீராம்,...

அப்பாதுரை சொன்னது…

துளசி நீங்க பரவாயில்லை. என் முதல் பிள்ளை கிட்டே கத்துகிட்ட பொறுமையை இரண்டாவது கிட்டே காட்டுனதுனால - இப்ப பெண்ணுக்கும் பிள்ளைக்கும் இடையில சண்டைக்கு நானே காரணமாயிட்டேன் போங்க! எதுக்கெடுத்தாலும் என்னை "அவன் தான் பிடிக்கும் உனக்கு.. இல்லேன்னா prove it" என்று சொல்லி பிலேக்மெயில் வேறே!

வீட்டை விட வெளியில் தான் ரொம்ப அடிபட்டிருக்கிறேன் - அவசரமும் எரிச்சலும் என்னை நிறைய அழித்திருக்கின்றன. இன்னும் தொடருது பாருங்க - எத்தனை புஸ்தகம் படிச்சா என்ன? எத்தனை அறிவுரை கேட்டா என்ன? - no use!

அப்பாதுரை சொன்னது…

கரெக்டுங்க. குழந்தைகளின் சாமர்த்தியத்தை நானும் ரொம்ப வியந்திருக்கிறேன்.. (இதுல என்னன்னா நான் வளரும் போது இப்படி இல்லியேனு ஒரு ஆதங்கம் - எங்கம்மாவை கேட்டா வேற விதமா சொல்வாங்களோ என்னவோ? :)
>>>எதாவது ஃபோன்காலில் மும்முரமா இருக்கும்போது நாம் வேணாடாமுன்னு முன்னே சொல்லி வச்சுருக்கும்..

அப்பாதுரை சொன்னது…

அண்டவாகை - தண்டவாகை.. நல்லா இருக்கு பத்மநாபன்.. இதையும் யூஸ் பண்ணிக்கிறேன்.

சகிப்புத்தன்மை என்பது வெளிப்படுத்த வேண்டிய ஒன்று மட்டுமல்ல; உள்படுத்த வேண்டியது கூட - மீனிங் நமக்கு நாமே காட்ட வேண்டிய உணர்வு என்கிறது கடோ. பேராசை என்பதற்கு விளக்கம் சொல்லாவிட்டாலும் நிறைய கோடி காட்டியிருக்கிறார்கள் எழுதியவர்கள். இரண்டாயிரம் வருடங்கள் கழித்து உலகத்தார் என்ன நினைப்பார்கள் என்பதை புரிந்து எழுதினார்களா அல்லது அந்தக் காலத்திலும் ரெலெடிவ்லி மக்கள் மனம் ஒரே மாதிரி தான் இருந்ததா என்று தெரியவில்லை.

தேவையில்லாத ஒன்றின் மேல் ஆசைப்படுவது பேராசை என்று எளிய நெறியைச் சொல்லிவிட்டு, 'தேவையில்லாத ஒன்று' என்பதை தீர்மானிக்கும் அறிவு பொறுமை சகிப்புத்தன்மைக்குள் அடங்கியிருப்பது போல் சொல்கிறது கடோ. (உ.ம்) மாடமாளிகை நகை படாடோபம் தான் பேராசை என்று நினைத்தேன். சாதாரண பொருளாதாரச் சமன்பாடு கூட பேராசை என்கிறது கடோ. 'கடன் வாங்குவது வறுமையின் விளைவு' என்ற சாதாரண காரண-காரியம் அறிவோம். கடன் வாங்குவது வறுமையின் விளைவல்ல, பேராசையின் உந்துதல் என்கிறது கடோ. சம்பளம் உயரும், போனஸ் வரும், லாட்டரி விழும் என்று ஏதோ ஒரு புலனுக்கடங்காத சாக்கினை மனதுக்குள் விதைத்து கடன் வாங்கச் செய்கிறது பேராசை. அகலக்கால் வைக்கும் பொழுது பேராசை போல் தோன்றுவதில்லை - வைத்தபின் நிற்க முடியாமல் தடுமாறும் போது மட்டுமே உறைக்கிறது (அதுவும் சிலருக்குத் தான்!). இந்த அகலக்கால் விவகாரத்தை இன்றைக்கு எல்லா இயக்கங்களிலும் பார்க்கிறேன். (இதே ரீதியில் போனால் அதிகமாக மூச்சு விடுவது கூடப் பேராசை என்று லாஜிக் தோன்றி பயம் காட்டுகிறது - பேசாமல் துண்டு போட்டுக் கொண்டு போய்விடலாமா என்று தோன்றுகிறது :)

அப்பாதுரை சொன்னது…

துண்டும் பேராசையோ?

அப்பாதுரை சொன்னது…

குழந்தைகளுக்கு ஏன் இந்தப் புத்தகத்திலிருந்து சொல்லிக் கொடுப்பதில்லை என்று நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன் நித்திலம்-சிப்பிக்குள் முத்து. (உங்களைச் சங்கரி என்று அழைக்கலாமா?)

எனக்கு முதல் முதலாக கடோவின் அறிமுகம் ஏற்பட்டது என் தாத்தாவின் மரணத்தின் போது - பிறகு குடும்ப மற்று சுற்றத்து ஒவ்வொரு மரணத்திலும் மட்டுமே கடோ படிக்கப்பட்டது. (அதுவும் எனக்குத் தெரிந்து பிராமண மரணங்களில் மட்டுமே.) என் தாத்தாவும் அப்பாவும் மூன்று மாத இடைவெளியில் மறைந்ததால் நசிகேதன் கதையின் இரண்டாவது அறிமுகம் மிகச்சீக்கிரமே தாக்கியது. அதற்குப் பின் என் மெத்தப்படித்த மாமா ஒருவர் இதை விளக்கும் பொழுது என்னை வீட்டுக்கு வெளியே அழைத்துப் போய் விளக்கம் சொன்னார் - கடோவைப் படிப்பதே சாபக்கேடு போல்! இன்றைக்குக் கூட கடோவை வீட்டில் நிறைய பேர் வைப்பதில்லை. கீதை இருக்கும் - ஏறக்குறைய அதே செய்தி தான், ஆனால் கடோ இருக்காது!. (நசிகேதன் கதையை ப்ளாக் எழுதப்போகிறேன் என்றதும் என் வீட்டிலும் கொஞ்சம் தயங்கி (தயக்கம் என்றால் கப்சிப் மௌனம் - 'ஏண்டா இப்படி இருக்கே?' என்பது பொருள்) பிறகு, "சரி, நல்லதா ஏதாவது எழுது" என்ற ஆசியில் முடிந்தது :)

அரிச்சுவடி அளவுக்கு எளிமைப் படுத்தத் தெரிந்தவர்கள் நசிகேதன் கதையை சித்திரக்கதையாக எழுதிப் புத்தகமாக வெளியிட வேண்டும். இதைப் படித்து நல்ல எண்ணங்களைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ - படிக்கவாவது செய்வோம்! நல்ல ஐடியா சொன்னீங்க.

மோகன்ஜி சொன்னது…

உண்மை அப்பாஜி! நசிகேதன் கதை பலவேறு காலநிலைகளிலும் அனைவரையும் கவர்ந்த ஒன்று. குறிப்பாக விவேகானந்தருக்கு கடோவில் ஒரு அப்செஷன் உண்டு. அவர் மேற்கத்திய அன்பர்களுக்கு வேதாந்த விளக்கங்கள் அளித்தபோது நசிகேதன் கதைமூலம் எளிமைப் படுத்தி இருக்கிறார்.

யமன் சம்பந்தப்பட்ட படியினால் கடோவையும், மரணத்துக்குப் பின் என்ன என்று கூறும் கருட புராணமும் வீடுகளில் இருப்பதில்லை என்பதற்கு மரணத்தின்பால் கொண்ட பயம் தானே காரணம்?
திருமழிசையாழ்வார் சொன்னபடி,
' இன்றுசாதல் நின்றுசாதல்
அன்றியாரும் வையகத்து
ஒன்றிநின்று வாழ்தலின்மை..'
என்று நிலையாமையை உணர்ந்தால்
நீங்கள் சொன்ன பேராசையின் தாக்கம் ஓரளவு குறையலாமோ என்னவோ.

செத்தபின் உனக்கே மகனாய்ப் பிறப்பேன் என்று நம் பிள்ளைகளுக்கோ,பேரப் பிள்ளைகளுக்கோ சொல்லுவதால், அப்படி பிறக்கப் போகும் வாழ்க்கைக்கே நவநிதியமும் தேடிக் குவிக்கிறோமோ என்னவோ?
நசிகேதன் அப்பனுக்கோ சொர்க்க ஆசை, நமக்கோ மறுருபிறப்புக்கான முஸ்தீபு!

சிவகுமாரன் சொன்னது…

"பாலடங்க நீர்தெளிப்பார் போல்"
உண்மை தாங்க. இப்போது கூட பிள்ளை ஏதோ கேட்க வர, விரட்டிவிட்டேன். வாழ்வியலின் சின்ன சின்ன சூட்சுமங்களை எளிமையாக விளக்குகிறீர்கள். பிரமிப்போடு தொடர்கிறேன்.

meenakshi சொன்னது…

இந்த வெண்பா மிகவும் அருமையாக இருக்கிறது. திரும்ப திரும்ப படித்து ரசித்தேன்.
விளக்கம் எளிமையாய் அருமையாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள்!

Aathira mullai சொன்னது…

முதல்ல எனனை நீங்க மன்னிக்கனும் அப்பா ஜி. இத்தனை நாட்கள் இந்தப் பகுதியை நான் படிக்காமல் இருந்து விட்டேன். சமுதாயத்துக்குப் பயன் தரக்கூடிய பெரிய பணியைத் தொடங்கி உள்ளீர்கள்.. வெற்றி பெற வாழ்த்துக்கள். இது வரை வந்துள்ள ஐந்து வெண்பாக்களும் சீரிய நன்பா.. சொல்ல வார்த்தைகளின்றி மெளனமாக..

அப்பாதுரை சொன்னது…

வாங்க ஆதிரா... வந்ததே பேறு. நான் தான் நன்றி சொல்லணும்.

agaramamuthan சொன்னது…

மிக அழகிய வெண்பா. வாழ்த்துக்கள் அப்பாதுரையாரே!

பாலடங்க நீர்தெளித்தாற் போல்! மிகச் சிறந்த பொருத்தமான, அழகான உவமை. வாழ்க. வாழ்க. எனது வெண்பா எழுதலாம் வாங்க வலையுடன் தங்களின் இவ்வலையை இணைத்துவிடுகின்றேன்.(தங்களின் ஏப்போடு) நன்றிகள்.

அப்பாதுரை சொன்னது…

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அமுதன் ஐயா. ஆசிரியர் என்ற முறையில் நீங்கள் வந்ததே சிறப்பு - இந்த வலையை உங்கள் வலையில் இணைத்ததற்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை (ஒழுங்காக எழுதுவதிலோ?)

தமிழ் சொன்னது…

/பாலடங்க நீர்தெளிப்பார் போல்.

/

நல்ல உவமை

geethasmbsvm6 சொன்னது…

நாம் முக்கிய வேலையாக இருக்கும் நேரத்தை மட்டும் சிறு பிள்ளைகள் எப்படியோ தெரிந்து கொண்டு நம்மை அணுகி ஏதாவது கேட்டு நச்சரிப்பார்கள். அந்த நச்சரிப்பைப் பெரிது படுத்தாமல் அமைதியாகப் பிள்ளைகளின் தேவையை தீர்த்தபின் தம் வேலையைத் தொடர்வோரை விட, பிள்ளைகளைச் சற்று நேரம் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டுத் தம் வேலையைத் தொடர்வோர் அதிகம். அவர்களை விட, "அம்மாவிடம் கேள், அப்பாவிடம் கேள்" என்று திசைதிருப்பி கண நேர நிம்மதியைப் பெறுவோர் அதிகம். அவர்களையும் விட, "நான் வேலை செய்வது தெரியவில்லை?" என்று ஏச்சோ அடியோ கொடுத்தனுப்பித் தம் வேலையைத் தொடர்வோர் இன்னும் அதிகம். நம் அவசரம் நமக்கு. நம்மினும் இளையவருக்கும் தேவை உண்டு, அறிவு உண்டு என்பதை மறந்து, எரிச்சலில், அவசரத்தில் அறிவிழந்து முடிவு செய்கிறோம். பிறகு விளைவைச் சுமக்கிறோம். இந்தக் குணம் வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் நம்மைத் தொடர்ந்து வருகிறது. சில சமயம் நம் கண்ணை மூடிப் பெருந்தவறுகளைச் செய்ய வைக்கிறது.//

எவ்வளவு உண்மை! எல்லா வீடுகளிலும் இதைப் பார்க்க முடியும். :( எங்க வீட்டிலும் பொண்ணுக்கும், பிள்ளைக்கும் இப்போவும், யார் உசத்தி என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. :))))))))

பாலில் நீர் தெளிக்கும் உவமை அருமை. சட்டுனு எளிமையாகப் புரிகிறாப் போல் இருக்கு.